Sunday, January 25, 2015

அருந்தவச்செல்வி



அன்புள்ள ஜெ சார்

பிரயாகையைத்தான் ஆங்காங்கே புரட்டி சரியாகக் கவனிக்காமல் விட்டவற்றை எல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக பகீரதனின் கதையை வாசிக்கிறேன். பகீரதனின் தவம் மூன்று அடுக்குகளாக உள்ளது. கடைசியில் கங்கையை மண்ணுக்குக் கொண்டுவந்துவிடுகிறான்.

அதேபோன்ற தவம் தான் துருபதனுக்கும். அதையும் மூன்று அடுக்குகளாகவே சொல்கிறீர்கள். மூன்றடுக்குத்தவத்தின் கடைசியில் அவன் மண்ணுக்கு தீ வடிவமான கங்கையைக் கொண்டுவந்துவிடுகிறான்

அதேபோல தபதியின் கதையையும் சொல்கிறீர்க்ள். தீவடிவமான பெண் அவள். ஆனால் தாய்மையிலே கனிந்து குளிர்ந்துவிடுகிறாள்.

திரௌபதி தாய்மையிலும் கடைசிவரை குளிரவில்லை. தீவடிவமாகவே கடைசிவரை இருந்தாள் என்பதை நினைத்துக்கொள்கிறேன்

இந்தத் தருணத்திலே எனக்கு நினைக்கத்தோன்றுவது அம்பையைத்தான். அம்பையின் கதையை திரௌபதி அறிந்திருப்பாள் என்று நினைக்கிறேன். அம்பையின் சாபம் விழுந்த மண்ணுக்குஇவள் அந்தச் சாபத்தின் மறுவடிவமாக மருமகளாக போகப்போகிறாள்

அஸ்தினபுரியினுள் சகுனி நுழைந்தது தீ நுழைந்ததுபோல இருந்தது என்ற வர்ணனையை ஞாபகப்படுத்திக்கொண்டேன். அதேபோலத்தான் பாஞ்சாலி நுழைவதும் இருக்கும் என்று தோன்றியது

சிவம்