Saturday, April 25, 2015

மகாபாரதமும் வரலாறும்



அன்புடன் ஜெயமோகனுக்கு;

வணக்கம்.

எனக்கு வெண்முரசில் இடம்பெறக்கூடிய சமஸ்கிருத வார்த்தைகள் தொடர்பிலான உங்கள் விளக்கத்தைப் படிக்கையில் எனக்கு ஒரு யோசனை உண்டானது. நீங்கள் வெண்முரசு எழுதும் சமகாலத்தில் மலையாளத்திலும் ஏன் அதை எழுதப்படாது. யாம் பெற்ற இன்பம் கேரளமும் பெறட்டுமே?

மகாபாரதத்தை அறிந்த சிறுவயதிலிருந்தே எனக்குள் தீர்க்கப்படாதிருக்கும் 3 சந்தேகங்கள்.

திரௌபதிக்கு நீள் துயிலை வழங்கியதிலிருந்தே கண்ணன் சாமானியன் அல்ல, அவன் அதிமானிடன், அமானுஷ்யன், பராத்மன் என்பது உலகத்தோருக்கு தெரியவந்திருக்கும். அதன்பின்னும் அவன் சாதா மனிதர்களுடன் சேர்ந்து சகவாழ்வை வாழ்ந்திருத்தல் சாத்தியமா? அட கடவுளே பூவுலகுக்கு வந்துவிட்டான், முழு உலகமும் அவனிடம் பாய்ந்து சென்று சரணாகதி அடைந்திருக்க வேண்டுமே, ஏன் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை?

இன்னொன்று கௌரவர்களிடம் பாண்டவர்களுக்காக 5 ஊரையாயினுந்தா, 5 வீட்டைத்தா என்றெல்லாம் கண்ணன் எதுக்கு கெஞ்சவேண்டும்? பாண்டவர்களைத் தன் ரதத்தில் ஏற்றிச்சென்று அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களுக்கோ, இந்தோனேஷியாவுக்கோ முடிசூட்டிவைத்திருக்கலாமே. ஏன் அப்படியொன்றும் கண்ணபரமாத்மா செய்தாரில்லை?

பாண்டவம் நடைபெற்றது திரேதயுகம் அந்தயுகம் இந்தயுகம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றதே, கற்காலத்துக்குப்பின்னர்தான் மிஞ்சிப்போனால் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உலோகங்கள் மனிதனின் புழக்கத்துக்கே வருகின்றன. ஆகவே வாளும், வேலும், அம்பும், வில்லும், தேரும், போரும் எல்லாம் சாத்தியந்தானா?

பதிலளிப்பீர்களாயின் மகிழ்வேன்.

நன்றியுடன் தங்கள்                                          



அன்புள்ள கருணாகரமூர்த்தி,

வரலாற்றெழுத்து [historiography] பற்றி ஒரு சமகாலத்தெளிவை உருவாக்கியபின்னரே இந்த வினாவுக்கான விடையை நோக்கிச் செல்லமுடியும்

வரலாற்றை மானுடம் உருவாக்கிக்கொள்வதும் நினைவில் வைத்துக்கொள்வதும் எப்போதும் ஒன்றுபோலவே இருந்ததில்லை. நாம் இன்று உருவாக்கி, வாசித்து நினைவில் நிறுத்திக்கொள்ளும் வரலாற்றெழுத்து முறை என்பது முந்நூறாண்டுகளுக்குள் ஐரோப்பாவில் உருவாகி வந்தது.

அதற்கு முன்னர் வெவ்வேறு வகையான வரலாற்றெழுத்துமுறைகள் இருந்துள்ளன. குலக்கதைகள், குடிமரபுக்கதைகள், தொன்மங்கள், புராணிகங்கள் அனைத்துமே வெவ்வேறு வகையான வரலாற்றெழுத்துமுறைகளேயாகும்

ஒவ்வொரு வரலாற்றெழுத்துமுறைக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது. பெரும்பாலான குலக்கதைகள் தங்கள் குல அடையாளத்தை வரையறுத்து நிறுவிக்கொள்ளவும் முன்னால்கொண்டுசெல்லவும் உருவாக்கப்படுபவை. தொன்மங்கள் கடந்தகால வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட சில விழுமியங்களை நம்பிக்கைகளாக மாற்றி நிறுவும் நோக்கம் கொண்டவை. புராணங்கள் பெரும்பாலும் குலக்குழுக்களை ஒன்றாகத் திரட்டி சமூகமாகவும் அரசாகவும் நிறுவி முன்னெடுக்கும் நோக்கம் கொண்டவை

நவீன வரலாற்றெழுத்துமுறை என்பது மேற்கண்ட வரலாறுகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தில் மாறுபடுகிறது. முந்தைய வரலாற்றுமுறைகள் அனைத்துமே ஒரு இனக்குழு, ஒரு குலம், ஒரு சமூகம் தன் வரலாற்றை மட்டுமே எழுதிக்கொள்ளும் கோணத்தில் அமைந்தவை.  நவீன வரலாறு என்பது ‘உலகவரலாறாக’ விரியும் நோக்கம் கொண்டது

ஆகவே விரிவான கடற்பயணங்கள் உருவாகி உலகம் என்ற ஒன்று கற்பனை செய்யப்பட்டபின்னர் உருவானதே நவீனவரலாற்றெழுத்து என்று சொல்லலாம். நவீன உலக வரைபடம் உருவாகி வந்ததற்கும் நவீன வரலாற்றுக்கும் ஒரே வகையான பரிணாமகதிதான் உள்ளது

நவீன வரலாறு என்பது ஒவ்வொரு பகுதியின் வரலாற்றையும் எழுதி ஒன்றாகச்சேர்த்து உலக வரலாறாக தொகுப்பதுதான். ஆகவே ஒவ்வொரு வரலாறும் இன்னொரு வரலாற்றுடன் தர்க்கபூர்வமாக இணையவேண்டும். உதாரணமாக கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றியகுடி என்பது தமிழர் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் இனக்குழு வரலாறு. அப்படி அனைத்து சமூகங்களும் தங்களுக்கென ஒரு பெருமிதவரலாற்றை வைத்திருக்கும். அவற்று அதற்கான தேவை இருக்கும். அதற்கு உலக வரலாற்றில் இடமில்லை. 

நவீன வரலாறு உலகம் முழுக்க அனைவருக்குமாக எழுதப்படுவது.இந்த நோக்கம் இருப்பதனால் நவீனவரலாற்றின் அடிப்படைவிதி என்பது புறவயத்தன்மை என்பதாக ஆகியது. மானுடர் அனைவருக்கும் பொதுவான வரலாறு என்பது மானுடர் அனைவருக்கும் உரிய பொதுத்தருக்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும் அல்லவா?

இக்காரணத்தால் நவீன வரலாற்றெழுத்திலிருந்து அதற்கு முன் இருந்த வரலாற்றெழுத்துமுறைகளின் பல அம்சங்கள் மறைந்தன. முக்கியமாக வரலாற்றில் இருந்து விழுமியங்களை நோக்கிச் செல்வது இல்லாமலாகியது. நோக்கம் உள்ள வரலாறே வரலாறு அல்லாமலாகியது

இந்த நவீன வரலாற்றுப்புலத்தில்தான் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். இங்கே நின்றபடி நாம் பழைய வரலாற்றெழுத்துமுறைகளைப் பார்க்கிறோம். இந்தத் தெளிவுடன் நோக்கினால் நாம் எளிமையாக இவற்றைப் பகுத்தாய்ந்துவிடலாம்

மகாபாரதம் ஆனாலும் சரி அதைப்போன்ற தொன்மையான வரலாறுகளாக ஆனாலும் சரி அவை இன்றைய வரலாற்றுக்கு உள்ள புறவயத்தன்மை உடையவை அல்ல. அவற்றின் நோக்கம் புறவய வரலாற்றைத் தொகுத்து வைப்பது அல்ல. உலகப்பொதுவான வரலாற்றை எழுதுவதும் அல்ல.அவை எழுதிக்கொண்டது தங்களுக்குரிய வரலாற்றை மட்டுமே. ஆகவே தங்கள் விழுமியங்கள் ஏற்றப்பட்ட வரலாற்றையே அவை உருவாக்கிக்கொண்டன


மகாபாரதம் ஒரு மாபெரும் தொல்வரலாற்றுத்தொகுதி. அன்றிருந்த அனைத்து வரலாற்றெழுத்துமுறைகளும் அதில் உள்ளன. நான் என் வாசிப்பில் நான்காகப் பிரிப்பேன்

1 குலமுறை வரலாறு

2 தொன்மங்கள்

3 வீரர் வரலாறு

3 புராணம்

இந்த நான்கும் இதே வரிசையில் மகாபாரதத்தில் உள்ளன. மகாபாரதக் காலகட்டத்தில் சூதர்கள் என்ற குலப்பாடகர்கள்தான் வரலாற்றாசிரியர்கள். அவர்கள் இன்னாருக்கு மகன் இவன் என்ற குலமுறை வரலாற்றைச் சொல்லிச் சொல்லி நினைவில் நிறுத்தியிருந்தனர். மகாபாரதத்தில் பெரும்பாலான அனைத்து கதாபாத்திரங்களுக்கும் விரிவான வம்சவரிசை உள்ளது. ரிஷிகளுக்கும் ஷத்ரியர்களுக்கும்  மட்டும் அல்ல. அரக்கர்கள் அனைவருக்கும் அதேபோல நீண்ட வம்சவரிசை உள்ளது. அது பெரும்பாலும் முழுமையாகக் கிடைக்கிறது

அத்துடன் அன்று புழங்கிய அனைத்துத் தொன்மங்களும் அதில் கலக்கப்பட்டன. கார்த்தவீரியனுக்கு ஆயிரம் கைகள். ஜராசந்தன் இரண்டாகப்பிளந்து பிறந்தான். எல்லாமே. இவையனைத்துமே ஓரு குணாதிசயத்தை மேலதிகமாக விளக்கும் குறியீடுகள். அன்றைய புனைவுமுறையால் விரிவாக்கம் செய்யப்பட்டவை. காத்தவீரியன் வலிமையான சகோதரர்களைக் கொண்டிருந்தான் என்றோ ஜராசந்தன் இரட்டை ஆளுமை கொண்டவன் என்றோ விளங்கிக்கொள்ளலாம்

மகாபாரதமே வீரர் வரலாறுதான். ஜய என்றபேரில் [வெற்றி] எழுதப்பட்ட வீரகதைப்பாடல் அது. போர்கள் அன்றைய முக்கியமான நிகழ்வுகள். வீரம் அச்சமூகம் பேணநினைத்த விழுமியம். ஆகவே போரைப்பற்றி பாடிப்பாடி நிலைநிறுத்தினர். ஆகவே அது வீரர்களின் கதைகளை வீரம் என்ற உணர்ச்சியை உருவாக்கும்பொருட்டு மிகையாக்கி பாடுகிறது

இவ்வாறு உருவாக்கப்பட்ட மகாபாரதம் பின்னர் மெல்ல புராணமாக ஆகியது. புராணம் என்பதன் நோக்கமே பல்வேறு சமூகங்களின் வரலாறுகளை இணைத்து ஒன்றாக்கி ஒரு பெருவரலாறாக ஆக்குவது. அதன்மூலம் வலுவான ஒற்றைச்சமூகத்தையும் அரசையும் உருவாக்குவது

அதற்காக இரண்டு விஷயங்கள் உருவாக்கப்பட்டன. மொத்தச் சமூகத்திற்கும் பொதுவான அதிமானுடர்கள். அத்தனை தெய்வங்களையும் இணைக்கும் பெருந்தெய்வங்கள். அவை உருவானபிறகு மகாபாரதம் அதன் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. அது வளர்ந்துகொண்டே இருந்தது. அதில் புராணங்கள் சேர்ந்துகொண்டேஇருந்தன. பதினெட்டாம்நூற்றாண்டுவரை புராணங்கள் சேர்க்கப்பட்டன

இவ்வளவு விரிவான பின்னணியில் பார்த்தால் நீங்கள் கேட்கும் வினா என்பது மகாபாரதத்தின் கதையை இன்றைய ஒரு ‘யதார்த்த நிகழ்வு’ ஆக எடுத்துக்கொண்டு எழுப்பப்படுவது என்பது புரியும்

மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணன் அடிப்படையில் ஞானியான, வேதாந்தியான யாதவ அரசன் மட்டுமே. அவன் வீரன். வீரர்கள் தெய்வங்களாவது அக்கால வழக்கம். யாதவர்கள் வென்று கங்கைநிலத்தைக் கைப்பற்றியபோது அவர்களின் குலதெய்வமான கிருஷ்ணன் அனைவருக்கும் உரிய பெருந்தெய்வமாக ஆனான்

அவனைப்பற்றிய புராணங்களெல்லாம் பின்னர் சேர்க்கப்பட்டவை.கிருஷ்ணனின் லீலைகள் பற்றிய செய்திகள் மகாபாரதத்தில் இல்லை துகில் உரியும் காட்சி வடக்கே உள்ள மகாபாரதங்களில் இல்லாதது. 

இப்படி மகாபாரதத்தில் குலவரலாற்றுடன் புராணங்களும் கலந்து பின்னப்பட்டுள்ளன. குலவரலாறு யதார்த்தமாகவும் புராணம் கற்பனையாகவும் உள்ளது. குலங்களை ஒன்றாக இணைக்க அந்தப்புராணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி கிருஷ்ணனை தெய்வ வடிவமாக ஆக்கப்படுவதற்கு காரணம் அவனை மையமாகக் கொண்டு சமூகத்தைத் திரட்டுவதுதான்.

மகாபாரதம் பேசுவது அன்றைய இந்தியாவைப்பற்றி மட்டுமே. மெல்லிய குறிப்புகளாகவே பிறதேசங்கள் உள்ளன. 

புராணக் காலக்கணிப்பு வேறு. நவீன வரலாற்றின் காலக்கணிப்பு வேறு. நம் புராணங்களின் காலக்கணிப்பு என்பது பெரும்பாலும் குணாதிசயம் சார்ந்து உருவகிக்கப்படுவது மட்டுமே.மகாபாரதத்திலேயே இருவகை காலவரிசை உள்ளது. யுகப்பிரிவினை என்பது கற்பனையான ஒரு காலப்பகுப்பு. குலவரிசைகள் யதார்த்தமான காலத்தில் உள்ளன

மகாபாரதம் இரும்புக்காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று. கடல்வணிகம் தொடங்கிவிட்டிருந்தது. பெரிய மாளிகைகள் இருந்தன. பலவகை இரும்பு இயந்திரங்கள் இருந்தன. அதை மகாபாரதமே சொல்கிறது.

நவீனவரலாறு, குலவரலாறு, தொன்மம், புராணம் என பகுத்துக்கொண்டால் நீங்கள் கேட்கும் வினாக்கள் எழாது. இப்படிப் பகுக்காமல் எந்த தொன்மையான வரலாற்றையுமே அணுகமுடியாது


கடைசியாக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மகாபாரதத்தில் விடை இல்லையா? இந்த எளிமையான கேள்விக்குப் பதில் சொல்லாமலா பிரம்மாண்டமான ஒரு காவியத்தை எழுதியிருப்பான் கிழவன்?

கிருஷ்ணன்  அப்படியே பரம்பொருளாக நேரடியாகவே தோன்றியிருக்கலாமே. எல்லாவற்றையும் ஒரு கணத்தில் முடித்துவிடலாமே. பரம்பொருளாகிய பிரம்மத்தின் ஒரு கணநேர எண்ணம் மட்டும்தானே இந்தப்பிரபஞ்சமே.? ஏன் மனிதனாகப் பிறக்கவேண்டும்?

என்ன காரணத்தால் மானுடனாகப் பிறந்தானோ அதே காரணத்தால்தான் அவன் மானுட ஆற்றலுக்கு அப்பால் சென்று எதையும் செய்யமுடியவில்லை. அவன் செய்வதெல்லாம் ஒரு அதிமானுடன் செய்வது மட்டுமே. பரம்பொருள் செய்யக்கூடியதை அல்ல.

இங்கே ஏதோ காரணத்தால் மானுடவாழ்க்கை, உயிர் வாழ்க்கை என்ற ஒன்று நிகழ்கிறது. இதற்கென சில விதிகளும் ஆட்டப்போக்கும் உருவாகியிருக்கிறது. இதற்குள் வந்து இந்த ஆட்டவிதிகளைக்கொண்டு விளையாட இறைவன் எண்ணுகிறான். இந்த ஆட்டத்தையே ஒட்டுமொத்தமாக மாற்ற விரும்பவில்லை. ஏனென்றால் இந்த ஆட்டமே அவன் உருவாக்கியது


டேவிட் அட்டன்பரோ காட்டுக்குள் போனால் மிருகங்களின் வாழ்க்கையில் ஈடுபடுகிறார். அவரும் ஒரு மிருகமாக இருக்கிறார். ஆனால் அவருக்கு அவர் வெறும்மிருகம் அல்ல என்று தெரியும்.மிருகங்களின் நேற்றும் இன்றும் தெரியும். அவரிடம் அந்தமிருகங்கள் அறியவே முடியாத கருவிகள் உண்டு

ஆனாலும் அவர் அங்கே மிருகமாகவே இருக்கிறார். அந்த வாழ்க்கையை மாற்றியமைப்பதில்லை. மான்குட்டியை சிங்கம் கிழித்துண்ணும்போது தலையிடுவதில்லை. அந்த ஆட்டத்தின் விதியை அவர் மாற்றுவதில்லை. ஆனால் அவ்வப்போது தலையிடவும் செய்கிறார். அவரும் உள்ளே போய் விளையாடலாம். ஆனால் இயற்கையின் ஒழுக்கை மாற்றியமைப்பதில்லை

கிருஷ்ணனும் அப்படித்தான் என்பதை மகாபாரதப்புனைவே மீண்டும் மீண்டும் சொல்கிறது. அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டுகிறார்.பிரபஞ்சங்களை ஆக்கி விளையாடி அழிக்கும் முடிவிலியாகத் தெரிகிறார். உடனே மீண்டும் அவனுடைய நண்பனாக மாறித்தெரிகிறார். விஸ்வரூபத் தோற்றம் ஒரு கனவு போல அவன் ஆழ்மனதுக்குள் போய்விடுகிறது இல்லையா?

வியாசன் சொல்லும் விடை இதுதான். அவனுக்கு அவனே உருவாக்கிய ஆட்டவிதிகள் முக்கியம். அதை பரிசீலிக்க, அதனுடன் விளையாட மட்டுமே அவன் வந்தான்.

ஜெ