Wednesday, April 15, 2015

விலகுதலும் அணுகுதலும்



இனிய ஜெயம்,

ஒவ்வொரு நாளின்  துவக்கத்தையும், இணையற்ற வாழ்க்கைத் தருணங்களுடன், மன உலகைப் பிணைத்தபடி துவங்குவது எத்தனை உவகையான ஒன்று. 

யானை அடி.  முதல் இரு  அத்யாயங்கள்  மட்டுமே தன்னளவில்   முழுமையானதொரு சிறுகதை.  கிருபை, கலுஷை  இவர்கள்  ஆளுமை  முற்றிலும்  தனித்துவமான ஒரு புள்ளியில்  குவிகிறது. ஒருக்கால்  அவர்கள் இருபாலினத்தவராக இருப்பதால்தான், ஆண், பெண்  உடல்களை  'விலகி நின்று அறியும் 'கலையை  தன் இயல்பாக கொண்டிருக்கிறார்களோ?

யோக மரபில், உடலின் நிகர்  நிலை  குறித்து  பெரிய அளவில் ஆய்வுகள் உண்டு.  நிகர் நிலை  கொண்ட  உடலைக் கொண்டு இந்த புவிக்கு வந்தவன், ''இங்கே'' பெரிதினும் பெரிது எதுவோ, அதுவன்றி வேறு எதைக் கொண்டும் அமைய மாட்டான்.  உடல் அமைப்பால்  இந்த இயற்க்கை அவனுக்குள் எழுதி விட்ட செய்தி அது.  துரியன் மெய்மையின் சிகரத்தை விழைந்திருக்க வேண்டியவன். ..விதி.. ஹச்தினாபுரியின் பீடம் நோக்கி அவன் திரும்பியது விதியன்றி வேறென்ன?  திரௌபதியின் விழிகளுக்குள் நோக்க இயலாமல் கிருஷ்ணன் கூட விழி திருப்பிக் கொள்கிறான்.  கிருஷ்ணையும்  நிகர் உடல் கொண்டு இங்கு ஜனித்தவள்.  அவளுக்கும் இலக்கு பாரத வர்ஷம்  முழுமைக்குமான அரியணையே.  

காந்தாரி கிருஷ்ணன் வசம் துரியன் நிலை குறித்து சொல்கிறாள், தாய்மை, காமம், இந்த இரண்டுமின்றி  ஒரு பெண்ணின் ஆளுமையால் அவன் கட்டப்பட்டு இருக்கிறான்.  

ஸ்தூனகர்ணன் முன் துரியன் தன் தவம் வழியாக, தனக்குள்ளிருந்து எந்த 'பெண்' அம்சத்தை கொன்று அழித்தானோ அவளின் ஸ்தூலமே திரௌபதி.

கடலூர் சீனு