Thursday, April 30, 2015

உறவுகளும் கிருஷ்ணனும்



ஜெ,

வெண்முரசில் துரியோதனனும் பாண்டவர்களும் சந்திக்கும் இடம் மிக நெகிழ்வானது. இதைப்போல மனிதமனங்கள் ஒரு உச்சியிலே ஒன்றுடன் ஒன்று தழுவிக்கொள்ளும் ஏராளமான இடங்கள் இதற்குள்ளாகவே வெண்முரசிலே வந்துவிட்டன. ஒவ்வொன்றும் பெரிய மன எழுச்சியைத்தான் உருவாக்குகின்றன. ஏன் என்றால் அதில் அந்தக் கதாபாத்திரங்களின் peak என்னஎன்று தெரியவருகிறது.

துரியோதனனின் பெருந்தன்மையைப்பார்க்கும்போது ஒன்றை நினைத்துக்கொண்டேன். அவனும் அவன் அப்பா போல மல்யுத்தக்காரன். மல்யுத்தம் செய்யக்கூடியவர்களுக்கு அந்த அணைத்துக்கொள்ளும் மனநிலை இருக்கிறது. மல்யுத்தமே அணைப்புதானே. திருதராஷ்டிரர் அன்பாக இருக்கும்போதும் நாம் தோள்கோர்க்கவேண்டும் என்றுதான் சொல்கிறார்

அதைப்போலவே துரியோதனனும் இருக்கிறான். அவனுடைய வஞ்சல் எல்லாமே கட்டிப்பிடித்தால் தீருவதுதான். மிக நைச்சியமாக அங்கே கிருஷ்ணன் அழைத்துச்செல்கிறான். கிருஷ்ணன் அந்த சகோதரர்களைச் சேர்த்து வைப்பதற்குச் செய்யும் முயற்சிகளும் அதற்கு அவனுடைய மனநிலையும் அழகாக ச் சொல்லப்பட்டுள்ளன.

கிருஷ்ணன் போரை நிகழ்த்திவைத்தான் என்று சொல்கிறார்கள். அவன் போர் நடக்காமலிருக்கவே எல்லாத்தையும் செய்தான். போர் நடக்கும் என்பது உறுதியானபிறகுதான் பாண்டவர் ஜெயிப்பதற்கு என்ன வேனுமோ அதைச்செய்ய ஆரம்பித்தான். இந்தச் சித்திரத்தை இன்றைய அத்தியாயம் வலுவாக்ச் சொல்லிவிடுகிறது

சரவணன்