Tuesday, March 6, 2018

குணாகுணிபேத பங்கம்குணாகுணிபேத பங்கம் என்பது ஒரு சொல்லுக்கும் அச்சொல் சுட்டும் பொருளுக்கும் வேறுபாடில்லை என்று சுருக்கமாகச் சொல்லலாம். அதாவது தீயும் தீ என்ற சொல்லும் சமம்தான். லா.ச.ரா தீ என்றால் வாய் சுடவேண்டும் என்று சொன்னது இதைவைத்துத்தான். அவருடைய பின்னணியில் இருந்து அவருக்குக் கிடைத்த வரி இது. [அந்தப்பின்னணி தெரியாமல் அதை புளகாங்கிதத்துடன் அணுகுவார்கள் சிலர்] குணாகுணிபேதபங்கம் தான் மீமாசத்தின் சுருதிவாதத்துக்கே அடிப்படை.


சாரங்கன்

உவமைகள்முட்டை உடைத்தெழுந்த வாத்துக்குஞ்சுகள் அன்னையைத் தொடர்வதுபோல, அகிடிருக்கும் இடம் பிறந்ததுமே கன்றுக்குத் தெரிவதுபோல குருதியில் ஊறிப் படியவேண்டும் வேதம்

பறவைச்சிறகில் காற்றும் வானமும் என [வேதத்தை உள்ளம் உணர்வது]

இங்கு திரண்டுள்ள நாங்கள் அனைவரும் மீன்கள், எங்களை கொண்டுசெல்லும் கங்கைப்பெருக்கே வேதவேள்வி.

[வேள்வி என்பது ] மலர்க்காடு புக்கு தேன்வெளி கண்டு மீண்டு கூடுவரும் தேனீ தன்னவர்க்கு அறிவிக்க ஆடிப்பாடும் நடனம்

இந்த எரிகுளம் சாவின் வாய். நம்மை அது உண்க! இந்த எரிகுளம் அன்னைக் கருவழி. நம்மை அது ஈன்றெடுக்கட்டும்.

பல்லாயிரம் சிதலெறும்புகள் கூடி பலநூறாண்டுகளாக எழுப்பும் புற்றுக்கூடு- வேள்வி என்பது

வேள்விசெய்பவர்கள்-- நாம் வேரில் நீரூற்றுகிறோம். பல்லாண்டுகாலம் அதை செய்தபின்னரே கனியின் சுவைபெறுகிறோம்

 ஒர் உரையில் கௌதமசிரகாரி சொல்லும் உவமைகள் இவை. இந்த உவமைகளின் தொகுப்பாக அவருடைய ஞானத்தை எளிதில்புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். இவை தனித்தனியான கவிதைகளாகவும் நின்றிருக்கிறது


லட்சுமணன்

வடிவம்ஜெ.

வேதசபையில் கிருஷ்ணன் பேசத்தொடங்கிய இடம் எது என்று கௌதமசிரகாரி பேசி முடித்தபிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் வேதத்தின் அமைப்பு ஒலி எதையுமே மாற்றக்கூடாது என்கிறார். வேதங்களுக்கிடையே வேறுபாடு உண்டு என்றால் வேதத்திற்கு தூய பகுதி ஒன்று உண்டு என்றுதானே அர்த்தம்? அதை வைத்து தூய்மை குறைந்த பகுதியை மதிப்பிடுவோம் என்றால் அதையே அடிப்படையாக வைத்து வேதத்தை மாற்றினாலென்ன என்று கிருஷ்ணன் வாதிடுகிறார். அதை உணர்ந்து அவர்களும் தங்கள் வாதங்களை வைத்து முடிக்கிறார்கள். அந்த வாதங்களை அவர்களின் உவமைகளின் வழியாகவே கிருஷ்ணன் முறியடிக்கிறார். எல்லா அத்தியாயங்களையும் வாசித்து முடித்தபோது இந்த அத்தியாயம் எப்படி சீராகத் தொடங்கி சரியான வடிவத்தில் முடிவடைகிறது என்பது ஆச்சரியப்படுத்தியது


சுவாமி

யோகியின் சடைஜெ

வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் உவமைகளை நினைவில்கொள்ளுதல் பெரிய வேலை. இது கிளாஸிக்குகளைப்போல அவ்வப்போது எடுத்து ஏதேனும் ஒரு பக்கத்தைப்புரட்டினாலும் ஒரு அரிய தெறிப்பு கண்ணில்படுவதுபோல அமைக்கப்பட்டது என்பது தெரிகிறது. இன்று அப்படி சென்ற இதழ்களைப்புரட்டியபோது கண்ணில்பட்ட வரி இது.  “கங்கை நிலத்திறங்கும்போது. மண்ணில் எதையும் விழையாத யோகியின் வறண்ட விரிசடையே அதை ஏந்தியது. அது உண்டதுபோக எஞ்சியதே உலகுக்கு அளிக்கப்பட்ட கங்கை”  மிகவும் தெரிந்த கதை. ஆனால் அரிய ஒரு கவித்துவ உவமையாக அது மாறிவிட்டிருக்கிறது. யோகி என்றால் யார் என்பதற்கான சரியான சான்று இந்தக்கதையே என நினைக்கிறேன்


சாரங்கன்

சப்தவாதம்ஜெ

கௌதம சிரகாரி மீமாம்சைக்கு ஆதரவாகச் சொல்லும் வாதங்கள் தொன்மையானவை. நவீன மொழியில் உங்களால் சொல்லப்பட்டிருந்தாலும் அவர்கள் ஏறத்தாழ இதைத்தான் சொல்லியிருப்பார்களென்று ஊகிக்கலாம். அவர்களுடையதை சப்தவாதம் என்றும் பிரமாணவாதம் என்றும் சொல்வார்கள். அதாவது வானிலிருந்து வந்த சொல்லை மாற்றக்கூடாது, அப்படியே நம்பவேண்டும். அதை முதற்சொல்லாக எடுத்துக்கொண்டு அப்படியே கடைப்பிடிக்கவேண்டும். அதுமட்டுமே மனிதர்களின் கடமை. அதை விரிவாக கவிதைச்சாயலுடன் சிரகாரி சொல்கிறார். இது பழமையானதாகத் தெரியலாம். ஆனால் வேதவேள்விகளைச் சொல்பவர்கள் இன்றும் இதையே சொல்கிறார்கள் இன்றைய ஞானம் முழுக்க அன்றே நூல்களில் உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படை இதுதான். ஆனால் மிகச்சரியாக இது இஸ்லாமிய மதநம்பிக்கைக்குத்தான் பொருந்தும் என்று தெரிகிறது. எல்லாமே வேதத்தில் உள்ளது என்று இச்லாமியரும் வேதவாதிகளும் ஒரேகுரலில் சொல்கிறார்கள் என்பது இதனால்தான்


ராமச்சந்திரன்

Monday, March 5, 2018

உவமைகள்ஜெ,

கடுவெளி மழையெனக் கனிந்து மண்மேல் இறங்குவதுபோல பிரம்மம் சொல்லென்றாகியது

வேதமெனும் அனலின் அனல்மை என்பது பிரம்மமே

ஆற்றில் மாசுசேர்க்கலாகாது. ஆனால் வயலில் மாசு உரமென்றாகும்லௌகீகத்துக்கு வேதம் ஓதலாமா

எக்கல்லும் தெய்வச்சிலையே. எனினும் கல் ஒன்றைச் செதுக்கி கருவறையில் பீடத்தில் அமர்த்துகிறோம் –எல்லா சொல்லும் வேதம் என்றால் ஏன் தனியாக வேதம்?

புரவியை நாம் பழக்குகிறோம், புரவி நம்மை இட்டுச்செல்கிறதுவேதம் பயில்வது ஏன்?

மலரும் கனியும் சூடுதலே வேர்முதல் இலைவரை செடியின் இலக்கு. பிரம்மத்தை வேட்பதனால்தான் அதர்வம் வேதமாகிறது

புகையென மணமென. உண்ட அனைத்தும் முற்றிலும் அனலென்றான தழலே ரிக்

கௌதம சிரகாரி சொல்லும் இந்த உவமைகளைத் தொகுத்துக்கொண்டு அவர் சொல்ல வருவது என்ன என்று புரிந்துகொள்ள முயன்றேன். தனித்தனியான வரிகளாக இருந்தாலும் ஒரே நீண்ட கவிதையாக இவற்றை ஆக்கிக்கொள்ளமுடியும் என தோன்றியது


லட்சுமணன்