Friday, November 21, 2014

கடிபடுதல்

பிரயாகை-25-கடிபடுதல்

“வலியன வாழும்”-என்கின்றது டார்வின் கொள்கை. வலியன என்ற பதம் இங்கு உடலைச்சார்ந்த பலத்தை நினைவுப்படுத்துகின்றது.

உடலின் மறுமுனை என்பது உள்ளம். உள்ளத்தை நாம் இங்கு டார்வின் கொள்கையோடு பொருத்திப்பார்ப்பது இல்லை.

குளவிக்கூட்டில் வைக்கப்பட்ட புழு, குளவியால் கொட்டிக்கொட்டிக் குளவியாக்கப் படுகின்றது. ஆட்டு மந்தையில் வளரும் சிங்கம் தன்னை ஆடாகத்தான் நினைத்துக்கொள்கின்றது. மனிதனால் வளர்க்கப்படும் குரங்கு, மரக்கிளையில் அமர்வதைவிட மனிதன் தோளில் அமர்வதில் மகிழ்கிறது. இவை எல்லாம் உடலைவிட, உள்ளத்தின் வெளிப்பாட்டைக்காட்டும் காட்சிகள்.

உள்ளத்தின் வலிமை என்பது எண்ணத்தின் வலிமை. எண்ணங்களில்கூட வலிமையான எண்ணங்கள்தான் வாழ்கின்றன. வலிமையான எண்ணங்கள்தான் வலிமையான செயல்களை செய்யச்சொல்கின்றன. வலிமையான எண்ணங்கள் வலிமையான செயல்களை செய்யும் வலிமையை பெற வைக்கின்றன. வலிமை வாழ்கின்றது. வலிமை வாழ்வதால் வலிமையான செயல் வளர்கிறது. வலிமையான செயல்வளர்வதால் வலிமையான எண்ணங்களும் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றன.
வலியன வாழும் என்பது உடலுக்கு மட்டும் இல்லை எண்ணத்திற்கும் பொருந்தும்.

மண்ணில் வலிமையான எண்ணங்கள் ஒன்று முளைப்பதற்குள், வசைகள் அதிகமாக முளைத்து விடுகின்றது. வசைகள் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாய் எந்த சரித்திரமும் இல்லை ஆனால் வலிமையான எண்ணங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.

நீயே உனக்கு ஒளியாவாய்-புத்தர்.

ஒளியொருவருக்கு உள்ள வெறுக்கை-வள்ளுவர்.

இரண்டும் உள்ளத்தின் எண்ணங்களின் வலிமையின் வெளிச்சத்தில் இருந்தே பெறப்படுகின்றது.

பெரும் பாலையில் வளரும் உயிர்கள் தங்கள் ஆண்மையால் மட்டுமே வாழ்கின்றன என்பதில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் தோட்டத்தில் வளரும் உயிர்களும், மழைநீர் பொழிந்து விளையும் காடுகளில் வளரும் உயிர்களும் வாழ்தல் பெரிய செயல் அல்ல என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி செல்கின்றது.

கேட்டுப்பெற்ற எண்ணங்களும், கற்றுப்பெற்ற எண்ணங்களும் தராத பெரும் வல்லமையை வாழ்தலை ஆண்மையை சுயம் கொண்ட எண்ணங்கள், சுயமாய் அறிந்த எண்ணங்கள் தருகின்றன. அந்த சுய எண்ணம் வலிமையானதாக இருந்தால் அந்த உயிர் முதுமையிலும் காத்து கனியவைத்து செல்கிறது.  

வாழ்வு ஒருநாள் முடியத் தான் போகிறதுலட்சியத்திற்காக வாழ்ந்துமடிவது மேலானது”-சுவாமி விவேகானந்தர்.
 உண்மையே வெல்லும்அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும்என்று முழுமையாக நம்புங்கள்”-அண்ணல் காந்தி
“நம்பிக்கை இழக்கும்வரை தோல்விகள் வருவதில்லை” நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
“இக்கணத்தில் வாழ்”-பகவான் புத்தர்
“எதுவுமே என்னுடையது இல்லை”-மகாவீரர்
“உன்னையே நீ அறிவாய்”-சாக்ரடீஸ்
“மனிதனுக்கு தேவை மாற்றமல்ல, விழிப்பு உணர்வு”-ஜே.கிருஷ்ணமூர்த்தி

இப்படி இந்த மண்ணில் மகாபுருஷர்கள் என்று போற்றப்படும் அனைவரும் வலிமையான ஆண்மைக்கொண்ட எண்ணங்களால் கனிந்தார்கள். இந்த வலிமையான எண்ணங்கள்தான் அவர்களை கனியவும் வைத்தது.  அவர்கள் விழுந்தாலும் அவர்களின் எண்ணங்கள் விழுவதில்லை. அந்த எண்ணங்களை மனதில் பதியம்போடும் சிறுகுழந்தையும் ஆண்மை உடையதாக ஆகின்றது.

எளிய எண்ணம் கொண்ட மனிதனையும், அவன் வாழ்வையும் இப்போது நினைப்பது நன்றி. அவனின் எண்ணங்கள் போலவே அவனும் அடையாளம் இன்றி அழிந்துப்போய்விட்டான்.

திரு.ஜெ அவர்கள் இன்றைய பதிவில், ஆண்மை உடைய ஓநாய்தான் முதுமை அடைந்து பாலையில் இறக்கின்றது என்பதை சொல்லும் தருணத்தை எண்ணிப்பார்க்கின்றேன்.

//“ஆண்மையுள்ள ஓநாய்… இந்தப் பாலையில் ஆண்மை உள்ள ஓநாய்கள்மட்டுமே முதுமை அடையும் பேறுபெற்றவை.”//

ஓநாயை எண்ணமாகவும், அதன் ஆண்மையை எண்ணத்தின் வலிமையாகவும், பாலையை சூழலாகவும் கொண்டு பார்க்கின்றேன்.
உணவு கிடைக்காத ஓநாய் தனது வாலை தின்று, தனது காலைக்கடித்ததுபோல சுய எண்ணத்தால் கடிபடும் சகுனி இறப்புவரைப்போகின்றான் என்பதும். எண்ணத்தை வென்று உயிர் நிலைக்கிறது என்பதும், அது ஏன் நிலைக்கிறது? என்ற வினாவின் விடையாக செயலாற்றுவதற்காக என்ற பதில் கிடைக்கிறது.  “செய் அல்லது செத்துமடி” என்ற காந்தியின் வார்த்தைகள் நினைவில் எழுந்து மலர்கின்றது.
உயிர் ஆற்றவேண்டிய பணி நிறையவே எஞ்சியிருக்கிறதுஆகவேதான்அது ஜடரையை வென்றிருக்கிறது.”

பெரும் எண்ணங்களால் தாக்கப்பட்டு பித்தாகி இறந்துப்போகும் மனிதர்கள் வெறும் ஏளனத்திற்கு உரியவர்கள்தானா? இல்லை. அந்த எண்ணத்தின் செயல் இப்போது தேவையானதாக இல்லாமல் இருக்கலாம். அந்த எண்ணக்கனியை தாங்கும் கொடியாக அவர் இல்லாமல் இருக்கலாம். அந்த வலிமையான எண்ணம் விளைவை ஏற்படுத்தியே தீரும். சகுனி தனது எண்ணத்தால் பலம் இழந்து போகின்றான் ஆனால் அவன் எண்ணத்தின் ஆண்மை உடலாக துரியோதனன் நிற்கின்றான்.
//“இறக்கும் ஓநாயின் கண்களில் எவருமே மீறமுடியாத ஒரு தெய்வ ஆணைஉண்டுஅதை நோக்கி ஈர்க்கப்பட்டு இறுதிக்கடியை வாங்கி இறந்தவர்கள்பலர்”//

உபயாஜர் துருபதனுக்கு பின்னால் வரும் காலடியை அறிகிறேன் என்பது சகுனிப்போன்றவர்களின் அகத்தில் நடக்கும் ஓநாய்களின் காலடித்தடங்கள்தான்.

வெறிநாய்க்கடித்த மனிதன் வெறிநாயாக மாறுவான். சகுனியை ஓநாய் ஆக்க அவனை சுபலர் ஓநாயாக ஆகி கடித்தார் என்ற குறியீடு வாழ்வோடு வைத்து சிந்திக்க வேண்டியது. கடிபடும் மிருகத்தின் வடிவமாக மனிதன் மாறிவிடுகின்றான். சகுனி ஓநாயாக மாறுகின்றான். தீவிரவாதிகளின் கடியில் எளிய படித்த இளைஞர்கள் தீவிரவாதிகள் ஆகின்றார்கள்.

முற்றிலும் எதிர்பாராத கணத்தில் சுபலர் சீறியபடி வாய்திறந்து பாய்ந்துசகுனியின் வலது குதிகாலைக் கடித்து தசையைப் பிய்த்து எடுத்துவிட்டார்.சகுனி அலறியபடி குருதி வழியும் காலை பிடித்துக்கொண்டான்.நிணத்தசையை துப்பியபின் “உன் கால் நரம்பை அறுத்துவிட்டேன்இனிஉன்னால் இயல்பாக நடக்க முடியாதுஒவ்வொரு முறை உன் வலக்காலைதூக்கி வைக்கும்போதும் கடும் வலியை உணர்வாய்அந்த வலி என்னையும்இந்த வஞ்சத்தையும் உனக்கு நினைவூட்டியபடியே இருக்கும்.”

மனிதன் காலால் நடந்தாலும் அவன் கால்நடை இல்லை, அவன் மனதால் நடப்பதால் மனிதன். ஆனால் அவனுக்குள் நடப்பது கால்நடைகள்தான். கால்நடையில் ஓநாய், நரி, சிங்கம், புலி,யானையும் இருக்கிறது. பசுவும் இருக்கிறது.

அறத்தை பசு என்ற சொன்னவர்களை இப்போது நினைத்து வணங்குகின்றேன்.

யார் கடித்தால் என்ன? என்று இருக்காதீர்கள். யாராகவேண்டுமோ அவரால் கடிபடுங்கள். குருவின் கடியில் சீடன் குருவாகின்றான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.