Sunday, May 17, 2015

அண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்




அன்புள்ள ஜெயமோகன்,

காணும் அனைத்தையும் கேட்கும் அனைத்தையும் உணரும் அனைத்தையும் 'இது இல்லை, இது இல்லை' என்று விலக்கிப் பின் எது எஞ்சுகிறதோ அதுவே பிரம்மம் என்கிறது வேதாந்தம். அந்த பிரம்மம் இன்றைய பதிவில் ஓர் அன்னைச் சிலந்தியாக உருவகிக்கப்படுகிறது. அது உருவாக்கிய பின்னலே அண்டகோளமாக விரிகிறது. அது அள்ளியுண்ட வெறுமை பிசினாக வெளிப்படுவதனாலேயே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது. முதற்கனலில் நாகத்தின் இச்சையால் கண்கள் பிறந்து பிரபஞ்சம் உருவான‌து போல. ஆனால் உருவாக்கம் நிகழ்ந்தபின் பின்னல் பெருகமட்டுமே செய்கிறது, குறைவதேயில்லை. பின்னலை விடுவிக்க நிகழும் முயற்சிகள் அனைத்தையும் அழகிய நடனங்களாக ஆகிப் பின்னலை மேலும் சிக்கலாக்கவே செய்கின்றன.

கணினி அறிவியலில் finding the master node என்பது முக்கியமான ஒரு சிக்கல். வைரஸ் ஒன்றை உருவாக்கிப் பரப்பும்போது உருவாக்கிப் பரப்புவதன் தொடக்கம் மட்டுமே master node செய்யவேண்டியது. பிறகு உருவான ஒவ்வொரு node-உம் தன்னைப் பல்கிப் பெருக்கிக்கொள்ளும். உருவாக்கிய master node-ஐக் கண்டுபிடிக்கும் வரை வைரஸ் பரவுவதைத் தடுக்கமுடியாது. அதைக் கண்டுபிடிக்கப்புகும் ஒருவர் மேலும் பல புதிய nodes-ஐத் தானே உருவாக்குவதும் நிகழும். சில லட்சம் nodes உள்ள கணினி வலையில் இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது முடிவில்லா வலைகள் கொண்ட பிரபஞ்ச வலையில்? நாம் செய்யும் எந்தவொரு முயற்சியும் புதிய சிடுக்குகளையே உருவாக்கும். நமக்குப்பின் வருபவர்கள் நாம் உருவாக்கிய சிடுக்குகளைப் பிரித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த சிடுக்குகளைச் சூதன் எவ்வாறு அணுகுகிறான்? அவன் அதைப் பிரிக்கமுயல்வதே இல்லை. அவன் தான் ஒரு புதிய வலையை நெய்ய முயல்கிறான். அதன்மூலம் அன்னை சிலந்தி உருவாக்கிய வ‌லையில் தான் சிக்காமல் தன் வ‌லையில் அன்னையைச் சிக்கவைக்கிறான். அன்னை ஒரு குழவியாக அவன் பின்னிய பின்னலில் படுத்துறங்குகிறாள்.

புதிய நூல் ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரபஞ்ச தரிசனத்தோடு தொடங்குகிறது. முதற்கனல் நாகத்தில் தொடங்கியது போல, வண்ணக்கடல் நாராயணனின் நாபிக்கமலத்தில் (பகடியாகத்) தொடங்கியது போல, காண்டவம் சிலந்தியோடு தொடங்கியிருக்கிறது. நீங்கள் பின்னும் பின்னலில் சிக்கக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.