Saturday, February 14, 2015

வெண்முகில் நகரம்-6-சுயசோதனையே சத்தியசோதனை



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நட்சத்திரங்கள் வெற்றிடங்களால் இணைந்து உள்ளதுபோல் மனிதனும் வெற்றிடங்களால்தான் இணைந்து உள்ளான். உடம்பால் இணைந்து உள்ளான், குருதியால் இணைந்து உள்ளான், மனத்தால் இணைந்து உள்ளான், சொல்லால் இணைந்து உள்ளான், நட்பால் இணைந்து உள்ளான், பகையால் இணைந்து உள்ளான் என்று நிறைய சொல்லலாம். இவை எல்லாம் ஒரு மாய மயக்குதான். உண்மையில் வெற்றிடத்தால்தான் இணைந்து உள்ளான். தருமன் அப்படித்தான் அணைவரிடமும் இணைந்து உள்ளான். அவன் ஒரு நட்சத்திரமாக ஜொளிப்பதுகூட அதனால்தான் என்று நினைக்கின்றேன்.

வாயிற்படியோ, சாளரமோ அதன் இடையில் கதவோ அல்லது சீலையோ இல்லாமல் வெற்றிடம் தோன்றினால்தான் நாம் வீட்டின் அகத்தோடு அல்லது வீட்டின் வெளியோடு இணைப்பில் இருக்கமுடியும். விதுரரும், தருமனும் சிலக்கணங்கள் மௌனமாக இருந்தபோது சாளரசீலைகள் விடுபடத்தவித்தது என்பதுதான் எத்தனை அற்புதமான பொருள் பொதிந்தது. இளவரசு என்றும், அமைச்சர் என்றும் ஒரு திரையல்லவா அவர்களை இணையமுடியாமல் செய்தது. அமைச்சர் இளவரசன் என்ற இணைப்பில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அந்த இணைப்பு உண்மையில் சரியான இணைப்பா? தருமனும், விதுரரும் மகன் தந்தையாகும் அந்த தருணம் அல்லவா உண்மையான இணைப்பு.
சிலர் வாழ்வில்தான் இந்த சாளரசீலை விடுபடுகின்றது. அது அந்த கணத்தில் நடந்துவிடுகின்றது. அதற்கு யார் காரணம் என்று சொல்லமுடிவதில்லை. தெய்வங்களாகக்கூட இருக்கலாம்.

விதுரன் தருமன் இந்த இதய இணைப்பை அல்லது அந்த இதயஇணைப்பை உணர்த்தும் இந்த தருணம் நான் தேடிக்கொண்டு இருந்த ஒன்று அல்லது அதற்காக காத்திருந்தேன் என்றுகூட சொல்லலாம். காரணம் தருமன் போன்ற அறமைந்தனை தன் மகன் என்று ஒரு மனிதன் அறியும் தருணம் வாழ்வில் என்று வரும். வந்தால் அந்த மனிதன் எத்தனை கொடுத்துவைத்தவன்   என்று ஆவலோடு காத்திருந்தேன். விதுரர் கை ஓங்கி தருமனை மூடா என்பதும். “தங்கள்கைகளால் என்னை அறைந்திருந்தீர்கள் என்றால் இந்நாள் என்வாழ்வின் திருநாளாக அமைந்திருக்கும்”  என்று தருமன் சொல்வதும். அதுவும் முதல் இரவு முடிந்து குளித்த கூந்தல் ஈரம்கூட காயாமல், மனைவி அருகிருக்க காலையில் இப்படி ஒரு வார்த்தை சொல்லும் மகன் தருமன் இன்றி வேறு யாராக இருக்கமுடியும். இன்று விதுரர் அக எழுச்சியால் விட்ட கண்ணீருக்கு பாண்டு கொடுத்த அஸ்வதந்த வைரமும், அதற்கு ஈடான அஸ்தினபுரியும் ஈடாக முடியாது.

மகனிடம் தந்தை தோற்கும் நாள் அல்லவா உண்மையில் தந்தை தந்தையான நாள். காலமெல்லாம் தருமனை, தனது அண்ணன் மகனை தனது மகன் என்றே அன்பு செய்த விதுரன் இன்று தருமனை தனது மகன் என்றே எழுதிச்செல்கின்றான். கண்ணனிடம் கூட தனது சொல் தோற்கலாகது என்று என்னும் விதுரன், தருமனிடம் தோற்றேன் என்பது எண்ணி எண்ணி தந்தையின் வாழ்தலின் பொருள் இலகும் கணம் என்பது கண்டு கொண்டேன்.இத்தனை சொற்களிடம் வாதிட என்னால் இயலாது” என்று விதுரர்கைகளை பூட்டிக்கொண்டார்

தருமன் இன்று வேறு மாதரியாக திரும்பி பார்க்க வைத்துவிட்டான் ஜெ. அவன் அறம் வளர்ப்பவன். அறத்தால் வளர்பவன் என்பதும், சொல்லை ஆக்குபவன், சொல்லால் ஆக்கப்படுகின்றவன் என்பது தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் எல்லாம் தன்னை ஒரு ஆடியாக நிருத்தி உலகத்தை பிரதிப்பளித்துக்காண்டு இருக்கையில், உலகத்தை ஆடியாக்கி அதில் தன்னை பிரதிபளிக்க வைக்கும் வல்லமை தருமனிடம் மட்டுமே உண்டு என்பதை அறியகிடைத்தது. உண்மையில் அறம் வழி நடக்க நினைப்பவன். உலகம் தன்னை பிரதிபளிக்கும்படியே நடந்தாக வேண்டும். இந்த மாபெரும் வல்லமை இல்லாமல்தான் அத்தனை மனிதரும் அறம் நழுவிப்போக நடக்கின்றார்கள். அப்படி நடப்பதே உலகோடு ஒட்டிவாழ்தல் என்றும் நம்பவைக்கப்படுகின்றது. வாழ்தல் என்பது உலகோடு ஒட்டி வாழ்தல் அல்ல தன்னோடு ஒட்டிவாழ்தல் என்பதுதான். தன்னோடு ஒட்டிவாழ்தல் என்பதை சுயநலமாக கொண்டு மானிட கீழ்மையோடு வாழ்தல் அல்ல. செயற்கரிய செயல் செய்பவர்போல் வாழ்தல், அடுத்தவரை வெல்வதற்காக செய்வதல்ல தன்னை வெல்வதற்காக செய்வது. நேற்றுவரை இல்லாத இந்த மாற்றம் இந்த உரம் இன்று எப்படி தருமனிடம் வந்தது.

திரௌபதி சொன்ன அன்னப்பறவைக்கதையில் இருந்து அன்னமும், கூகையும் ஓருதாய் பிள்ளைகள் என்று அறிகின்றான் அதோடு இரண்டும் ஒன்றாகவே இருக்கமுடியும் என்பதையும் அறிகின்றான். இறுதிக்கதையின் மூலம் ஒரே தன்மையுடைய மூன்று செயல்கள் நன்றுதீதுகளை அறியும் வரை ஒன்றாக இருக்காது என்பதை அறிகின்றான். இந்த இடத்தில்தான் தருமன் ஷத்ரியன் ஆக இருப்பதற்கும் நூல்கற்றல் அவசியம் என்பதை உணர்ந்து இருப்பான். வள்ளுவர் மறத்திற்கும் அன்பு சால்பு என்பதுபொல். 

திரௌபதி தருமனிடம் அவனது சுயதர்மம் நூல்கற்றல் என்பதை அறிந்து அவன் பலமும் என்று காட்டிவிட்டாள். குறிப்பாக தருமன் கேசத்தில் இருக்கும் சுருள்களை “நல்ல இல்லை இனி இது தேவை இல்லை“ என்று சொல்லி அவன் செயற்கையாக அர்ஜுனன்போல் இருக்கதேவை இல்லை தருமனாக இருப்பதே பெரிது என்று காட்டிவிட்டாள்.

கேசம் என்பது அறிவின் அடையாளம் என்பதை திரௌபதியின் கூந்தலைப்பற்றி எழுந்த கேள்விகள்போது அறிந்தேன் அதையே தருமனுக்கும் கொண்டால். அவன் அறிவு அவன்போல் இருப்பதை காட்டினால் போதும் என்று திரௌபதி நினைக்கின்றாள் என்ற இடத்தில் இன்றைய தருமன் பிறந்துவந்திருக்கிறான்.

சுயசோதனை செய்பவனே சத்தியசோதியாகுகிறான் மற்றவர்கள் எல்லாம் சத்தியத்தை சோதிக்கிறவர்களே ஆகின்றார். திரௌபதிக்கு தான் சொல்லிய சொல்லிலும் திரெளபதி தனக்கு சொல்லிய சொல்லிலும் சுயசோதனை செய்கின்றான் தருமன். 
  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.