Wednesday, April 15, 2015

வெட்டவெளி மனம்


சிற்றின்பத்தை எப்படி அனுபவிக்கலாம்? காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, தன்னையும் கரைத்து மற்றொருவரையும் கரைத்து ஒன்றாகி அனுபவிக்கலாம் அல்லது காமமாகி பொங்கி வெந்நீராகி தன்னையும் வேகவைத்து, பிறரையும் வேகவைத்து பிச்சித்தின்று அனுபவிக்கலாம்.
காதல் மற்றொரு உயிரை தன்னுயிராக நினைத்து உருக்கி ஒன்றாக்குவது.  காமம் தன்னுடைய உடம்பையே இன்னொரு உடம்பில் பிய்த்து பிரித்து வைப்பது.

பெரும் உடல் கொண்ட துரியோதனன் காமத்தில் மூழ்காமல், காதலில் மூழ்கிய அந்த அபூர்வ கணத்தை  போற்றுகின்றேன். எது அவனுக்குள் அந்த காதலை ஊற்றெடுக்க வைத்திருக்கும்? பெண் பிறந்தால் கிருஷ்ணை என்று பெயர்வைக்கவேண்டும் என்ற கணத்தில் அவனை கொண்டுவந்து நிறுத்திய அந்த ஆதிக்கணம். அந்த விதையை அவனுக்குள் ஊன்றிய திரௌபதியை இன்று போற்றுகின்றேன். 

அன்புள்ள ஜெ, ஆண்பிறந்தால் கிருஷ்ணன் என்று பெயர் வைப்போம், பெண்பிறந்தால் கிருஷ்ணை என்று பெயர் வைப்போம் என்று என்னும் இருவரை சேர்த்து காதல் கொள்ள வைத்த அந்த கணத்தை வியக்கின்றேன். உங்கள் ஞானத்தை போற்றுகின்றேன். சிற்றின்பம் அனுபவிக்க வந்த இருவரும் ஒரு பேரின்ப பரவெளியில் வெட்டவெளியில் நிற்கும் காட்சி. 

தனது மனதில் காதலனாகவோ, தந்தையாகவோ வடிவம் கொள்ளாத ஒரு ஆணைக்கண்டுக்கொண்டு அவனை நினைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணும், தனது மனதில் காதலியாகவோ, தாயாகவோ வடிவம் கொள்ளாத பெண்ணைக்கண்டுக்கொண்டு அவளை நிணைத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஆணும் சந்தித்துக்கொள்ளும் கணத்தில் அந்த இருமணங்களும் வெட்டவெளியாகி நிற்பதைக்கண்டு அசைவின்மை உணர்ந்தேன். கரவற்ற மனத்தின்  பெரும்வெளி என்று காட்டும் பானுமதி, தனக்கென்று ஒரு தனி மனதை வடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமற்ற துரியன் மனம். இப்படி வெட்டவெளியாக நிற்கும் இரு மனம் இணையும் திருமணம் என்பது வரம்தான் ஆனால் அதுதான் பெரும் சாபமும்கூட.  உருவத்திற்கு என்று ஒரு வடிவும் கனமும் இருப்பதால் அதை சுமப்பதோ, இறக்கிவைப்பதோ எளிதான காரியம். வெட்டிவெளிக்கு வடிவமும் இல்லை, அதற்கு கனமும் இல்லை அதனால் அதை இறக்கிவைக்கமுடியவில்லை, கனமில்லாவிட்டாலும் அதை சுமப்பது எளிதானதும் இல்லை. ஒவ்வொன்றையும் அந்த வெட்டவெளி தனது இருப்பிடமாக அக்கிக்கொண்டுவிடும் என்பதால் ஒவ்வொன்றும் ஒரு சுமையாகிவிடும்.
பானுமதியின் கிருஷ்ணன் என்ற ஒரு சொல்லும், துரியோதனனின் கிருஷ்ணனை என்ற ஒரு சொல்லும் எத்தனை கனமானவைகள் இந்த நேரத்தில். கணந்தோறும் கனம் கொள்ளும் சொற்கள். மனதில் கொஞ்சம் கரவை வைத்துக்கொள்வது கூட நல்லதுதான் என்று இதைப்பார்த்து நினைக்கின்றேன். அந்த கரவு உள்ள இடத்தில் மற்றொரு சுமை வந்து சுமையாக உட்கார முடியாது அல்லவா? பானுமதி, துரியோதன் இருவரும் இப்படி வெற்றிடமனம் கொண்டவர்களாக இருப்பதைப் பார்க்கையில் சற்று சஞ்சலமாக இருக்கிறது. உடலை அருகருகே வைத்துக்கொண்டு இருவரும் மனதை எங்கோ கழுவி காயப்போட்டு விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.  

தண்ணீரில் கிடந்தாலும் தண்ணீரைப்பார்க்காமல் வானத்தைப்பார்க்கும் தாமரைப்பூக்கள். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்