Thursday, October 30, 2014

பிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே

அன்பு ஜெயமோகன்,

          புறத்தே நிகழும் சம்பவங்கள் அக்கணத்திலேயே கரைந்துவிடுகின்றன. ஆனால், அவை அகத்தில் உண்டாக்கும் நினைவுகளே திகிலூட்டுகின்றன. போர்க்காட்சியை பீமன் எளிதில் எதிர்கொள்கிறான். தருமானாலோ அவ்வாறு அக்காட்சியைக் கடந்துவிட முடிவதில்லை. கண்முன்னே நிகழ்வுகள் இல்லாமல் ஆனபின்னும் அந்நிகழ்வுகளின் பிம்பங்களால் தருமன் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவனின் இயல்பே அதுதான். அதனால்தான் பீமனிடம் அறத்தைப் பற்றிச் சொல்கிறான். பீமனோ களத்தில் நெறியென்று எதுவுமில்லை என எளிதில் தருமரை எதிர்கொண்டுவிடுகிறான். கூடவே நாம் வெறும் விலங்குகளே என்றும் சொல்கிறான். அதுகாறும் மானுடப்பரப்பாக மையம் கொண்டிருந்த உரையாடல் பிரபஞ்சப்பரப்புக்கு விரியும் நேர்த்தியான தருணம் அது. நம்மை மானுடர் என்றும், பிற உயிர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவர் என்றும் நம்பிக்கொண்டிருந்த அகங்காரத்தின் மீது தொடுக்கப்பட்ட சொற்கணை அது. மானுட உலகில் மனிதன் மனிதனாக இருக்கலாம். பிரபஞ்சத்திலோ அவன் பிற உயிர்களைப்போன்ற விலங்கே. களத்தில் நெறியை முன்வைக்கும் மானுடம் அதைப் பின்பற்ற முடியாமல் பின்வாங்குதல் முரணன்று. அதுவே பிரபஞ்ச இயல்பு. நாம் ஒழுங்கற்றிருக்கும் அமைப்பை ஒழுங்குபடுத்தப் பார்க்கிறோம்.  அலைபாயும் மனது அமைதியை விரும்புவது இயல்பு என்றாலும், மனதின் இயல்பு அலைபாய்வதே. எளிமையாகச் சொல்வதாயின் அலைபாய்வதும், அமைதியை நாடுவதும் என்றிருப்பதே மனதின் முழுமை. நாம் தருமனாக இருக்க விரும்பினாலும் அப்படியே இருந்து விட முடியாது. தருமனின் கெஞ்சலே அதற்கு சான்று. நமக்குள் தருமன், பீமன், அர்ச்சுனன், துரோணர் என எல்லோரும் இருக்கின்றனர். அவர்கள் நமக்கு ஒழுங்கற்றிருக்கும் நம்மை அடையாளம் காட்டியபடியே இருக்கின்றனர். கூடவே, நாம் கற்பனை செய்திருக்கும்படியான மானுடவாழ்வைக் கேள்விக்குள்ளாக்கியபடியும் இருக்கின்றனர். முழுமையை ஒழுங்கு என நம்புகிறோம். அங்குதான் தவறு நேர்ந்துவிடுகிறது. ஒழுங்கும், ஒழுங்கின்மையும் இணைந்த்தே முழுமை.