Wednesday, July 9, 2014

பெண்களின் இரவு

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

நல்ல சிந்தனைகள் தரும் ஒரு உற்சாகம் அந்த எழுத்திற்கு உரிய உயிர்ப்பை  அறிய வைக்கின்றது. ஆனால் உண்மைகள் எழுத்தில் வெளிப்படும் தருணங்கள் வாசகன் எழுத்து என்ற இடைவெளியை அறுத்தெரிந்து வாசகனை எழுத்தாக்கி விடுகின்றது.
நம்மை உடைப்பவர்கள் என்ற தங்களின் அந்தக்கட்டுரையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் என்னை உடைத்து போவதை அறிந்தேன். இந்த கட்டுரையை எப்படி எழுதினீர்கள் என்று சற்று நேரம் சிந்தித்தேன். பின்பு இவ்வாறு சமாதானம் செய்துக்கொண்டேன். அதில் உள்ள உண்மை உங்களின் கையைப் பயன்படுத்திக்கொண்டது. அந்த கட்டுரையைப் படிக்கும் எந்த மனிதனும் அதைத் தாண்டி போய்விடமுடியாதப்படி உண்மைகள் அடைத்துக்கொண்டு நிற்பதுதான் அந்த கட்டுரையின் சிறப்பு என்று நினைக்கின்றேன்.
நயத்தக்கோர் (பல ஆண்டுக்கு முன்) கட்டுரைப்படித்தபோது ஏற்பட்ட உணர்வெழிச்சி பீடித்தில் நானே ஒரு சிலைபோல ஏறி அமர்ந்ததுபோல் இருந்தது. உயிர் உள்ள சிலை.

இன்று எழுத வந்தது வெண்முரசு மழைப்பாடல்-60ம் பகுதிப்பற்றி.
எட்டு ஒன்பது வயது இருக்கும்போது ஆடிப்பெருக்கு அன்று வாய்க்காலுக்கு வயதுக்கு வந்த அக்காள்கள் எல்லாம் ஆடிப்பெருக்கு படைக்கவருவார்கள். கையில் பூக்கூடையும், பழத்தாம்பாலமும் அதுவே ஒரு பூந்தோட்டம்போலவே. அந்த வயதில் ஒரு சுதந்திரம் உண்டு. அக்காக்கள்கூடவும் இருக்கலாம் இவரின் சந்தோஷம் இருவரின் சிரிப்பு நம்கூடவே வரும் தூங்கும்போதுக்கூட தூக்கத்தில் சிரிக்கவைத்தப்படி.

பூப்பெய்தும் வரை ஊஞ்சல் ஆடி, சில்லிக்கோடு தாண்டி, கழற்காய் விளையாண்டு, வண்ணத்துப்பூச்சிப்பிடித்து, காடுமேய்த்து, ஆடுமாடுகளுக்கு புல் அறக்கவந்து அல்லிப்பூப்பறித்து விளையாண்ட அவர்கள் பூப்பெய்த அன்று வீட்டுக்குள் அமர்ந்தவர்கள் பாதச்சுவடுகளைக்கூட பின் பார்க்க முடியாது. 18ம்பெருக்கு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நடந்து நடந்து வந்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் ஆற்றம் கரைக்கு வர மாட்டார்கள். கூடவரும் எங்களுக்கு இவங்களுக்கு என்ன ஆச்சி என்றுத்தோன்றும் என்ன ஆச்சி என்று அப்போது தெரியவில்லை. தெரிந்துக்கொண்ட நாளில் திகைப்பை தவிர வேறு ஒன்று இல்லை மனம் வெறுமையாக ஆனதுபோல் இருந்தது. அந்த நினைவுகள் எப்பவும் அந்த வாய்க்கால் துரையை கடக்கும்போதும் பார்க்கும்போது எற்படும் அதனாலேயே எப்பவாவது அங்குப்போனால் அதை எதுவுமே இங்கு நடக்கவில்லை என்பதுபோல் தாண்டிப்போவேன். வீட்டில் இருந்ததைவிட அந்த படித்துறையில் குளித்த நேரம் அதிகம். பெண்கள் அனைவரும் படிக்கும் இந்த காலத்தில் அதுமாதரியான ஒரு அனுபவம் பிள்ளைகளுக்கு இருக்காது.
விழவுக்காலம் அவர்களுக்கு அளிப்பது இரவைத்தான் என குந்தி எண்ணிக்கொண்டாள்.
இந்த வரியில் அந்த காட்சி விரிந்து நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கியது. இந்த அனுபவங்களை இரவில் சாமி தூக்கும் ஊரிலும், இராமநாடகம். ஹரிசந்திரநாடகம் நடக்கும் நாட்களிலும் பார்த்திருக்கிறேன். அவர்கள் வருவது நடகம் பார்க்க இல்லை இரவை கொண்டாடுவதற்கு. அந்த இரவில் தங்களின் காணடிந்த கனவுகளை கண்டெடுப்பதற்கு. மகிழ்ச்சியைப்பற்றி நீங்கள் விளக்கிப்போகும் சொற்களின் உண்மைதான் இன்று இந்த இரண்டு பதிவுகளின் வழியாக உங்களுக்கு எழுதத்தூண்டியது.

எல்லோருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் ஆனால் அந்த மகிழ்ச்சி எந்த மகிழ்ச்சி என்பதில் ஒரு மாறுபாடு இருந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு மகிழ்ச்சியைத் தின்று இன்னொரு மகிழ்ச்சி பிறக்கின்றது என்றும் நினைத்துக்கொள்கின்றேன். எண்ணங்கள்போல மகிழ்ச்சியும் உருண்டுக்கொண்டே இருக்கிறது.
மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன
நன்றி
வாழ்க வளமுடன். 

ராமராஜன் மாணிக்கவேல்