Wednesday, November 12, 2014

அர்ஜுனனின் காமம்




அன்புள்ள ஜெ,

வெண்முரசு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.காணொளிக்காகக் காத்திருக்கிறேன். வெண்முரசு வரிசையில் இதுவரைவந்த நாவல்களிலேயே மிக விறுவிறுப்பான ஒன்றாக பிரயாகை திகழ்கிறது.ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வரும் வஞ்சம் காரணமோ? துருவனின்பெருநிலைக்கே ஆதாரம் வஞ்சம் தானே! சுருசியையும்உத்தானபாதனையும், ஏன் உலகிலுள்ள எவரையுமே விட சிறந்தவனாக,அனைவரையும் கடந்தவனாக, நிலையானவனாக அவனை மாற்றியதேவஞ்சம் தானே! ஓர் எதிர்நிலை சக்தியைத் தன் வாழ்வின் இலக்குக்கான படியாக மாற்றியவன் அவன்.

அதன் பிறகு தன் குரோதத்தால் சொல்லில் கனலேற்றி தன் மகனிடமும்,தன் முதல் மாணாக்கனிடமும் தன் மதிப்பையிழக்கிறார் துரோணர்.அதற்கும் அடிப்படை துரோணரின் வஞ்சமே. இப்போது நாம் துருபதனின்வஞ்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முன்பே அதர்வம் சிறுகதையில் எழுதி விட்டீர்கள். அப்போது எழுதியதற்கும் இந்த அத்தியாயங்களுக்கும் மிகச் சில வித்தியாசங்களே உள்ளன.

ஆனால் நான் முற்றிலுமாக வியந்த அத்தியாயம் அர்ஜுனனுக்கும், மாருதருக்கும் நடக்கும் உரையாடல் தான். நண்பர்கள் சிலரும் அந்த அத்தியாயம் எதற்கு தேவை என்று எழுதியிருந்தனர். ஆரம்பத்தில் எனக்கும் அந்த அத்தியாயம் ஏன் தேவை என்று தோன்றியது. காமத்தின் அக விழைவுகள் தான் இலக்கு என்றால் அதை சில பத்திகளிலேயே உங்களால் சொல்லியிருக்க முடியும். இவ்வளவு விரைவாக செல்லும் பிரவாகத்தில், என் இந்த இளைப்பாறல்? அதுவும் ஒரு முழு அத்தியாயம். இரண்டாம் முறை வாசித்தபோது தான் அதன் காரணம் கிடைத்தது.

அந்த முழு உரையாடலிலும் மாருதர் ஆண்களின் காமம் என்பது அகத்தில் தோன்றி உடலின் வழி நடக்கும் ஓர் செயல்பாடு என்பதைச் சொல்வதாகத் தானிருக்கிறது. மேலும் ஆண்கள் காமத்தின் வழியாக அடைவது ஓர் அகங்கார நிறைவு மட்டுமே. அதனால் தான் அதை மேலும் மேலும் வேண்டும் என்று அகம் விழைகிறது.

ஒப்பு நோக்க பிரயாகையில் உவமைகள் குறைவு தான் என்றாலும், முதிர்ந்த பின்னரும் முதிராக் காமம் கொண்டோரின் நிலையைச் சொல்ல கொடுத்திருக்கும் உவமை, 'மரக்கன்றை ஏந்திய இரும்புத்தொட்டியை வளர்ந்த மரம் கிளையில் சூடியிருப்பதுபோல'. உண்மையில் நிறைவேறாக் காமம் எத்தனைக் கொடுமையானது. இதனால் பாரதி, 'மோகத்தைக் கொன்று விடு அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு' என்று பாடினானோ!!!

அர்ஜுனன் அந்தப் பெண்ணிடம் தேடியது எதை? ஓர் புன்னகை...!!! அதை அவன் உணரும் இடம், அவன் தலையை அவள் வருடிய போது. அவள் வருடிக் கொண்டே அவனை ஒருமையில் அழைக்கிறாள். அதுவும் அவனுக்குப் பிடித்திருக்கிறது. அதை அவள் அவனுக்காவே செய்தாள் என்று நம்பவே அவன் அகம் விழைகிறது. மாருதர் அது அனைத்து பரத்தையரும் செய்வது என்று சொல்லும் போது ஏமாற்றம் கொள்கிறான். 

ஆம், அவன் அவளிடம் கண்டது, இனி வரும் பெண்களில் எல்லாம் தேடப் போவது குந்தியைத் தான். அந்த தலை வருடல் அவன் குந்தியிடமிருந்து பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் விளைவு. தன் தாயிடம் கிடைக்காத அந்த அரவணைப்பைத் தான் அவன் தேடப் போகிறான். 

அர்ஜுனன் அந்த பெண்ணை வெறுப்பதற்காக சொல்லும் காரணமும் நுட்பமானது. அவனை அவள் துய்க்கிறாள் என்ற நினைப்பு. அவன் பெண்ணுக்கு அடங்க விரும்பவில்லை. அவன் அவளை வென்று செல்லவே விரும்புகிறான். அது அவனுக்கு முடியுமா என்று பார்க்கவே அவன் அகம் அவனைப் பரத்தையர் தெருவுக்கு அழைத்து சென்றிருக்கிறது.

ஏன் அவன் பெண்ணை வெல்ல வேண்டும்? உண்மையில் அவன் குந்தியின் சொற்களை மீற வேண்டும் என்றே எண்ணுகிறான். தான் அவளின் சதுரங்க பலகையில் ஓர் ஆட்டக் காயாக இருப்பதை அவன் விரும்பவில்லை. அவன் அடுத்த நாள் நடக்கவிருக்கும் இளவரசு பட்டமளிப்பு விழாவில் தன் தமையனின் பக்கம் நிற்க விரும்புகிறான். அதற்கு அவன் குந்தியின் சொல்லை மீற வேண்டும். அது அவனால் முடியுமா என்று பார்க்கவே அவன் அங்கு செல்கிறான். திரும்பி வருகையில் அவனின் நிமிர்வுக்கு காரணம் அது அவனால் முடியும் என்ற எண்ணம் தான். மாருதரும் இதை மிக நாசுக்காக "இன்று அவைக்களத்தில் மாமன்னர் திருதராஷ்டிரரை நீங்கள் சந்திக்கவிருக்கிறீர்கள். அஸ்தினபுரியின் இளவரசர் எவரென்று இன்று தெரிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.", கேட்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேல் 'ஜெ' ஓர் குறிப்பைத் தந்திருக்கிறார். அர்ஜுனன் அந்த பெண்ணின் பெயராக சொல்வது, 'பிரீதி'. குந்தியின் இயற்பெயர் 'பிரீதா' அல்லவா!!!! பிரயாகை - 12 ல், அர்ஜுனன் முன்பொருமுறை குந்தியைப் பார்க்க போன போது அவளின் புன்னகையைப் பார்த்து மெய்சிலிர்ப்பதாக எழுதியிருப்பார் ஜெ. 

அடுத்த நாள் அவையில் மேற்சொன்னவை தான் நிகழ்கின்றன. அர்ஜுனனும் பீமனும் மிக அனாயாசமாக குந்தியைக் கடந்து தருமன் பக்கம் நிற்கின்றனர்.

உண்மையில் இருகூர்வாள் அனைத்து அத்தியாயங்களும் மிகக் கூர்மையானவை தான்.

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து.