Tuesday, April 21, 2015

உண்பதும் விழுங்குவதும்




உண்பது என்பது வெறும் விழுங்குதல் அல்லமனிதர்களின் இவ்வுலகவாழ்விற்காக அளிக்கப்பட்டிருக்கும் இரு பரிசுகள் உணவின்பமும். உடலுறவின்பமும் ஆகும். இரண்டும் அடிப்படையான இரு இன்பங்கள். இவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. மற்ற இன்பங்கள் பெரும்பாலும் இவ்விரு இன்பங்கள் மேல் கட்டப்பட்டவை. சில இன்பங்கள் அவனுக்கு பயிற்றுவிக்கப்பட்டவை. அவை மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும்.  உண்பது,  தான் உயிர் வாழவும், உடலுறவு, தன் சந்ததி வாழவும்  இன்றியமையாததாக இருக்கின்றன.

   உண்பது உணவை விழுங்குவதில் முடிவடைந்தாலும் உணவின்பம் விழுங்குவதில் மட்டும் இல்லை. உணவைத்  தேடி கொணர்ந்து அதை பக்குவப்படுத்துவதிலேயே உணவின்பம் ஆரம்பித்துவிடுகிறது. பின்னர் அவ்வின்பம் உணவை காண்பதில், அதன் வாசத்தை முகர்வதில், தொட்டெடுப்பதில், நாவிலிட்டு சுவைப்பதில், மேலும் மேலும் வளர்ந்து, விழுங்கப்பட்டு வயிறு நிறைவதில் முழுமையடைகிறது. உணவின்பத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த மொத்த அனுபவத்தையும் கூறுவதுதான் ஓரளவிற்கு முழுமையானதாகும்.  உணவை விழுங்குதலில் மட்டும் இருக்கும்  இன்பம் மிகச்சிறிதே.
  
   உடலுறவு இன்பமும் இதைப்போன்றதுதான். தன் இணையை தேடிக் கண்டடைந்து அவர் மனதை தன்னை விரும்பும் வண்ணம் பக்குவபடுத்தி தன் ஐம்புலன்களாலும் தன் இணையின் உடலை அறிந்து, பின்னர் தன் முழு உடலையும் நாவாய்க் கொண்டு இணையின் உடலை உணவாய் சுவைத்து, சுவைக்கப்பட்டு  உறவு கொண்டு நிறைவடைவதுதான்  ஒரு முழுமையான உறவின்பம்.  வெண்முரசில் வரும் அத்தனை உறவுகளும்  இந்த முழுமையைக்கொண்டிருக்கின்றன. ஒன்றைப்போல் ஒன்றமையாமல் தனித்துவமாக இருக்கின்றன. சமீபத்தில் துரியோதனன் என்ற இறுகிய கடினமான உணவுப்பண்டம் பானுமதியின் காதலால் சமைக்கப்பட்டு மென்மையாவதை காண்கிறோம்.

   இவற்றில் மனதை நெருடும் ஒரு உறவு அர்ச்சுனன் திரௌபதியிடம் கொள்ளும் வல்லுறவு. ஆனால் அந்த நிகழ்வை கடப்பதற்கு இதைத் தவிர திரௌபதிக்கே வேறு வழியில்லை. அர்ச்சுனன அவள் தோழியினிடம் உறவுகொள்வதின் மூலம் தான் இத்தகையவன்தான் என வெளிப்படையாக காட்டிக்கொள்கிறான். நான் உனக்காக மாற மாட்டேன் என்ற செய்தி அதில் உள்ளது. மற்றும் அவன் திரௌபதி ஐவரை மணக்க சம்மதிப்பதில் உள்ளூற  கோபம் கொண்டுள்ளான் எனவும் நினைக்கிறேன்.

திரௌபதி அர்ச்சுனன் மேல் மையல் கொண்டவள் தான் என்றாலும் அவள் அவன் செய்த இந்த அடாத செயலை பொருட்படுத்தாமல் விடுவது அவள் தன்மானத்திற்கு இழிவாகிவிடும். இதுவரை அவள் கொண்டிருந்த நிமிர்வை இழந்தவளாகிவிடுவாள்.  அதனால் அவள் அர்ச்சுனனுக்கு அவளாக இணங்கவில்லை என காட்டுவதன்மூலம் தன் நிமிர்வை காத்துக்கொள்கிறாள். அர்ச்சுனனும் இந்த நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான் என நான் நினைக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்