Sunday, March 22, 2015

பெண்களின் அரசு:

   

மனிதர்களால்  உருவாக்கப்படும் ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பின்னால் பெண்களின் விழைவே உள்ளது. அது எளிய வீடோ பெரிய மாளிகையோ அல்லது பெரு நகரமோ என்றாலும், அதை ஆண்கள் தான் பெரும்பாலும் உருவாக்கியிருப்பார்கள் என்றாலும், ஒரு பெண்ணின்  பெரு விழைவு அவற்றின் அடித்தளமாக இருக்கவே செய்யும். அல்லது குறைந்த பட்சமாக ஒரு பெண்ணை ஈர்க்க வேண்டும் என்ற காரணமாவது இருக்கும்.

 பறவைகளும் பூச்சிகளும்  பெண் இணைகளுக்காகவே கூடுகளை அமைக்கின்றன. பெண் உயிர்களே அந்தக் கூட்டினை ஆள்கின்றன. ஒரு தேன் கூடு தேனிக்களின் பார்வையில் ஒரு பெரு நகரம். அதை அமைத்து ஆள்வது ஒற்றை பெண் தேனியின் விழைவு. ஒவ்வொரு ஆணும் தன்னை ஓர் அரசனாக எண்ணுவதில்லை. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஓர் அரசியாகவே கருதிக்கொள்கிறாள். தனக்கென ஓர் அரசை அவள் அமைத்துக்கொள்கிறாள்.  அவ்வரசு ஒரு அறை, வீடு, பெரு மாளிகை, அரசு  பேரரசு என விரிந்துகொண்டே செல்வது.  அதை நிறைவேற்றிக்கொள்ளவும், அவ்வரசை  பேணவும் அவள் தன் ஆணிணையை இரக்கமின்றி பயன்படுத்திக்கொள்கிறாள்.  

ஒரு பெண்ணால் இந்த அரசை துறப்பது என்பது மிகக்கடினம். அதனால்தான் முக்தியின் பாதையில் விதிவிலக்கானவர்களை தவிர பெரும்பாலும் பெண்கள் செல்வதில்லை. பெண்ணின் விழைவுகளை பூர்த்திசெய்வதே ஆண் தன்னை ஆணென காட்டும் என நினைக்கிறான். ராமனைப்போல் அவ்விழைவு  மாயமானாக இருந்தாலும்  துரத்தி ஓடுகிறான். ஆண்கள் பெண்களின் விழைவுகளை பூர்த்திசெய்யும் வெறும் சேவகர்களே.பெண்களின் கனவுகளே மனித சமுதாயத்தின் கட்டுமானங்களின் அடிப்படை. பெண்களின் ஆக்கும் சக்தி. அவர்களின் விழைவுகளுக்கு தடைசெய்பவையை அழிக்கும் ஆவேசமும் அமையப்பெற்றவர்கள். தான் அழிந்தாலும் தன் விழைவு நிறைவேற வேண்டும் என்ற அவர்களின் உத்வேகத்திற்கு நான் அஞ்சி தலைவணங்குகிறேன்.

    இந்த இயல்பே குந்திக்கும் பாஞ்சாலிக்கும் இருக்கிறது. பாண்டவர்களை குதிரையை சாட்டையால் அடித்து விரைவுபடுத்துவதைப்போல சொற்களாலும் செயல்களாலும் அடித்து  நாட்டை அடைய தூண்டுகிறார்கள். குந்தி ஒரு சாதாரண யாதவப்பெண். அவளுக்கு ஒரு நாட்டை அடைவது கனவு. ஆகவே தனக்கு கிடைத்தும் கிடைக்காமலும் இருக்கும் அஸ்தினாபுரியை அடைவது அவள் லட்சியம். அவள் லட்சியம் அங்கே முடிந்துவிடுகிறது. ஆகவே குந்தியின் திட்டமிடல்கள் அதற்கேற்ப அமைகின்றன. 


   ஆனால் திரௌபதி ஏற்கெனவே ஒரு நாட்டின் இளவரசி. ஆகவே இன்னொரு நாட்டின்  நாட்டின் அரசியாவது அவளுடைய் இறுதி நோக்கமாக இருக்காது. அதை தாண்டி பேராரசின் அரசியாவதே அவள் நோக்கம். ஆகவே அஸ்தினாபுரியின் ஆட்சியைப்பெறுவது அவள் ஓட்டத்தை நிறுத்திவிடும். அதை அவள் விரும்பவில்லை. அவளுக்கு அஸ்தினாபுரம் போதாது. ஆகவே  அவள் மேலும் பெருகி வளரும் வாய்ப்புள்ள ஒரு அரசை நிறுவ நினைக்கிறாள். அதற்கேற்ப அவளுடைய திட்டமிடல்கள் அமைகின்றன. குந்திக்கு திரௌபதி எதிரானவள் அல்ல. திரௌபதி குந்தியின் நீட்சி. குந்தி அதை அறிந்து மெல்ல மெல்ல திரௌபதியை அங்கீகரிப்பாள் என நினைக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்