Thursday, March 26, 2015

கண்ணன் களி



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வாழ்க்கை என்ன ஒரு அற்புதமான விதியின் விளையாட்டு. காந்தாரத்தில் இருந்து சகுனி அஸ்தினபுரம் வந்த அன்று நினைத்திருப்பானா கண்ணனோடு விளையாடுவேன் என்று?. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு விளையாட்டுதான் ஆனால் அதுதான் வாழ்க்கை, வரலாறு, விதி எல்லாம்.  முன்னே விளையாட வந்தவன் பின்னே வந்தவனுடன் விளையாடித்தோற்கும் இந்த ஆட்டம்தான் வாழ்க்கையின் உச்சபட்ச காட்சியா? கடவுளின் உளக்களி விருப்பமா? 

தேர் ஓடும் வாழ்க்கை என்று
ஓடோடி வந்த என்னை
போராட விட்டானடி 
கண்ணில் நீரோட விட்டானடி -என்று சொல்லும் கண்ணதாசன்.
கையளவு உள்ளம் வைத்து
கடல்போல் ஆசைவைத்து
விளையாட சொன்னானடி
அவனே விளையாடி விட்டானடி என்று வாழ்க்கையை கவியாக்கிப்போவார். 

“ஒருவாயில் கோட்டை” என்று பகடை ஆட்டத்திற்கு சகுனியை அழைத்து அதன் மூலமே சகுனியிடம் உள்ளும் புறமும் விளையாண்டுப்போகும் கண்ணன் “ஒளிக்கு முன் இருள் என்று ஒன்று இருக்கவே  முடியாது” என்றுக்காட்டிப்போகின்றான். இருள் எத்தனை பழசாக இருந்தால் என்ன? ஓளி ஒரு குழந்தை.  இருளின் உருவும் உயிரும் துடைத்து எறியப்பட்டுவிடும்.

சகுனிக்கு நிகரென கண்ணனை வைக்கலாம் என்று சொல்லலாம் என்றாலும் கண்ணனுக்கு நிகரென சகுனி இல்லவே இல்லை.  

மீண்டும் வாழ்க்கையின் விதியை நினைத்துப்பார்க்கின்றேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் முன்னமே விழுந்த விதையில் முளைத்தக்காட்டை நாளை பிறக்கும் ஒரு மனிதன், அவன் பிறப்பானா என்று நினைக்ககூட முடியாத நிலையில் ஒருவன் நாளைபிறந்துவந்து அந்த முழுகாட்டையும் தீவைத்து அழிப்பான் என்றால் வாழ்க்கையின் ஸ்திரம் எங்கு உள்ளது. சகுனிச்சொல்வதுபோல வாழ்க்கையின் வெறுமையில் நான் என்பதை ஊற்றி ஊற்றி உருவாக்கிக் கொள்ளும் உருவங்கள் மட்டும்தான் வாழ்க்கை. வெறும் கனவு. கனவு மட்டும்தான்.

சகுனியின் வாய்மொழியில் சொன்னால் இன்னும் அதிக உக்கிரமாக இருக்கிறது இந்த கனவு. நான் கனவுகண்டுகொண்டிருக்கிறேன்.கனவைக் காண மட்டுமே முடியும்கனவை மாற்றியமைக்கும்வல்லமை அதை காண்பவனுக்கு அளிக்கப்படவில்லைபதைபதைக்கஅதை வெறுமேனே பார்த்திருப்பதனாலேயே அதன் வதைபெருகிப்பெருகி சூழ்ந்து அள்ளிக்கொள்கிறது

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள-என்கின்றார் திருவள்ளுவர். இது பிடித்த பெண்ணை விரும்பும் ஆணின் மனநிலை. உலகத்திலேயே ஒருவனுக்கு பிடிக்காத ஒரு ஆண் இருந்து அவனை சகுனியின் கண்கொண்டுப்பார்த்தால் இந்த திருக்குறளில் தெரிவது கண்ணன். மற்றவர்களை திடுக்கிட செய்வதற்காகவே பிறந்த சகுனியை ஒரு நொடி திடுக்கிட வைத்த இந்த கண்ணன் கடவுள் மட்டும்தானா?

மனிதர்கள் அனைவருமே மகிழ்சிக்காக விளையாடுபவர்கள்தான் ஆனால் விளையாட ஆரம்பித்தால் அவர்களிடம் மகிழ்ச்சி என்பதே இருப்பது இல்லை அது வித்தையாக இருந்தாலும் மெத்தையாக இருந்தாலும். தோற்றுவிடக்கூடாதே என்ற பயம்தான் எடையாகி இருக்கிக்கொண்டு மகிழ்ச்சியை தின்றுவிடுகின்றது. மகிழ்ச்சி ஒன்றையே விளையாட்டாக மாற்றுவது குழந்தை மட்டும்தான். குழந்தையாகவே இருக்கும் கண்ணன் விளையாடுவது மகிழ்ச்சிக்காக இல்லை, மகிழ்ச்சியையே விளையாட்டாக மாற்றுவதற்குதான். அவன் செருகளத்தில் நின்றாலும் சேலையுளத்தில் நின்றாலும் அவனால் மட்டும் அவனாகவே இருக்க முடிகின்றது. இவன் எங்கு சென்றாலும் ஒரு பாதி ராதையுடனும், மறுபதி கம்சனுடனும் இணைந்தே இருப்பதுபோல் இருக்கிறது. எத்தனை அழகான குழந்தையாக இருந்தாலும் கடைசியில் தனது நரசிம்பப்பல்லை குருதிவடிய வடிய காட்டி சிரிக்கின்றான்.  

அன்று ஒருநாள் குழியில் விழுந்து தன்உடல் சதையை தானே தின்றுபிழைத்தவனை பின்தொடர்ந்து அவன் மனநிலையை ஆய்வேன் என்று சொன்ன சகுனி இன்று கண்டுக்கொண்டது தன்சதையை அறுத்து தனக்கே ஊட்டியவனையா? கண்ணன் களி என்பது இதுதான் என்று நினைக்கின்றேன். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்