Sunday, February 22, 2015

வெண்முகில் நகரம்-12-கண்ணுள்ளவனும் கண்ணற்றவனும்





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காமம் என்பது என்ன? விழியற்றவனின் அகம் அறிந்த ஒன்று. அதை வண்ணங்களாகவும், சொற்களாகவும், முத்திரைகளாகவும் சமைக்கையில்  கிடைக்கும் பெருகருணையும், பெரும் சினமும் கொண்ட அன்னையின் சித்திரங்களே அவை.

பிரகலாதன் என்னும் விழியுடையவன் பார்த்ததும் அது ஆதி அன்னை சிவகாமி என்று தெரிந்துக்கொள்கின்றான். கண்ணற்றவன் முட்டிமோதி மேகத்தில் பறந்து இறைவனோடு பகடை விளையாண்டு கடைசியில் கண்டுக்கொள்கின்றான். அது அப்பனுக்கு அருகில் இருக்கும் அன்னை என்று. விழியுடையவனுக்கு தனித்த சித்திரம்கூட நிஜமான அன்னையை காட்டிவிடுகின்றது. விழியற்றவனுக்கு அன்னையை அறியக்கூட அப்பனை முதலில் அறியவேண்டி இருக்கிறது. 

நுகர் வித்தகமாகுமென்று உமை மொழியிற்பாலை உண்டிடு
நுவல் மெய்ப்புள பாலன் என்றிடும் இளையோனே-என்கின்றார் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழில்.

அன்னை சிவகாமிக்கொடுத்தால்தான் ஞானமுலைப்பால் உண்ணமுடியும் இல்லை என்றால் பாலில்லா முலைகளை பால்முலையாக்கும் தொழிலில்தான் ஈடுபடமுடியும். இதுகூட அன்னையின் விளையாட்டுதானோ?. திருஞானசம்பந்தருக்கு வழிய வழிய பால்கொடுத்த அன்னை ஏன் அந்தகனுக்கு பற்றாமல் பால்கொடுத்தாள். இதுவும் அன்னையின் விளையாட்டு. முக்கண்ணன் மகனுக்கு அந்தகன் பிறந்ததுதான் அப்பனின் ஞான விளையாட்டு. திரௌபதியின் நிழலை மாயையின் நிஜத்தில் தேடும் அர்ஜுனன் காமம் என்னும் காட்டில் ஒரு அந்தகன். ஒவ்வொரு பெண்ணுமே அன்னை என்னும் நிழலை நடிக்கும் நிஜங்கள். என்னை ஒரு கற்பனை ஜெ. இது கற்பனை இல்லை இதுதான் ஞானத்தின் நிஜம்.  

இன்று நிழலாகி நிற்கும் திரௌபதி பெரும்கருணையும் பெரும்சினமும் கொண்ட பேரன்னை சிவகாமி. அர்ஜுனன் கண்டுக்கொண்டான். சிவனின் கருணையால் அவன் மீண்டும் ஒரு பொன்வண்டு. வண்டுக்குதான் மண்ணில் எத்தனை எத்தனை மலர்கள்.

புராணகதை என்னும் அலங்காரம்தான் வெண்முகில் நகரம் என்னும் பெண்ணுக்கு எத்தனை பெரிய அழகை அளித்து அளித்து செல்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உயிர் சிற்பம். வாழ்க்கை சோலையின் ஞானக்கனி. நன்றி ஜெ.

உண்மையின் நிழல் மாயம் என்றால் மாயையின் நிழல்தான் உண்மை. அர்ஜுனன்போல மாயையை அணைப்பது என்பது உண்மையில் நிழலின் நிழலை  அணைப்பதுதானோ?. காமம்தான் மனிதனை எத்தனை பலகீனமானவனாக ஆக்கிவிடுகின்றது.   கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று வள்ளுவர் சொல்லும் சொல் இன்று இனிக்கின்றது. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.