Tuesday, September 30, 2014

பாலையில் அலைதல்




நீலம் எழுதிய மனநிலையைப்பற்றி எழுதியிருந்தீர்கள். [நீலம் மலர்ந்த கதை] என் ஆச்சரியம் என்னவென்றால் ராதை கிருஷ்ணனை விட்டு பிரிந்து தனித்து இருக்கும் அந்த மனநிலை [புரோஷிதபர்த்ருகை] என் மனதிலும் அதே நிலையைத்தான் ஏற்படுத்தியது. அதைவாசித்தது முதல் கைகால்கள் எல்லாம் கனமாகி விட்டதுபோல இருந்தது. எதையுமே செய்யமுடியவில்லை. 

என்னைமீறி அதிலே வரும் சில வரிகளைத்தான் சொல்லிக்கொண்டே இருந்தேன்.காத்திருத்தல் என்பது கணம்தோறும் வாழ்தல். கைவிடப்படுதலோ கணம்தோறும் இறத்தல்  என்பது நான் டைரியில் குறித்துப்போட்ட வரி ஆனால்  கருவண்ணா, அறிவாயா? என்றுதான் நூற்றுக்கணக்கான முறை சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன இது பைத்தியம் மாதிரி சொல்லிக்கொண்டு நன்றாக இல்லையே என்று நானே சொல்லிக்கொண்டேனே ஒழிய சொல்வ்தை தடுக்கமுடியவில்லை

அந்த அத்தியாயத்தின் சிறந்த வரி  வாராதிருத்தலாகுமோ? என் விழியுதிர்க்கும் வெய்யநீர் பாராதிருக்கலாகுமோ? இதுமுன் இப்புவியில் நேராதிருந்த கதையிதுவோ? யாராயிருந்தேன் அன்றெல்லாம்? என் குரல் தேராதிருக்கும் உன் செவிக்கே சொல்லூற்றி நிறைக்கிறேன். உன் நினைவிலொரு பேராயிருக்கும் பேறடைந்தேன் அல்லேன்.  எத்தனையோ முறை வாசித்த வரி. வாரதிருக்கலாகுமோ என்பதை பல்லவி மாதிரி வைத்துக்கொண்டு பாட்டாகவே பாடுவேன். ஆனால் அந்த வரி கொஞ்சம் கூட நினைவில் நிற்கவே இல்லை. கருவண்ணா அறிவாயா என்ற வரிதான் நினைவிலே ஓடிக்கொண்டே இருந்த்து. ஏன் என்றே தெரியவில்லை

அந்த அத்தியாயத்தை வாசித்த நாட்களில் எப்போதுமே தலைவலி இருந்தது.மூச்சு திணறுவதுபோல இருந்த்து. ஆனால் கொஞ்சநாள் கழித்து வாராதிருக்கலாகுமோ என்ற வரி நினைவில் திரும்பத்திரும்ப வந்த்து. எங்கே வாசித்த்து என்றே நினைவுக்கு வரவில்லை. தேடித்தேடிப்பார்த்துதான் கண்டுபிடித்தேன். அந்த இரண்டு அத்தியாயங்களையும் அப்படியே மறந்துவிட்டேன். கெட்டவிஷயங்களை மறப்பதுபோல. அப்படிப்பட்ட ஒரு மனக்கஷ்ட்ட்த்தை அவை தந்தன. பின்னர் நினைக்கும்போதுகூட பகீரென்றது இவ்வளவுக்கும் அதிலே பெரியதாக ஒரு சம்பவமும் இல்லை. வெறும் உணர்ச்சிகள்தான் இருந்தன. வெறும் வார்த்தைகளே அந்த உணர்ச்சிவேகத்தை அளித்தன. இதை இதற்குமேலாக எப்படிச் சொல்ல என்ற் தெரியவில்லை.