Monday, April 27, 2015

யதார்த்தம்



ஜெ

நலம்தானே?

வெண்முரசில் பிரயாகைதான் நான் மிகமிக ஆர்வமாக வாசித்தநாவல் மிக விரைவாகப் போன கதை. அடுத்தது என்ன என்பது இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட திருப்பங்கள் ஒன்றும் பெரிதாக இல்லை. பெரும்பாலும் சாதாரணமான சம்பவங்கள்தான் இருந்தன.பூரிசிரவஸின் கதையில் சாதாரணமான ஒரு காதல்கதைக்குரிய சம்பவங்க்கள்தான் இருந்தன. ஆனால் அதை நுட்பமாகச் சொல்லியிருந்ததும் ஒவ்வொரு சம்பவத்திற்குள் உள்ள ஏராளமான தகவல்களும் மனச்சித்திரங்களும் அதை பெரிய வாசிப்பனுபவம் அளிப்பதாக ஆக்கின

அதோடு ஒன்றையும் சொல்லியாகவேண்டும். அதற்கு முன்னால் உள்ள நாவல்களில் வரக்கூடிய விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் அதிமானுஷமாக இருந்தன. இதிலே வரக்கூடிய விஷயங்கள் எல்லாமே நாமெல்லாரும் வாழும் அன்றாட உலகத்தோடு சம்பந்தப்பட்டிருந்தன. இந்த வேறுபாடு ரொம்ப முக்கியமானது என்று தோன்றியது. நீங்களும் இதை உணர்ந்திருப்பீர்கள்

அதிலும் பானுமதி பெண்களுக்கும் ஆண்களுக்குமான உரவைப்பற்றிச் சொல்லக்கூடிய இடங்களெல்லாம் இன்றைக்குள்ளதுபோல. திருதராஷ்டிரனின் மனசு மாறியதும் மறுபடி அவர் வருத்தப்படுவதும் எல்லாம் மிகவும் யதார்த்தம்

செந்தில்குமார்