Wednesday, October 29, 2014

வண்ணக்கடல்-கங்கை-ராமராஜன் மாணிக்கவேல்


வண்ணக்கடல்-42


மாபெரும் கங்கை, இதில் குதித்துவிடுவேன், குளித்து கரையேறிவிட்டேன் என்றெல்லாம் என்னால் சொல்லமுடியாது.கரையை நெருங்க நெருங்க மண்ணிலேயே காலுக்கும்கீழே சுழிப்பு தோன்றி மூச்சுத்திணற வைக்கின்றது.
கல்வி கரையிலா கற்பவர் நாள்சில, சில நாளிலும் சில நாழிகை, சில நாழிகையிலும் சில வரிகள் சில வரிகளிலும் சிலசொற்கள் சில சொற்களிலும் புரிந்தது சில, புரிந்ததிலும் தங்கியது சில, மொத்தத்தில் நான் ஒரு சல்லடை. தானியங்கள் வழிந்தோட குப்பைகளை ஏந்தி நிற்கின்றேன்.
எல்லாவற்றுக்கும் குறுக்குவழி காட்டும் மனம், “எழுதியவன் ஏட்டக்கெடுத்தான், பாடியவன் பாட்டக்கெடுத்தான், சும்மா விட்டுவிட்டுப்போவியா” என்கின்றது.


“எல்லா குறுக்குவழியும், நேர்வழியைவிட நீளமானவை” என்பார் வே.இறையன்பு.நேர்வழியிலும் போகாமல், குறுக்குவழியிலும்போகாமல் மனிதனை தவிக்கவிடும் மனிதமனம்தான் எத்தனை மயக்கம் நிறைந்தது.
http://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog


மதி மயக்கதை மதியாக நினைத்து இன்பமென்று ஏமாந்து இழிபிறப்பாகும் மானிட வாழ்வில் எத்தனை படித்தும் பெரும் ஞானம் ஒரு துமி என்றுக்காட்டிப்போகும் ஞானம் அற்புதம்.மண்கூட இந்த மண்ணில் மண்ணாக இருக்க ஒரு தகுதி இருக்கின்றது. மனிதனுக்கு?.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்-இத்தனைப்பிறப்பு பிறந்து இளைத்தேன் என்பதை அறியும் மாணிக்கவாசகரே நான் ஒன்றும் இல்லை அறியும்போது நான் மட்டும் மனிதனாகியும் ஏதும் கற்காமல் கற்றவன் என்றும் மனிதன் என்றும் எண்ணி எண்ணி இரும்பூந்து இருப்பதும், எல்லாம் அறிந்து இருக்கிறேன் என்று நினைப்பதும்தான் பெரும் அஞ்ஞானம். நமக்கு இருட்டுதான் சுகமான வெளிச்சமாக தெரிவது திரு.ஜெ காட்டும் நாகங்கள் செய்யும் சதிதான்.

கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்- என்ற திருக்குறளுக்கு வாழும் சாட்சியாய் படைக்கப்படும் அர்ஜுனன் அகத்தியர் குலத்தை சேர்ந்தவன் ஆவதும், அகத்தியர் குலத்தவன் என்பதற்கும்  வேறு என்ன காட்சி வேண்டும் “அவரது பாதங்கள் பதிந்துசென்ற அந்த ஈரமண் அவன் அகமாக இருந்தது. ஒவ்வொரு பாதச்சுவடையும் அவன் அகம் பணிந்தெழுந்து பணிந்தெழுந்து அவரைத் தொடர்ந்து சென்றது”

நல்ல சீடனுக்காக ஏங்கும் குருவும், நல்ல குருவுக்காக ஏங்கம் சீடனும் சந்திக்கும் தருணத்தில் சிவசக்தி சங்கமம் நடக்கிறது.சீடன் தூக்கத்தை இழக்கிறான், குரு தன்னை மறந்து தூங்குகின்றார்.

சிவன் கோவிலில் கல்லால மரத்தில் அமர்ந்திருக்கும் தென்முக சாமியும், அவருக்குப் பின்னால் மகிடன் தலைமேல் ஆயுதம் ஏந்தி நிற்கும் துர்க்கையும் குருவும் சீடனுமா?

குருவை தெய்வமாகக் கண்டுக்கொண்டவன் கற்றுக்கொள்கின்றான் என்றுதான் நினைக்கின்றோம் ஆனால் விடுதலை அடைகின்றான்.

அர்ஜுனன் மாதவை, பிதாவை, அனலை, ஆன்மாவை குருவாகக்கண்டுக்கொண்டானா?தெரியவில்லை ஆனால் ஆசிரியரை குருவாகக்கண்டு கொண்டான் அதுவே அவனுக்கு அனைத்தையும் தந்துவிடும்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியுங
கல்லா டத்துக் கலந்தினி தருளி


நல்லா ளோடு நயப்புற வெய்தியும்-மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தி திருவகவல்