Friday, April 17, 2015

சுற்றம் சூழ்ந்தவன்



ஜெ,

வெண்முரசின் இனிமையான அழகான பகுதிகள் வந்துகொண்டிருக்கின்றன. துரியோதனனை அழகான கணவனாக பார்ப்பது பெரிய மனநிறைவை அளிக்கிறது. ஏனென்று சொல்லத்தெரியவில்லை. நமக்கு வரலாற்றுநாயகர்களை அப்படி எதிர்மறையாகப்பார்ப்பதற்குப்பிடிக்கவில்லை என்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஏனோ மனது கஷ்டமாக இருந்தது. அவனுடைய குணாதிசயம் யானையைப்போல சுற்றம் சூழ வாழ்வது என்பது அற்புதமான உவமை

அதேபோல அர்ஜுனனின் குணாதிசயம் என்பது வேங்கை போல தனித்து அலைவது என்பதும் அழகான ஒப்புமைதான் இல்லையா? திருதராஷ்டிரரும் மக்களைப் பெற்று உடல்மேல் வைக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறார். நீங்களே சொன்ன உவமைதான் பலாமரம் காய்த்ததுபோல திருதராஷ்டிரர் மக்களை சுமந்துகொண்டு வாழ்கிறார். பாண்டு சொன்னது மழைப்பாடலில்

இந்த சித்திரங்கள் வழியாக மகாபாரதம் திரும்பி திரும்பி வேறு வேறு நிறங்களைக் காட்டிக்கொண்டிருப்பதுதான் வெண்முரசின் முக்கியமான அழகு என்று நினைக்கிறேன்

ஸ்ரீதர்