Thursday, April 16, 2015

நிலமானவள்




அன்புள்ள ஜெ,

பானுமதி சூதர் பாடலில் துரியனின் புயங்களில் வாழும் தெய்வங்களைக் கேட்டவுடன் கண்ணீர் மல்கியது சட்டென்று என்னை பொத்தை மேல் நின்ற வெட்டுவேல் அய்யனாரின் முன் உளம் விம்மிய ராமலட்சுமியை நினைவுபடுத்தியது. அவளின், "எஞ்சாமி…தெய்வமா வச்சு கும்பிடுதேன்…எஞ்சாமி", என்ற குரல் வெகு நாட்கள் கழித்தும் என் காதில் கேட்டது. 

சரி கதை நினைவுக்கு வந்துவிட்டது. மீண்டும் படிப்போமே என்று படித்தேன். அங்கே நான் சேவகப் பெருமாளைப் பார்க்கவில்லை. துரியோதனனைத் தான் பார்த்தேன். உண்மையில் கதையிலேயே நீங்கள் ஓரிடத்தில் அவனிடமிருந்து துரியோதனன் வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்று துரியன் சொல்வது போல அவனும் ராமலட்சுமியைத் தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறான். துரியனைப் போலவே தன் தம்பியரையும், அவர்கள் குழந்தைகளையும் தன்னுடையதாகவே கருதுகிறான். அனைத்துக்கும் மேல் ராமலட்சுமியின் கண்ணசைவிலேயே அவளின் கருத்தறிந்து அதைச் செய்கிறான். எல்லாவற்றுக்கும் மேல் நிலம் மீது அபரிமிதமான பற்றுதல் வைத்திருக்கிறான். மேல் பார்வைக்கு அவன் ராமலட்சுமி சொல்வதைக் கேட்பதாகத் தோன்றினாலும், அவனுக்குப் பிடிக்காததை அவள் உரக்கச் சொல்வதுமில்லை. 

பானுமதியும் அவ்வாறே இருக்கப் போகிறாளோ? துரியன் மனம் தொடுவதை இவள் கண்களால் முடிக்கிறாள். துரியன் தன்னை தான் விரும்பும் அனைவருக்கும் ஒப்புக் கொடுக்கிறான். ஒரு வகையில் அவனும் நிலமும் ஒன்றே. இருவரும் தங்களை மற்றவர் ஆள அனுமதிக்கிறார்கள். கர்ணன், துச்சாதனன், பானுமதி என ஒவ்வொருவரும் அவனை ஆள்கிறார்கள். அவ்வாறு ஆள்வதால் தான் அவனுக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள். "அதான்…நெலமுண்ணா அதான்…கொல்லணும்,சாவத்துணியனும்…அதுக்குத்தான் நெலமே…" என்று துரியனுக்காக கொல்லவும், சாகவும் துணிந்திருக்கும் சேவகப்பெருமாள்கள் தானே இவர்கள் எல்லாரும்.

ஆம் அவன் பிறவி சக்கரவர்த்தி. இவர்கள் அனைவரும் அவனின் பணியைச் செய்யும் பணியாளர்கள் தான். அவனின் அடையாளம் இது.இவர்கள் அவனை ஆளவில்லை. அவன் தான் அனுமதிக்கிறான். அவன் அனுமதியின்றி அவனை ஆள நினைப்பவர்களை அவன் மன்னிப்பதில்லை. பீமன் உண்மையில் அறியாமல் அத்தவறைச் செய்து விடுகிறான். நல்லவேளை பீமன் என்ற ஒருவன் இருப்பதாலேயே இவர்களின் அனைத்துத் தவறுகளும் துரியனால் மன்னிக்கப்படுகிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்