Monday, January 26, 2015

நிலையானவை கருணையற்றவை

ஆசிரியருக்கு ,                                                                                                             1
Neutron star என ஒன்று உண்டு , அது தனக்குள்ளேயே  சுருங்கி சுருங்கி இனி சுருங்க முடியாத நிலையை எட்டும், அப்போது அது  மிகுந்த அடர்த்தியாகவும்  எடை மிகுந்ததாகவும் இருக்கும், அதன் ஒரு தேக்கரண்டி அளவு மண் பூமியின் எடைக்கு  நிகராக  இருக்கும்.

    

ஒரு தத்துவவாதிக்கு எப்போதும் நிலையாமை மீது ஒரு இகழ்வும், நிலைத்த தன்மை மீது ஒரு மேன்மையும் இருக்கும். நிலையானது என்றாலே  உயரத்தில் தொலைவில் இருப்பது, உறுதி வாய்ந்தது, தனியானது ,கவலையற்றது, அன்பற்றது.     
                                                                                                            -------

                                                                                                               2

பிரயாகை அதன் ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும், அதன் கதை ஒழுக்கிற்குள்ளும்  கரந்திருப்பது 'நிலைத்த நிலை'. நிலைத்த நிலை கூடக் கூட கருணை குறைகிறது, அது உறுதி வாய்ந்தது. கருணை கூடக் கூட நிலை குலைகிறது, அது இளகியது. செயலுறுதி நிலைத்த குணம், மன்னித்தல் நிலை குலைவு.

துவக்கத்திலேயே துருவன் மாறாததை  நோக்கி செல்கிறான், தனது தாயின் உறவையும் இம்மண்ணையும்  துறந்தே பயணத்தை துவங்குகிறான். நிலைத்து கேட்கும் விலை துறவு.

தர்மன் தனியன் என்பது ஒரு நிலைத்த தன்மையின் பண்பே, அவனை யாரும் அறிவதில்லை, யாருடனும் அவனுக்கு நெருக்கம் இல்லை. இங்கு நிலைத்தது கேட்க்கும் விலை தனிமை.

குந்தி தனது மைந்தர்களுக்காக அறுவரை பலியிடுகிறாள், தர்மன் உட்பட அனைவரும் அதற்கு ஒப்புகிறார்கள், தப்புகிறார்கள். இங்கு நிலைத்தது கேட்கும் விலை பாவத்திற்கு அஞ்சாமை. 

துருபதன் அனைத்தையும் கைவிட்டாலும், பகையைத் துறக்கவில்லை. அவன் எஞ்சிய வாழ்க்கையின் இலக்கு துரோணனே. இங்கு நிலைத்தது கேட்கும் விலை வஞ்சம்.

சகுனியும் கௌரவர்களும் ஐவரையும் கொல்லத்  துணிகிறார்கள், ஓநாய் பல்பட்ட சகுனியும் , அரியணை நழுவிய அகங்காரம் காயம் பட்ட துரியனும் இதற்கு ஒப்புகிறார்கள். இங்கு நிலைத்தது கேட்கும் விலை அறப்பிறழ்வு.

மகனுக்கு மேலான கர்ணனை பரசுராமர் வெளியேற்றுகிறார், அளித்த கல்வியை பறித்துக் கொள்கிறார், இங்கு நிலைத்தது கேட்கும் விலை சாபம்.

திரௌபதி ஒன்றுக்கு இரண்டு பலிகளை பெற்றே  அடி எடுத்து வைக்கிறாள், காதல் கொண்ட கர்ணனை நிராகரிக்கிறாள், காட்டை எரிக்கிறாள், சிற்றுயிர்களை பொருட்படுத்தாமல் கொல்கிறாள் பின்னர் குருட்சேத்திரத்திற்கே காரணமாகிறாள். திரௌபதி  நிலை தன்மையின் ஆடிப் பிம்பம்.  இங்கு நிலைத்தது கேட்கும் விலை குருதி.  

கிருஷ்ணன் சதி செய்கிறான், தந்திரமாக படை கொள்கிறான், இனிப்பை வாயில் மென்று கொண்டே கொல்கிறான், ஐந்தாவது கிளியில்  இருந்து வேண்டுமென்றே விலகுகிறான் , அனைத்தையும் புன்னகைத்துக் கொண்டே செய்கிறான். அவனுக்கு துவராகையும் யாதவ எழுட்சியுமே கனவு. திரௌபதி நிலை தன்மையின் ஆடிப் பிம்பம் என்றல் கிருஷ்ணன்  நிலை தன்மையின்  நிழல். இங்கு நிலைத்தது கேட்கும் விலை கருணையின்மை.

வெண்முரசில் அணைத்து விசைகளும் குருட்சேத்திரம் நோக்கியே, அனைத்து  கிளைகளும் ஒரே மரத்தில் இருந்தே, அனைத்து நிறங்களும் வெண்மையில் இருந்தே. விதி நிலையானது அது கேட்கும் விலையும்  நிலைத்த தன்மையே.  

                                                                                                                    -----   

குண்டாசி முதலில் இருந்தே தடுமாறி இருக்கிறான் , அவனுக்கு துரியனின் அரியணைகொடுக்கும் உவகையை விட அறமே அவனை சஞ்சலப் படுத்துகிறது. குடித்து அழிந்து கொண்டிருக்கிறான். தன்னுள் இருக்கும் நிலை குலையாத துரோக செய்கையின் உறுத்தல் மேன்மேலும் நிலை இறுகுகிறது. நிலைக்கும் உறுத்தல் ஒரு கொலை தெய்வம். திருதிராஷ்ட்டிரன் அரக்கு மாளிகைக்காக கௌரவர்கள் அனைவரையும் சகுனியுடன் சேர்த்து கழுவேற்றுவான் என எண்ணுகிறார் விதுரர், அவருள் இருக்கும் நீதி உறுதியானது. அன்புமிகுதியில் மன்னித்தால் அவர் நிலை தடுமாறிய கருணையாளர், கொன்று தண்டித்தால் நீதி நிலைக்கச் செய்யும் குரூரர். 

நிலைப்பவைகள் கருனையற்றவை. 


கிருஷ்ணன்.