Thursday, February 19, 2015

வெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.


தண்ணீர் குளிரும் என்பது தெரியும். இது இயற்கை, சாலையில் உள்ளதாரும், மண்டையில் உள்ள மூளையும் உருகிவழியும் அளவு வெயில் அடிக்கும்போது கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்தால் கல்குளிரும் இதுவும் இயற்கைதான்.

அறத்திற்கே அன்புசார் என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை-என்கின்றார் வள்ளுவர்.

மென்னுடல் படைத்த தருமனையும், வல்லுடல் படைத்த பீமனையும் திரௌபதி கட்டியாள்வது அவரவருக்குள்ள அன்பின் பொற்கரங்களை தனதாக்கிக்கொள்வதன் மூலம்தான்.

படிக்கின்ற பசங்களுக்கு ஆசிரியர்கள் மிகநெருக்கமாகிவிடுவார்கள், அந்த ஆசிரியர் என்மீது மட்டும்தான் அன்பை பொழிகின்றார் என்ற ஒரு கர்வம் வந்து சேர்ந்துவிடும். படிக்காத பசங்களுக்கு ஆசிரியர் எதிரிபோல் ஆகிவிடுவாரா? இவர் என் ஆசிரியர் என்று அவர்கள் இதயங்களிலும் ஆசிரியருக்கு இடம் இருக்குமா? இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

எல்லா வகுப்பிலும் கடைசிப்பெஞ்சில் உட்காரும் ஒரு நண்பன்.அவன் உடம்பும் உயரமும் அங்கு அவன் உட்காருவது சரிதான் என்று நினைத்தாலும், அவனுக்கும் படிப்பிற்கும் அவனுக்கும் வகுப்பிற்கும் அவனுக்கும் ஆசிரியருக்கும் அவ்வளவு தூரம் என்பதும் அவன் உட்கார்ந்து இருக்கும் இடத்தில்இருந்தே அறியலாம். படிக்கமட்டும்தான் அவனால் முடியாது. விளையாடுவான்,விளையாட்டு காட்டுவான். வகுப்பிற்கு ஒன்று தேவை என்றால் அது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எடுத்துவந்து தந்துவிடுவான். அப்படி ஒரு நண்பன் என் வகுப்பிலும் இருந்தான். அவன்தான் எனக்கு பிடித்த அறிவியல் ஆசிரியருக்கு சிறுசிறு பணிவிடைகள் செய்வான். கடிதம் போஸ்ட் செய்வான். கடைக்கு சென்று கேட்டதை வாங்கிவந்துதருவான். தேனீர்வாங்கிவந்து தருவான். ஒருநாளாவது நம்முடைய பணிவிடையை இருவர் கேட்டுபெறமாட்டாரா என்ற ஆசை எனக்கு. ஓருநாள்ஆசிரியருக்கு அவன் தேனீர்வாங்க சென்றான் நானும் கூட சென்றேன்.

“நான் எடுத்துகிட்டுபோயி சாருக்கு கொடுக்கின்றேன்டா” என்றேன். ”வேண்டாம்” என்றவன் என்னநினைத்தான் என்று தெரியாது, “நான் சிந்தாமல் எடுத்துவந்து ஸ்கூலுக்கு பக்கதில் தருகின்றேன், நீ எடுத்துப்போயி சாருக்கு கொடுடா” என்றான். அவன் சொன்னது சரிதான். அவன் சொன்னபடியே செய்தேன். சார் என்னைப்பார்த்தார், ஒன்றும் சொல்லவில்லை. அவர் முகத்தில் விருப்போ விருப்போ எதுவும் இல்லை. நான் விரும்பிய அல்லது எதிர்ப்பார்த்த ஒன்று அதில் இல்லை. அதன்பின் அப்படி ஒரு பணிவிடைகள் செய்ய விரும்பியதே அர்த்தம் அற்றது என்று தோன்றியது. . அவன்தான் மீண்டும் மீண்டும் அந்த வேலையை செய்தான். அவனைதான் அவரும் விரும்பினார். அந்த ஆசிரியர் நினைவு வரும்போது அந்த நண்பனும் நினைவுக்கு வருகின்றான். எனக்கு பிடித்த ஆசிரியர் என்று நான் நினைப்பதுபோல் அந்த நண்பன் என்ன நினைப்பான் என்று நினைப்பேன்? “ஆசிரியருக்கு பிடித்த நான்” என்று நினைத்துக்கொள்வான் அல்லவா?. எங்கோ ஒரு இடத்தில் அவன் உயர்ந்து நிற்கின்றான். அன்று மிக ஆழத்தில் அவன் கிடப்பதாகத்தான் நினைத்தேன்.

நின்றும் இருந்தும் நடந்தும் கிடந்தும் அன்னை அபிராமியை பாடும் அபிராமிப்பட்டர் அன்னையை “துணையும் தொழும் தெய்வமும் பெற்றதாயும்” என்று பாடுகின்றார்.  துணையாக இருப்பர் எத்தனை பலமானவராக இருந்தாலும் தனது வல்லமையின் மூலம் பணிவிடை செய்து செய்து இன்பம் பெறுவார்கள். தெய்வமாக இருப்பவர்கள் பணிவிடையை பெற்றுபெற்று இன்பம் பெருவார்கள். பெற்றதாயாக இருப்பவர் பணிவிடை செய்தும் இன்பம் பெறுகிறார். பணிவிடையைப்பெற்றும் இன்பம் பெறுகின்றார். தருமனை அன்னையாக்கிய திரௌபதிதான், பீமனை துணையாக்கினாள். நல்ல பணியாளன் கூலிதரவில்லையே என்று வருந்துவதில்லை மாறாக உனது பணி தொண்டு உழைப்பு எனக்கு வேண்டாம் என்றால் வருந்துகின்றான். அவனிடம் அது செய்துகொடு இது செய்துகொடு என்று சொல்லச்சொல்ல உற்சாகத்தின் முடிவிலிக்கே செல்கின்றான். அவன் களைப்படைவதே இல்லை. “உங்களுக்க களைப்பே இல்லையா” என்று திரௌபதி கேட்பது எத்தனை நுட்பம் அமைந்தது. பணிவிடைகள் செய்யும் தொண்டன் துணைவன் செயல்..செயல்..என்று செயல் செய்வதன்மூலமே உற்சாகம் பெருகின்றான். வாழ்ந்ததாக உணர்கின்றான். செயல் செய்யாத நாட்கள் அவன் உற்சாகம் இழக்கின்றான்.  செயலில் அடங்காத  காற்றுபோன்றவனை அடக்க நினைக்காமல் அவனுடன் சேர்ந்து பறக்க நினைத்த திரௌபதி வாழ்வின் நுட்பத்தில் மிக ஆழத்திற்கு செல்கின்றாள்.

நீர் மென்மையானது ஆனால் எத்தனை பெரிய கனமான பொருளும் நீருக்குள் இருக்கும்போது தனது எடையை இழந்து மென்யாகி இழுத்து
செல்ல இலகுவாக ஆகிவிடுகின்றது. பீமனை நீர் விளையாட்டில் ஆழ்த்தி எடையற்றவனாக ஆக்கி தனது மனஇச்சைக்கு ஏற்றபடி வெகுதூரம் இழுத்து செல்லும் திரௌபதி மீண்டும் ஒரு உளவியில் நுட்பத்திற்குள் நுழைந்து வெல்கின்றாள். பணிவிடை பெறுவதன்மூலமே இவனை இன்பம் அடையவைக்கமுடியும் என்று அறிந்து அது ..அது என்று கேட்டுகேட்டு அவன் வல்லமையை பெரிதாக்கும் திரௌபதி கேட்பதன் மூலமும் விளையாடுவதன் மூலம் தன்னை சிறுமி என்று நடித்துக்காட்டிச்செல்கிறாள்.

நீந்தும் திரௌபதியை ஆண்ணெனக் கண்டுகொள்ளும் பீமன் எங்கோ ஒருமூளையில் துரியோதன் நட்பை இழந்த வேதனைக்கு திரௌபதி மருந்தெனவும். இடும்பிக்கி நிகர் என்றும் கண்டுக்கொள்வான். நீர் என்று இடும்பியை எண்ணும் பீமன் அவளுக்குள் இருந்த நெருப்பில் குளிர்காய்ந்ததுபோல், நெருப்பென திரௌபதியை எண்ணும் பீமன் இவளுக்குள் உள்ள குளிர்ச்சியில் அகம் சிலிப்பான். குளிர்காய்தலும், குளிர்ச்சியை அடைதளும் உடல்பெரும்சுகங்கள். அதை இடும்பி திரௌபதிவழியாக அடையும் பீமன் ஒரு முழுமையான உடலுக்கு சொந்தக்காரன்தான்.

துருவனை விரும்பும் திரௌபதி பீமன் கண்ணுக்கு   தருமனாக தெரிய. தருமன் வாசித்த கதையை தான் வாசித்ததாக உணரும் பீமன் திரௌபதி கண்ணுக்கு தருமனாக தெரிய,  உச்சத்தை நோக்கி செல்லும் வெண்முகில் நகரம்-9. பாண்டவர்கள் பாஞ்சாலி என்று சொல்வது எல்லாம் பிரித்துப்பார்க்க பயன்படுத்தும் பெயரன்றி வேறு இல்லை. அவர்கள் அறுவருமே ஒன்றுதான். அற்புதம் ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.