Monday, March 16, 2015

ஒலிநடை





ஜெ,
இன்றைய (10/Mar/2015) வெண்முரசில் (http://www.jeyamohan.in/72605), இடையின எழுத்துகளான ல, ள, ழ போன்றவை நிறைய இருப்பது போல் தோன்றியது எனக்கு. இடை(யர்) இனத்தை பற்றி இடையினத்தில்!! பல வரிகளை உரக்கவே படித்துப் பார்த்தேன். படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருந்தது ஏனென்று தெரியவில்லை.

- நீலம் ஒளிவிட்ட நீருள் பச்சைப்பாசி படர்ந்து அலையொளிவாள்கள் சுழன்று சுழன்று பரவ விரிந்திருக்கும் தொல்துவாரகைக்குமேல் வெள்ளிவால்கள் அலைக்கழிய வெள்ளிச்சிறகுகள் துழாவ விழித்த பெருவிழிகளுடன் உகிர்ப்பற்கள் தெரியும் பசித்த வாய்களைத் திறந்து சுறாக்கள் மிதந்தலைந்தன.

- மீன்நிழல்கள் பறந்து சென்ற முகடுகளுடன் பல்லாயிரம் ஆண்டுக் கடுந்தவத்தில் உறைந்திருந்தது தொல்துவராகைப்பெருநகர். அதற்கும் அப்பால் மேலும் ஆழத்திலிருந்தது அதற்கும் முந்தைய கிருஷ்ணனால் அமைக்கப்பட்ட ஆழ்துவாரகை. மானுட விழிகள் செல்லமுடியாத இருண்ட கடலாழத்தில் அது இருட்பாளங்களால் ஆன சுவர்களும் இருள்குமிழிகளால் ஆன குவைமாடங்களும் இருள்படிகளுமாக நின்றிருந்தது. இருளுக்குள் நீர்க்குமிழிகள் செல்லும் மெல்லிய ஒளியொன்றே இருந்தது. அந்தத் துளிவெளிச்சம் பட்டு விழிமின்னின கடலுண்ட மூதாதையரின் விழிமுனைகள்.

​நன்றி​​

டி கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

சுவாரசியமான அவதானிப்பு. அந்தப் பத்திகளை வாசித்துப்பார்த்தேன். பெரும்பாலும் ஒரு மொழிநடை அதற்குரிய ஒலியுடன் எனக்குள் வந்துவிடுகிறது என்று பட்டது

சந்தம் அமையும்போதே தமிழ் அழகுகொள்கிறது. ஏனென்றால் அடிப்படையில் இது ஒரு பழங்குடி மொழி. தொல்பழங்குடிகளாக நாம் நம்மை உணரச்செய்யும் மொழி

ஜெ