Thursday, February 26, 2015

வெண்முகில் நகரம்-19-வானந்தமான வடிவுடையாள்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வெண்முகில் நகரம் என்று பெயர் இருந்தாலும் இது அதிகமாக சுடுகின்றது. பாரதி  “தீக்குள் விரலைவைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று சொன்னது இந்த நிலைதான் என்று நினைக்கின்றேன். தீக்குள் விரலை வைத்தால் வெந்துதானே போகும் எப்படி தீண்டும் இன்பம் தோன்றும் என்று நினைப்பதுணண்டு. அந்த கணத்தில் அந்த இன்பம் தோன்றி மறைந்துவிடும். மின்னல் சுட்டதுபோல என்று சொல்லலாம். வெண்முகில் நகரம் மின்னல் சுட்டதுபோல உள்ளது.

வெண்முகில் நகரம்-19க்கு எதுவும் எழுதவேண்டாம் என்று நினைக்கின்றேன். எழுதவேண்டாம் என்று நினைப்பதே ஒரு வருத்தமாக இருக்கிறது. என்ன எழுதவது? அது பெரும் வருத்தமாக இருக்கிறது. வருத்தத்தை எப்படி எழுதுவது. பெரிய இன்பம் என்பது கண்ணீர் உடன் சொல்லும் ஒன்றோ? கலப்பில்லாத சிரிப்பு என்பது கண்களின் கண்ணீருடன் வழிவதோ? உதட்டால் சிரிப்பது எச்சில் சிரிப்பு அதற்கு பெரும் புனிதம் இருக்கமுடியுமா?  வெண்முகில் நகரம்-19 எழுத்தில் இருக்கக்கூடிய ஒன்றல்ல அது வேறு ஒன்று.

சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என்று எல்லோரும் ஏதேதோ சொன்னாலும் இந்த ஆறுக்குள்ளும் சோதியே என்றும் துன்னிருளே   என்றும் சொல்லும்போது அந்த ஆறு மதங்களும் அழிந்து, சொல்லும் நாமும் இல்லாமல் ஆகிவிடுகின்றோம்.

பெண்கூட சோதி என்றும் இருளென்றும் நிற்கும் தருணத்தில் எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றாள். இந்த அற்புதம் திரௌபதியின் வழியாக விஸ்வரூபம் எடுக்கும்போது உலகம் மறைந்த நானும் மறைந்து அதுவாக மட்டும் நிற்கின்றேன். இதை எழுத்தில் வடித்த ஜெவுக்கு வணக்கம். இந்த மாபெரும் தரிசனத்தை சகாதேவன் காணும் அற்புதம் அழகு, திரௌபதி சகாதேவன் இதயத்தில் திருமுகம் வைக்கும் கணத்தில் அடைகின்றான். 

கண்களும் நிறங்களும் சந்திரநிறங்களும் 
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ-என்று அருணகிரி நாதசுவாமிகள் தேடும் முருகபெருமன் இதயத்தில் பதம்வைக்கும் நாளில் தோன்றும் அருள்வெள்ளம் எப்படி இருக்கும் என்று காட்டிப்போகும் பிரபஞ்ச தரிசனம். 


நாடும் பொருட்சுவை சொற்சுவை
   தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்தருள்
   வாய் பங்கய ஆசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே
   கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே 
    சகல கலாவல்லியே என்று பாடுகின்றார் குமரகுருபரர் ’சுவாமிகள். 

சகாதேவன் நெஞ்சை பங்கய ஆசனமாக்கி அதில் திரௌபதியை ஏற்றி வைக்கின்றீர்கள் ஜெ. திரௌபதி தனது மலர்குழலை ஐந்து பிரவாக்கி பிண்ணிமுடித்திருந்தாள் என்பதை இன்று எண்ணிப்பார்க்கையில் சகாதேவன் அடையும் பிரபஞ்ச தரிசனமும் அதன்மூலம் எழுந்துவரும் சொற்சுவை பொருட்சுவை கலந்துவரும் கவிக்கணத்தை நினைக்கும்போது நெஞ்சம் இனிக்கிறது.  

அபிராமிப்பட்டர் அன்னை அபிராமியை “ஆனந்தமாய்” எனத்தொடங்கும் அபிராமி அந்தாதியில் “வானந்தமான வடிவுடையாள்“ என்கின்றார். இந்த அபிராமி அந்தாதிப்பாடலை ஒருநாள் நடைப்பயணத்தில் பாடிப்பார்த்தப்படி பூமியையும் வானத்தையும் அண்ணாந்துப்பார்த்தேன். மாகாளி என்று சொல்கின்றார்களே அது இதுதானா என்று திகைத்து பம்பி பதுவிசா நடந்தேன். நான் ஒரு மண்துகள்கூட இல்லை. அதற்குமேல் நினைக்க எதுவும் தெரியவில்லை.  மாகாளியை ஒரு சிமிழில் குந்தவைப்பதுபோல்தான் நான் பூமியையும் வானத்தையும் பார்த்து அளவிடுவது என்று இன்று அறிகின்றேன். வெண்முகில் நகரம்-19 “வானந்தமான வடிவுடையாள்” என்பதற்கு ஒரு சொல்லோவியம் தீட்டிச்செல்கின்றது.

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதற் பூதங்களாகி  விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

வானந்தமான வடிவுடையாளை எனது சிற்றறிவுக்கு தகுந்தப்படி பகுத்தும் தொகுத்தும் பார்க்கின்றேன். அவளும் எனது அறிவு அளவுக்கு அளவாகுவதுதான் அதிசயம். ஆனால் அவள் அளவுக்குள் அடங்கா அளவுள்ளவள், எண்ணில் ஒன்றும் இல்லாத வெளியானவள்.
அன்னை, சகோதரி, தோழி, காதலி. மனைவி, மகள் என்று அவள் என்னறிவுக்கு தன்னை அளவாக்கிக்கொள்கின்றாள் ஆனாலும் அவள் வானந்தமான வடிவுடையாள். எழுதல், புலரி,காலை,மதியம், மாலை, இரவு, அமைதல் என்று இந்த பதிவு ஒரு அளவுக்குள் அளவானாலும் அதற்கும் அப்பால் பிரபஞ்சமாகி நிற்கின்றது வானந்தமான வடிவுடையாள் என்று.

இலக்குவன் கோடு கிழித்து கோட்டுக்குள் உள்ளே நிறுத்திய சீதையின் அளவு மிகமிக சிறியது. கோட்டுக்குவெளியே இராவணன் இடம் இருந்த சீதை அள்ளவா பெரியது. அதுவல்லாவா இராவணை வந்து அள்ளி செல்லச்சொன்னது. இலக்குவணன் கோடுகிழித்து நிறுத்திய சீதையும், இராவணன் கொண்டு சென்று சீதையும் சிறிதாக்கும் அளவல்லவா இராமனுடன் இருந்த சீதையின் வானந்தமான வடிவு. அதுவல்லவா ஒற்றை வில்கொண்டு ஒரு ராஜியத்தை எதிர்த்தது அழித்து. அந்த வானந்தமான வடிவுடையவள் வால்மிகி முனிவனின் நெஞ்சத்தில் கால்வைத்து நிற்கும் காட்சி ராமன் கண்ட அளவைவிட எத்தனை எத்தனை பெரியது. இந்த நிலைகூட அன்னையின் அளவாகுமா? அளியேன் அறிவு அளவிற்கு அளவாகும் அதிசயம்தான் அது. 

திரௌபதியை, பெண்ணாகி வந்த ஒரு துளி பேரன்னையை காமம் என்ற ஒரு கொதிகலத்திற்குள்ளோ, காதல் என்ற பூவிதழுக்குள்ளோ அடைத்து வைக்கும் எளிமையைத்தாண்டி பிரபஞ்சமாக்கி விரித்துவைத்து வண்ணம் செய்யும் வெண்முகில் நகரம்-19 ஒரு வைரக்கடல். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.