Wednesday, April 29, 2015

கர்ணனின் உள்ளம்



ஜெ,

வெண்முரசில் இந்த அத்தியாயத்தில் சகோதரர்களின் இணைவைப்பார்க்கும்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். கர்ணன் அங்கே இல்லை. சகுனியும் கணிகரும் இருக்கக் கூடாதென்று கிருஷ்ணன் நினைத்ததைப்புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கர்ணனும் இருக்கக்கூடாது என்று நினைத்தான். துரியோதனனும் தருமனும் இணைவதை கர்ணன் விரும்பமாட்டானா? அப்படியென்றால் அவனுக்குத்தான் மிகப்பெரிய காழ்ப்பு உள்ளுக்குள் இருக்கிறதா?

அல்லது கர்ணன் அருகே இருந்தால் துரியோதனன் மனம் விட்டுப்பேசமாட்டான் என்று நினைத்தானா? எனக்கு அந்த இடத்தை எத்தனை நினைத்தாலும் புரியவில்லை. கர்ணனுக்கு தருமன் எவரென்று தெரியும் என்றுதான் வெண்முரசிலே வருகிறது. ஆனால் சகோதரனிடம் வஞ்சமும் கொண்டிருக்கிறானா? இந்த ரகசியம் என்ன?

இந்தமாதிரியான இடைவெளிகள் நிறைய வெண்முரசிலே உள்ளன. அதை வேண்டுமென்றே நீங்கள் விட்டுப்போகிறீர்கள். அதைவைத்து அவனைப்பற்றி யோசிக்கவைக்கிறீர்கள். கர்ணனுக்கு வாரணவதம் எரிப்பு நிகழ்ச்சி மனவருத்தம் அளித்தது. ஆனால் துரியோதனின் குற்றவுணர்ச்சியிலே அவன் கலந்துகொள்ளவும் இல்லை

சிவராமன்