Sunday, November 16, 2014

வெண்முரசு உவமைகள்



ஜெ சார்

வெண்முரசில் வரும் உவமைகளை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். இப்போதே நாலாயிரம் பக்கங்கள் ஆகிவிட்டன. இதுவரை உவமைகள் திரும்பத்திரும்ப வந்ததே இல்லை. மிக அபூர்வமாக சில உவமைகள் இன்னொருமுறை வந்திருந்தன. பெரும்பாலான உவமைகள் புதியவை, இதற்கு முன் எங்கும் நான் கேள்விப்படாதவை.

அதேசமயம் அவை உவமைக்கான உவமைகள் கிடையாது. கச்சிதமாக ஒரு காட்சியையோ மனநிலையயோ வெளிக்காட்டக்கூடியவை அவை. உதாரணமாக இன்று வந்திருந்த இரு உவமைகள். ஜபமாலையை உருட்டும் யோகி போல பாலைவனத்தின் மடிப்புகளில் மணல் பொழிந்துகொண்டிருந்தது. பாலைவனமலைகளின் அமைதியை கற்பனைசெய்து பார்த்தால் தியானம் என்று அவற்றையும் மணிமாலை என்று மணலையும் சொல்வது மனதை மிகவும் விரியவைக்கிறது

அதேபோல பசுவின் முலைக்காம்புகள் போல சகுனியின் விரல்கள் வீங்கி உருண்டிருப்பதாகச் சொல்லும் இடம். அரண்டுவிட்டேன். அதுவும் வெண்பசுவின் அகிடு என்கிறீர்கள் அதுதான் சிவப்பாக இருக்கும். கண்முன் கண்டேன்.

முதற்கனலில் உருவகங்கள் செறிந்து கிடந்தன. பிரயாகையில் அவை குறைவாகவே உள்ளன. ஆனால் அவ்வப்போது வரும் உவமைகள் அப்படியே கனவுக்குள் கொண்டு செல்கிறன

ஜெயராமன்