Monday, November 24, 2014

பிரயாகை-30-காதலும் காமமும்




பெரும் காதலும், பெருகும் காமமும் கொண்டு படைக்கப்பட்ட சம்பவரணன் தபதி கதை மானிட அகம் இருபெரும் புள்ளிக்கு இடையில் ஆடும் பெரும் நடனத்தை நுட்பத்தை விளக்கி அது தனிமனிதவாழ்வோடு மட்டும் அல்ல உலகோடும் படுத்தும்பாட்டை காண்டு களிக்கவைக்கிறது. 

ஆணோ பெண்ணோ அவர்களிடம் பெரும்காதல் எழும்போது இருவரும் முதலில் நிலைமறக்கின்றார்கள். சம்வரணன் மன்னன் என்பதை மறக்கிறான். தபதி சூரியப்புதல்வி என்பதை மறக்கிறாள். இந்த நிலை மறத்தல் என்பது தன்னையே மறத்தலில் இருந்து தோன்றுகின்றது.

சம்வரணன் கை தசைவெந்து அழிந்து, இமைபொசுங்கி, உடல்கரி நின்றபின்பும் அவன் அவள்மீதுக்கொண்ட காதலால் அவளுக்காக காத்திருக்கிறான். விண்ணில் பரந்து, மேகத்தில் பறந்து, ஒளியில் விளையாடும் தபதி அதன் எதிர் திசையான மண்ணில் வாழ தந்தையுடன் சினக்கிறாள். மகள் தந்தையை எதிர்த்துபேசும் ஒரு இடம் என்றும் காதலாக இருக்கிறது. அன்று மகளோ தந்தையோ விண்ணில் இருந்தாலும் மண்ணில் விழுகின்றார்கள்.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து-என்னும் திருக்குறள் சம்வரணன் அகத்தை சொல்கிறது.  சம்வரணனோ அனைத்து ஆணின் அகமாகி விரிகிறான். 

//“என்னை நீ அடையமுடியாது மூடாநீ என் வெம்மையை தாளமாட்டாய்என்றாள் அவள். அக்கணம் அவள் விழிகள் தீக்கங்குகளாக உடல் பழுக்கக்காய்ச்சிய உலோகம் போல ஆகியது. சம்வரணனின் கைகளின் தசை வெந்து வழிந்தது. ஆயினும் அவன் பிடியை விடவில்லை. “உன்னால் எரித்தழிக்கப்படுவேன் என்றால் அதையும் என் நல்லூழ் என்றே கொள்வேன்என்றான்//-பிரயாகை-29

//தபதி சினந்து விழிதூக்கிவிண்ணளப்போன் மகளாக இருந்து சலித்துவிட்டேன். சென்று மண்ணளந்து வாழ்கிறேன்என்றாள்//

ஆணையும் பெண்ணையும் காதல்படுத்தும் பாடு எதிர் எல்லையை குறிவைத்து தாண்டச்சொல்கின்றது. ஷாத்ரம் படுத்தும்பாடு என்று நினைக்கும்நேரத்தில். ஆணுக்குள் உள்ள பெண்ணும் பெண்ணுக்குள் உள்ள ஆணும் ஒன்றை ஒன்று கண்டு அடைய நடத்தும் பெரும்போர் இது.

//ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி ஒருவரை ஒருவர் விழுங்கினர்//-பிரயாகை-30. ,இந்த வாழ்க்கை உண்மையை கண்டு அனுபவித்து அடங்க  ஆணும் பெண்ணும் நடத்தும் நாடகம் பெரும் காதல்.

காதலியை அடையமுன் சம்வரணன் பேசிய வசனங்களைக்கொண்டு அவனை எடைபோடுவோம்
// அமைச்சர்களே, கட்டற்ற பெருவிழைவும் அதை நோக்கி எழும் ஆற்றலுமே ஷாத்ரம் என்று சொல்லப்படுகின்றன. ஒரு நாட்டில் ஷாத்ர குணம் நிறைந்திருக்கையிலேயே அது செல்வத்தையும் வெற்றியையும் அடைகிறது. மரத்தின் இனிமை கனியில் முதிர்வு கொள்வதுபோல ஒரு நாட்டின் ஷாத்ரம் அதன் அரசனில் குவிந்து நிறையவேண்டும். என் விழைவை ஒடுக்கினேன் என்றால் நான் என் ஷாத்ரகுணத்தை இழந்தவனாவேன். அதன் வழியாக என் மக்களின் வெற்றிவேட்கையையும் அழித்தவனாவேன்.”//

காதலி தபதியை அடைந்து சுகம் கண்ட பின்பு சம்வரணன் நிலை என்ன? கிட்டத்தட்ட உயிர்பிணம்பொல, ஜெவின் வரிகளைத்தேடி படிக்கும்போதுதான் அதன் அதிர்வும் உண்மையும் உரைக்கும். முழுவதையும் வெட்டிஒட்டினால்தான் முடியும் என்பதால் துளியை தருகின்றேன். //மார்பிலும் தோளிலும் எலும்புகள் எழுந்திருந்தன. “அரசே, நான் வசிட்டன்என்று வசிட்டர் சொன்னபோது கனத்த இமைகளைத் திறந்துஅமைச்சரிடம் அனைத்தையும் பேசிக்கொள்ளுங்கள் முனிவரே. தங்கள் சொற்கள் இங்கே ஆணையெனக் கொள்ளப்படும்என்றான். சரிவில் விரைந்திறங்கும் ரதத்தில் நின்றபடி பேசுவதுபோலிருந்தது அவன் குரல்//

ஒரு மனிதன் கொள்ளும் ஷாத்ரம் என்னானது. எந்த ஷாத்ரம் ஆற்றாலாய் தேடலாய் ஆவலாய் வளர்ச்சியாய் இருந்ததோ அதே அழிவுக்கும் காரணமாக நிற்கின்றது. கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் சுதந்திரமே இல்லை என்பது இதுதானா?

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புனை-என்னும் திருக்குறள் இங்கு சிந்திக்க தக்கது.

பெரும் காதலையும், பெருகும் காமத்தையும் ஆதி அந்த புள்ளிகளாக கொண்டு ஆடும் மானிட அகத்தை நிறுத்துப்பார்க்கின்றது. சம்வரணன் தபதி வாழ்க்கை. திரு.ஜெ ஒரு வைரமணியை இழைத்து தனது வெண்முரசில் மீண்டும் பதித்து உள்ளார். அழகும், கற்பனையும் மிளிரும் இந்த பழம்கதையில் மின்னும் நீதிவைரத்தை பட்டைத்தீட்டி என்றும் புதுமையாக இருக்க வைத்த ஜெவுக்கு நன்றி.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.