Saturday, July 11, 2015

அணுக்கமும் விலக்கமும்

ஆசிரியருக்கு ,

இது நீங்கள் விஷ்ணுபுரத்தில் கூறியுள்ளது போலத்தான். உச்ச கணங்களுக்காக நாம் நாளெலாம் காத்திருப்போம் , அதைப் பற்றியே சிந்தித்து இருப்போம் , இது கை அருகில் வருகையில் , நம்மை அறியாத ஒரு விலக்கம் வரும். அது அச்சமகலாம் , புதிது கண்டு பின்வாங்குதலாகலாம், மிரட்சியாகலாம், அல்லது இதை அடைந்துவிட்டால் வாழ்கையில் நமது கையிருப்பு கரைத்து விடும் என்கிற இழப்புணர்வு ஆகலாம் .

இன்று படகு அணுகும் போது சாத்யகி அடைவது இது தான். அதன் பின் நடப்பதும்  விஷ்ணுபுரத்தில் உள்ளதே , நமது உச்ச கணங்கள் அதை அனுபவிக்கும் போது நமக்கு தெரியாது , பின் கடந்த காலத்தில் மட்டுமே அதை நினைவு கூர்வோம் . போர் துவங்கியவுடன் சாத்தியகிக்கு நடந்ததும் இதுவே. 

பின்னர் கைவெட்டப் போகும்  சாதியகியின் கையில் அம்பு  துளைப்பது  அபாரமான கதைப் போக்கு . படகுகள் அணுகுவதும் பருந்து போல திருஷ்ட்டத்தியும்ணன்  கூர்நோக்கி இருப்பதும் ,  விழும் வீரனை வெள்ளி வாய்விரித்து நதி விழுங்கிக்  கொள்வதும் காலம் ஓசையின்றி  நீட்டிக்கப் பட்ட  விவரிப்பு கூடுதல் உயரத்திற்குச் செல்கிறது.

கிருஷ்ணன் .