Friday, July 18, 2014

பாலையும் புல்வெளியும்

ஜெ

மழைப்பாடல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சிறிய ஆறு பெரிய நதியாக மாறுவதுபோல நூற்றுக்கணக்கான ஓடைகள் அதிலே வந்துசேர்வதுபோல தோன்றியது. எத்தனை உள்வட்டங்கள் என்று நினைத்துக்கொண்டேன். நான் வேலைசெய்யும் இடத்தில் எனக்கு நல்ல நேரம் உண்டு. ஆதலினால் நான் நிறைய படிக்கமுடியும். ஆனால் வெண்முரசு வந்தபின்பு வாசிப்பதே ரொம்பக் குறைந்து அதிலேயே தேங்கிவிட்டேன்

பலவரிகளை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். சொல்லப்படாத நுணுக்கமான மன உணர்ச்சிகளைத்தான் இந்நாவலின் பலம் என்று சொல்வேன். டால்ஸ்தாய்க்கு சமானமான நுட்பம். குந்திக்கும் அவள் சின்னம்மாவுக்குமான சொல்லப்படாத ஊடாட்டம். குந்திக்கும் காந்தாரிக்குமான உறவு. குந்தியிடம் காந்தாரி அரசசபைக்குபோய் பார்த்துவிட்டு வா என்று சொல்லும்போது அவள் நிமிர்ந்துபோகும் விதம் , அப்போது காந்தார அரசிகளின் கைவளையல்கள் போடக்கூடிய சத்தமே அவர்களின் மனசைக் காட்டிவிடுவது- எதைச்சொல்ல

விதுரனுடைய மனஆழத்தை தொட்டுத்தொட்டுச்செல்லக்கூடிய கதை ஒவ்வொருமுறையும் ஒரு பெரிய படபடப்பைத் தருகிறது. மூச்சுத்திணறவைக்கிற இடம் என்றால் பிள்ளைகள் பிறப்பதுதான். ஒவ்வொரு கர்ப்பமும் ஒவ்வொருமாதிரி. ஒவ்வொருமாதிரியான உணர்ச்சிகள். ஒவ்வொரு மாதிரியான கனவுகள். எதிர்பாராத வகையான பிறப்புகள். சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனைமுறை சொல்வதென்றே தெரியவில்லை.

அதோடு எனக்கு ஒரு எண்ணம் வந்தது. இந்த நாவலே வரண்ட பாலைவனநிலத்துக்கும் [காந்தாரம்] மழைபெய்துகொண்டே இருக்கும் ஆயர்நிலத்துக்கும் [குந்திநாடு]க்கான போர் தான் என்று. இரு நிலங்களையும் மிகவிரிவாகவே சொல்லியிருக்கிறீர்கள். இவ்வளவு விரிவாக ஏன் சொல்லியிருக்கிறீர்கள் என்று முதலில் தோன்றியது. கடைசியில் இந்த இரண்டு நிலங்கள்தானே எல்லாமே என்று தோன்றியது.

சண்முகநாதன்



அன்புள்ள சண்முகநாதன்

நன்றி. முக்கியமான அவதானிப்பு

ஒரு வகையில் இந்திய வரலாறென்பதேகூட பாலைக்கும் புல்வெளிக்குமான போர்தான்

ஜெ