Wednesday, February 25, 2015

வெண்முகில் நகரம்-18-பிரபஞ்ச தூய்மை



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஜத்குரு ஜக்கிவாசுதேவ் “மற்ற சீவன்களுக்கு கீழ்மேல் மேல் கோடு வரையருக்கப்பட்டு உள்ளது அவைகளின் வளர்ச்சி அதற்குள்தான், ஆனால் மனிதனுக்கு கீழ்கோடு உள்ளது மேல்கோடு இல்லை அவன் எவ்வளவு வேண்டும் என்றாலம் வளரலாம்” என்று சொல்வார். தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களைப்பார்க்கும்போது அதுவும் திரௌபதியுடன் வைத்துப்பார்க்கும்போது இவர்கள் எத்தனை எத்தனை விதமாக எத்தனை எத்தனை உயரம் வளர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதை வளர்த்திக்காட்டி வென்று செல்கின்றீர்கள் ஜெ. அதற்கு முதல் அன்பு வணக்கம். 

ஒரு மனிதன் எவ்வளவு உயரம் வளரனும் என்று ஒரு கேள்விக்கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சகாதேவன் அளவுக்கு என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். வெண்முகில் நகரம்-18ல் சகாதேவன் வளர்ச்சி அகத்தை அடைத்துவிட்டது. ஒருமனிதன் எத்தனை உயரம் வேண்டும் என்றாலும் வளரலாம். எவ்வளவு அகலம் வேண்டும் என்றாலும் பரவலாம் ஆனால் அகத்தை நிறைப்பது என்பது முடியாத விசயம். சகாதேவன் அதை இன்று நிகழ்த்திக்காட்டுகின்றான். தன்னை விட்டுக்கொடுப்பவன் மானிடரில் தெய்வம்தான் தியாகம் செய்யாமலே ஒரு தியாகம் அதுவும் முகம் சுளிக்காமல் இன்னும் என்னவேண்டும் உனக்காக ஒரு ஏவளனாய் காத்திருக்கிறேன் என்ற அகத்தோடு இருக்கும் மனிதன் முன் ஆனவம் எல்லாம் அடிப்பட்டு தவிடுபொடியாகிவிடுகின்றது. அந்த ஆணவம் அழியும் இடத்தில் எல்லாம் அந்த மகாமனிதன் ஏறி உட்கார்ந்துக்கொண்டுவின்றான். 

இந்த அத்தியாயத்தில் சகாதேவன் ஆணவம் பற்றிப்பேசுவதும் அந்த ஆணவத்தை தன்னிடம் அண்டவிடாமல் செய்வதும் வாழ்ந்துக்காட்டுகின்றான் என்று சொல்லலாம். திரௌபதியை பார்க்கநினைக்கும் மனதை மறைக்கும் இடத்தில் இருந்து தான் எழுந்து வந்தவன் என்பதை கடைசியில் நிறுபிக்கின்றான்.சேத்தில் இருந்து முளைக்கும் செந்தாமரை. 

காதல் திருமணம் செய்துக்கொண்டவர்களும் இருக்கலாம், குடும்பம் பார்த்து திருமணம் செய்துக்கொண்டவர்களும் இருக்கலாம். இல்லறத்தில் எதிர் பார்ப்பு என்பது அல்லது தேவை  என்பது காதல் மட்டும்தான். காதலிக்கின்றேன் என்பர்களிடம்கூட காதல் இல்லை என்று உணரும் தருணம் வரும். காதல் எந்த சட்டத்திட்டங்களுக்கும் வடிவங்களுக்கும் அகப்படும் ஒன்று அல்ல. அது எப்ப வந்தது எப்படி வந்தது எப்படி இருக்கும் என்று முழுகாதலில் மூழ்கிருக்கும் தருணத்தில்கூட அறியமுடிவதில்லை. அந்த கணம் அகன்று வெற்றிடம்தோன்றும்போது அது எத்தனை மென்மையாய் கனமாய் இருந்தது என்பதை மட்டுமே அறியமுடியும். அந்த மென்மையை கனத்தை தேடிக்கொண்டே இருப்பதையே காதலிக்கிறேன் என்று சொல்லிச்செல்வதுண்டு. அதுதான் காதலா? அதற்கும்மேல். 

காதல் என்பது ஆணுக்கு பெண்ணாக இருப்பதா? பெண்ணுக்கு ஆணாக இருப்பதா? அதற்கும்மேல..தெய்வமாக இருப்பது, பெற்றவராக இருப்பது, நட்பாக இருப்பது,அறிவு ஆற்றல் கலை, கவிதையாக இருப்பது, புன்னகையாக இருப்பது, கண்ணீராக இருப்பது, அழகாக இருப்பது, அழகே இல்லாமல் இருப்பது, மூத்தவராக இருப்பது, இளையவராக இருப்பது, தனியாக இருப்பது, ஒட்டுமொத்த உயிர்குலமகா இருப்பது, கொடையாளியாக இருப்பது, யாசகனாக இருப்பது, நானாக இருப்பது, நான் இல்லாமல் இருப்பது, செத்தும் வாழ்வது, வாழ்ந்துக்கொண்டே சாவது என்று போய்கொண்டு இருக்கும் ஒரு அகம் அடையும் முழுமை இன்பம் காதல். இதை உண்டாக்கவும் முடிவதில்லை, உண்டானால் தடுக்கவும் முடிவதில்லை. இப்படி எதேதோ சொன்னாலும் சொல்லமல் இருக்கும் ஒன்று காதல். 

தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் என்று தொடங்கி இதோ இன்று சகாதேவன் இடம் வந்து நிற்கும் திரௌபதி சகாதேவன் நெஞ்சில் ஏன் தலைவைத்தாள்?.  அது காதல்..காதல்..காதல்.

சகாதேவன் நெஞ்சில் அவள் தலைவைத்தபோது தன்னை குழந்தை என்று உணர்ந்தாளா? அவன் தன்னை தாய் என்று உணர்ந்தானா? இருக்காலம். அவர்கள் அப்படி உணர்ந்தாள் அது அவர்கள் அறிவு இயங்கும் எல்லை மட்டும்தான் ஆனால் அறிவு இயங்கும் எல்லைக்கு அதற்கும் அப்பால் அல்லவா காதல் உள்ளது.காதல் காமத்தை ஆண்பெண் பேதத்தை ஒற்றை நொடியில் அழித்து மிளிர செய்து செல்கின்றது.

பிரபஞ்ச தூய்மையின் ஒரு துளி காதல் என்று பெயர் எடுத்துவந்து ஆண் பெண்ணுக்குள் ஒரு காவியத்தை செய்துவிட்டு செல்கிறது. அது இறைவன் மகிமையில் ஒன்று. அந்த உண்மையின் மகத்துவத்தை உங்கள் எழுத்தில் சகாதேவன் திரௌபதியிடம் உணர்கின்றேன் ஜெ. நன்றி

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.