Tuesday, May 19, 2015

நாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)

அன்பு ஜெயமோகன்,
         
”வஞ்சம் என்றுமுள்ளது மைந்தா” என நிறைவடைந்திருந்த நான்காவது அத்தியாயம் காண்டவ நாவலின் ஆணிவேரைக் காட்டியதாகவே உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சமெனும் நஞ்சு ஊடுருவிச் செல்லும் வழிகளைக் காண நடுக்கத்தோடு காத்திருக்கிறேன்.

          வாசுகிப் பாம்பின் கதை எனக்கு சிவனின் கழுத்தை நினைவூட்டியது. நீலகண்டன் எனும் தொன்மத்தின் ஆழத்தில் நாகர்குலத்தின் மூச்சே நிரம்பி இருக்கிறது. தமிழ்நிலத்தின் தாய்தெய்வத்தில் முதன்மையானவள் கொற்றவை. கண்ணகி அத்தொன்மத்தின் நீட்சியாகச் சொல்லப்படுபவள். கண்ணகி மிகப்பழமையான திருச்செங்கோட்டுமலைக்கு வந்து சென்றதாக இலக்கியச்செய்தி உண்டு. திருசெங்கோட்டு மலையின் பக்கவாட்டில் நீண்ட நாகச்சிலையை இன்றும் காணலாம். இக்குறிப்பைக் கொண்டு நாகர்கள் எனும் ஆதிகுடிகள் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தைத் தரமுடியாவிட்டாலும் அக்குடிகளின் இருப்பை வலியுறுத்தலாம். “ஏழும் ஐந்தும் மூன்றும் ஒன்றுமென தலையெழுந்த நாகமூதாதையர் அத்தி, ஆல், அரசமரத்தடிகளில் அமர்ந்து ஆள்வதனால் அழியா வளம்கொண்டதாகிறது இந்தமண்” எனும் வாக்கியத்தின் அதிர்வில் எனக்குள் பல மின்னல் கீற்றுகள்.

          தமிழ்மண்ணின் முக்கியக்கடவுளர்கள் மூவர். சிவன், திருமால், முருகன். மூவரொடும் நாகம் நெருங்கியிருப்பதைக் கவனிப்போம். பெரும்பாலும் பெருந்தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் இனக்குழுக்களின் குறுந்தெய்வக் குறிகளை ஒருங்கிணைத்து வளர்த்தெடுக்கப்பட்டவை. சூலம், நாகம், உடுக்கை, நெருப்பு, நந்தி போன்றவற்றை இனக்க்ழுக்களின் குலக்குறிகளாகக் கொள்ளலாம். அவ்வகையில் சிவன் எனும் பெருந்தெய்வம் பல இனக்குழுக்களை ஒருங்கிணைத்ததன் வாயிலாக உருவானவன் என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும். திருமாலும் அத்தகையவனே. சமீப நூற்றாண்டுகளில் சிவனும், திருமாலும் சொல்லிமாளாத அளவு வைதீகமயமாக்கப்பட்டு விட்டனர். முருகன் ஓரளவு தப்பித்திருக்கிறான் என்றே நினைக்கிறேன். சங்கநூலான திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு நிகழும் வைதீக, அவைதீகச் சடங்குகளைக் கவனிப்போம். சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் பழங்குடித்தன்மையிலிருந்து விடுபடாத மக்கள் அவனுக்கு ஆட்டிறைச்சி படைக்கின்றனர். இன்றளவும் பல இனக்குழுக்களின் குலதெய்வமாக அவன் கொண்டாடப்படுகிறான். எங்கள் குலதெய்வமான வெள்ளகோவில் வீரக்குமாரசாமியும் முருகன்தான். முழுக்க முழுக்க வைதீகச்சடங்குகளில் மாட்டிக்கொள்ளாமலும், தனக்கான தனிப்பட்ட தத்துவத்தைக் கட்டமைத்துக் கொள்ளாமலும் இருப்பதாலேயே முருகனை என் குருவாகக் கொண்டேன். மேலும், அவன் வேட்டைச்சமூகக்காலப்பரப்பிலிருந்து இன்றைய காலம்வரை எம் தமிழினத்தின் சரியான அடையாளமாக இருக்கிறான். முருகாற்றுப்படை குறிப்பிடும் வீடுகளே இன்றைய படைவீடுகள். அவற்றில் நான்கு நிலங்களும் அழகாக இணைக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றம்(குறிஞ்சி), திருச்சீரலைவாய்(நெய்தல்), திருவாவினன்குடி(மருதம்), திருவேரகம்(மருதம்), குன்றுதோறாடல்(நான்கு நிலங்களும் சேர்த்து), திருமாலிருஞ்சோலை(முல்லை) என ஒரு தொடர்ச்சியைக் கண்டபோது விளிக்க முடியா மகிழ்ச்சி.

          வாசுகிப்பாம்பு சிவனின் கழுத்தை நினைவுட்டியதை மட்டுமே நான் சொல்ல நினைத்தேன். வரிகள் தானாகவே விழுந்து கொண்டிருக்க என்னால் தடைபோட முடியவில்லை. அணுவைப்போல சிறிதாவதைச் சொல்வது அணிமா. மகிமா என்பது மலையைப்போல பெரிதாவது. நாகச்சிலையின் வடிவம் என்னை அணிமாவுக்கும், மகிமாவுக்கும் நகர்ந்திக் கொண்டே இருக்கிறது. அங்கு விரிந்தும், சுருங்கியும் தெரியும் காட்சிகளுக்குத் திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய?

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.