Wednesday, November 19, 2014

விரிசல் தோன்றும் இடம்

எப்போதும் படிக்கும் போது வரிகளின் வழியே அடுத்த நிகழ்ச்சிக்கு மனம் தவ்வாது. 31ம் பகுதி ஏனோ முதலில் இருந்து ஒரு பதட்டம் வந்தது. தருமன் சேவகனிடம் பேசும் போது பட்டென்று மனம் துவண்டு விட்டது.  ஒரு யதார்த்த தந்தையின் கொதிக்கும் பாசம் கண் முன் கவிழ்த்து விடப்பட்ட வெறுமை தாக்கியது. நேர்த்தியாக ஒரு விரிசல் உடைய துவங்குவதின் ஆரம்பத்தை சொன்னீர்கள். இனி உடைந்த கண்ணாடி பாத்திரத்தை கைகளில் வைத்து கொள்வது தான் வழி. உடைந்ததை மறைத்தும்  கூட. உறவகளின் கொந்தளிப்புகள் தான் வாழ்வு. அவர்கள்  உலகங்களின் மோதல் தான் மனிதனை உன்னதம் செல்ல விடாமல் இழுக்கும் சேற்று புதை குழி . 

மகாபாரதத்தின் போர் பற்றிய செய்தி எல்லோர் மனதிலும் மறைந்து விட்டால் பிரயாகை ஒரு விறுவிறுப்பு கொண்ட குழம்பி கவலை பட வைக்கும் ஒரு தீ யாலான தொடர். 

அவமானத்தை புதைத்து குரோதத்தை ஒழித்து வன்மத்தை ஒரு சுடர் போல் வைத்து தவம் செய்யும் புதிய துருபதன் ஒரு வகையில் யோகி. 
திருப்பி தீர்க்க வேண்டிய பழி எனும் ஒரே இலக்கு கொண்டு அவன் செய்வது ஒரு வேள்வி தான். இனி இது தான் இது மட்டும் தான் அவ்வளவே என்று மறு பார்வை இன்றி அலக்நந்தா விட்டு வந்தது ஒரு ஆன்ம விடுதலை தான். எரிக்காமல் உருக்காமல் இருக்கும் நெருப்பு ஒரு குளிர் நதி போல செல்லும் கரையில் நிற்கும் ஒரு ஒரு காட்டு தெய்வம் போல தோன்றுகிறான் துருபதன். 
வாழும் போது உள்ளே ஆழமாக உருவமின்றி இருந்து பேசும் அறத்தின் வாய் இனி மூடிக்கொண்டு மெல்ல நகைத்து கொள்ள துவங்கும் காலங்கள் இனி. 

தபதி அழகின் வரிகளில், திரௌபதி personality சித்தரிப்பில் கடந்து சென்ற வானவில் இளமையின் நாட்களில் அடைந்த கிளர்ச்சியை , தவிப்பை மீண்டும் ஒரு விழி விரிந்த பெருமூச்சு காற்றால் நிரப்ப வைத்தீர். எப்படி தான் பெண்ணழகு பற்றி இன்னும் மறவாமல் உள்ளீர் காமத்து பால் கவிராயரே. குந்தி, திரௌபதி  போன்ற மிக அழகிய அரசு பெண்கள்  மிக பெரிய அரசர்களுக்கு மிக பெருமை தரும் ஒரு வெற்றி சின்னம் போல. 

லிங்கராஜ்