Sunday, July 12, 2015

ஏன்?


   இந்தக் கேள்வி விஷ்ணுபுரத்தில் வந்து என்னை அலைகழித்தது. அப்போது மகனை விபத்தில் இழக்கும் ஒரு தந்தையின் நெஞ்சினில் நிறைந்து அவனை சுற்றியிருக்கும் சூழலிலெல்லாம் எதிரொலிக்கும்.    இன்று மீண்டும்  வெண்முரசில் தன் சக வீரனை இழந்த முதிய வீரனின் கண்களில் ஒளிர்கிறது  அதே கேள்வி 'ஏன்?' .

கீதையின் முதல் கேள்வி இது. இதன் விடையாக கீதை விரிந்து செல்லும். மொத்த மகாபாரதமும் கீதைக்கு எழுதிய ஒரு முன்னுரை என்று நான் கருதுபவன். வெண்முரசை படிப்பது ஒரு தேர்ந்த குருவின் காலடியிலிருந்துகொண்டு அதை பயின்றுவரும் அனுபவத்தை எனக்கு அளித்துவருகிறது.

    உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தலையாய கடமை அது உயிர் வாழ்தலே.  அதன் நோக்கமும் உயிர் வாழ்தல். அது அடையும் பயனும் உயிர் வாழ்தல். அதற்கடுத்த கடமை  தன் சந்ததியை அறுபடாமல் தொடர வைத்தல். மனிதர்களுக்கும் அப்படித்தான்.  மனிதர்கள் தன் வாழ்க்கையின் நோக்கங்களாக ஆயிரம் சொல்லலாம். ஆனால் உண்மையான ஒரே நோக்கம் உயிர் வாழ்தல்தான். மற்றைய நோக்கங்களெல்லாம் அவன் மற்றவர்களுக்கு சொல்லும் பொய்கள் அல்லது மற்றவகர்ளால் ஏமாற்றப்பட்டு அவனுக்கு அப்படியென நம்பவைக்கப்பட்டவை. அவன் அடையும் உண்மையான ஆனந்தம் உயிர் வாழ்தல் மட்டுமே. மற்றபடி அவன் அனுபவிக்கும் மற்றைய மகிழ்ச்சிகள் அந்த உயிர் வாழ்தல் என்ற உண்மையான ஆனந்தத்திற்கு அவ்வப்போது பூட்டப்படும் வெறும் அணிகலன்கள்.

   எப்படியாயினும் அனைத்து உயிரினங்களும் இறக்கவே செய்கின்றன. கண்ணெதிரே எத்தனையோ உயிர்கள் இறந்துகொண்டிருக்கின்றன. அதனால் இறப்பு என்பது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு முக்கியமற்ற நிகழ்வாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட உயிருக்கும் இறப்பு என்பது அதன் வாழ்வில் உயர்ந்தபட்ச துன்பம் எனக் கொள்ளலாம்.  ஒவ்வொரு உயிரும் துடிதுடித்துதான் சாகின்றன. மனிர்கள் சிந்தனை என்ற ஒன்றினால் மற்ற உயினங்களிலிருந்து மேம்பட்டவர்கள். ஆனாலும் கடும் துயரம் தரும் மீளா  நோயுற்றிருந்தபோதிலும் இறந்துபோதலை தவிர்க்க நினைப்பதையே எப்போதும் பார்க்கிறோம்.

    ஆக, ஒரு மனிதன் எப்படியாகிலும் உயிர் வாழமுயல்வது எந்த உயிரினத்தையும்  போல  அவன் ஆழ் மன விருப்பமாகும்,  அது அவன் உரிமையுமாகும். அவன் ஒருவருக்காக,  ஒரு கொள்கைக்காக, அல்லது எதோ ஒரு பயனை அடைவதற்காக,  என் உயிரைத் தருகிறேன் என்று சொல்லுவது அவன் மனம் அறிந்து சொல்லும் சொல்லாகாது.  அது அவனுடைய மேலிருக்கும் புத்தி அவனின் ஆழ் மனதை மீறி வலிந்து சொல்லும் கூற்றாகும்.

   போர் வீரர்கள் தன் தலைவனுக்காக உயிரைத்தர சித்தமாக இருக்கவேண்டியது அவர்களின் பணிக்கடமை. அது  தெரிந்தே போர்வீரனாக ஒரு தலைவனின் கீழ் பணியமர்ககிறார்கள். போரில் இறக்க நேர்கையில் அதை அவன் முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டுமல்லவா?  ஆனால் அவன் அறிவு, சிந்தனை, பண்பாடு போன்ற ஆடைப்பொதிகளின்  அடியில் இருக்கும் மெல்லிய உடலிலிருந்து, எழுகிறது இந்தக் கேள்வி:  ஏன்? இந்த இறப்பு எதற்காக?  என் உயிரிழப்பை உண்மையாக நியாயப்படுத்தும் எதாவது  காரணம் எவரிடமாவது இருக்கிறதா?  

   இந்தக் கேள்வி காதில் விழாததுபோல் நடித்து தலைவர்கள் அவன் இறப்பை அலட்சியப்படுத்திவிடுகிறனர், அல்லது அவ்விறப்பை தியாகம், அர்ப்பணிப்பு, வீரம் போன்ற சொற்களை போட்டு மூடி மழுப்பிவிடுகிறனர்.  ஆனாலும் அந்தக் கேள்வி இறந்தவனுடன் மறைந்துவிடுவதில்லை. அது  அவனை சார்ந்தவர்களின் பேச்சிலோ செய்கையிலோ அல்லது பார்வையிலோ, அழியாமல்  வில்லில் பூட்டிய அம்பைப்போல் அத்தலைவனை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது.  யாரோ ஒருவனின் உள்ளத்தில்தான் அந்த கேள்வி கூறிய அம்பாக தைத்து வதைக்கிறது. அந்த வதையில்தான் அசோகன் போரை ஒழிந்தான். இந்தக் கேள்வியை தனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளும் தலைவர்கள் அஹிம்சையைக் தன் தவமாய் கைக்கொண்டு மகாத்மாவாக மாறுகிறார்கள். அவர்கள் பொருட்டே இவ்வுலகம் தொடரும் இந்த அவலத்தை சகித்துக்கொண்டு சுழன்றுவருகிறது.


துரைவேல்