Tuesday, September 23, 2014

நெஞ்சில் அமர்ந்த கால்

அன்புள்ள ஜெ

நீலம் 34 நிறைய கேள்விகளை எழுப்பியது ஒரு கனவு கண்டு விழித்துக்கொண்டு அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதுபோல இருந்தது. அதைப்பற்றிய கடிதங்களை வாசித்தபோது இன்னும் எண்ணங்கள் கூடிவந்தன. கிருஷ்ணன் தெய்வம் .ராதை மனிதப்பெண். பெண் ஆணின் தலையிலும் மார்பிலும் உதைப்பதுபோல நம்முடைய மரபில் உள்ளதா? இல்லையென்றால் இன்றைக்கு உள்ள வாழ்க்கையை வைத்து இப்படி எழுதினீர்களா?

சங்கர நாராயணன்


அன்புள்ள சஙகர நாராயணன்,

நீலம் புனைவின் மொழியிலும் கவிதையின் மொழியிலும் பேசுகிறது. கவிதை என்பது ஒருபோதும் ‘புத்தம்புதிய விஷயத்தைச் சொல்லாது. அது எந்த அளவில் சமகால விஷயங்களைச் சொன்னாலும் ஆழத்தில் விதையாக பழமை யான மூலங்கள் இருக்கும். கவிதை படிமங்களை பயன்படுத்துகிறது [இமேஜஸ்] அந்த படிமங்களின் மூலவடிவமாக இருப்பது ஆழ்படிமங்கள் [ஆர்க்கிடைப்] அவை ஒரு பண்பாட்டால் பலகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக திரட்டி எடுக்கப்பட்டவையாக இருக்கும். நாம் அனைவரின் மனதுக்குள்ளும் அவை உறைந்திருக்கும்

ராதை கண்ணனின் மார்பில் கால்வைக்கும் இடத்தில் அவளை காளியாகவே உருவகம் செய்கிறது நீலம். அந்தப் ஆழ்படிமம் ஆயிரம் வருடமாகவே நம்முடைய பண்பாட்டில் உள்ளது. அதற்கு பெரிய அளவில் யோகமரபு சார்ந்த் அர்த்தங்கள் உண்டு. பெண்மை ஒரு ஆற்றல். ஆண்மை இன்னொரு ஆற்றல். சக்தி சிவம். சக்தி சிவத்தை வென்றுசெல்லும் ஒரு தருணம். சக்திக்கொந்தளிப்பு என்று சொல்லலாம்

ஜெ