Sunday, October 19, 2014

கற்பனாவாதம் என்பது...



அன்புள்ள ஜெமோ

இப்போதுதான் நான் நீலம் வாசித்தேன். ஸாரி நான் அதை தொடராக வாசிக்கவில்லை. பயணம். ஆனால் அதுகாரணம் என்று சொல்லமாட்டேன். அதை வாசிக்க முடியவில்லை. ஏர்ப்போட்டில் அமர்ந்து வாசிக்கவேண்டியது அல்ல அது. நான் ஊருக்குவந்தபின்னர் ஆர அமர உட்காந்து வாசித்தேன். மிகச்சிறப்பான ஒரு அனுபவம்

பல வரிகள மனதுக்குள் உருவிட்டுக்கொண்டே வாசித்தேன். மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம் என்று சொன்னது எதை என்று உணர்ந்தேன். இலக்கியத்தில் ரொமான்டிஸிஸம் தேவையில்லை என்று ஒரு சாரார் சொல்வார்கள். ஆனால் ரொமாண்டிஸிஸம் இல்லா எழுத்துக்களில் முதலில் இல்லாமலாவது இயற்கைதான். மேட்டர் ஆஃப் ஃபேக்ட் எழுத்தில் இயற்கை என்பது ஜஸ்ட் சூழல் மட்டும்தான்

அதோடு வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு ரொமாண்டிசிஸம் உள்ளது. அது இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. நான் அசோகமித்திரனின் நல்ல வாசகன். அவரைப்போய் பார்த்திருக்கிறேன். கணையாழி நாட்களிலே.ஆனால் அவரது உலகம் மட்டுமே இருந்தால் அது எந்த அளவுக்கு உலர்ந்ததாக இருக்கும். [அதை வெங்கட் சாமிநாதன் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்]

ராதை கிருஷ்ணன் என்பது நம் ரொமான்டிக் மனநிலையின் உச்சம். ஒரு ஸைக்கடலிக் நிலையில் அந்த உருவகத்தை அடைந்திருக்கிரார்கள். ரதிபாவனையின் சிகரம். வண்ணங்கள் ருசிகள் இசை நடனம் காமம் கொண்டாட்டம். அந்த மனநிலையை உங்கள் மனமொழியும் கொண்டாடியிருக்கிறது

பொறாமையாக இருக்கிரது. அங்கே சென்று வந்திருக்கிறீர்கள். எனக்கெல்லாம் அதில் சில துளிகள்தான் வாய்த்திருக்கிறது. முதல்காதலில். இப்போது அந்த அனுபவத்தை மறுபடி அடைந்தேன்

ராஜாராம் சிவசங்கர்