Wednesday, July 29, 2015

கதைமானுடர்

அன்புள்ள ஜெயமோகன்,

 நான் உங்கள் தளத்தை கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். நான் சில வருடங்களுக்கு முன் எனது அலுவலகத்துக்கு செல்லும் நேரத்தை வீணடிக்காமல் இருக்கவே புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன். முதலில் உங்கள் அறம் புத்தகமே என் இலக்கிய ஆர்வத்தை தூண்டியது. அதன் பிறகு உங்கள் வளைத்தளத்தின் அனைத்து கட்டுரைகளையும் கதைகளையும் தேடி தேடி படித்தேன். உங்கள் பிற புத்தகங்கள் விஷ்ணுபுரம், வெள்ளை யானை, ஆகியவற்றையும் படித்து உள்ளேன். வெண்முரசு தினமும் படித்து கொண்டு இருக்கிறேன். ஆரம்பத்தில் மகாபாரதத்தின் மேல் ஒரு வெறுப்பே இருந்தது. ஏனென்றால் பல நண்பர்களை போல் நானும் அதை பற்றி ஒன்றும் தெரியாமலே வெறுத்தேன் (இளமையின் பெரியாரியமும் ஒரு காரணம் தான் போலும்). சரி படித்து பார்ப்போமே என்று ஆரம்பித்த பின்பு  இந்த கதை களஞ்சியத்தில் மூழ்கி திளைக்கிறேன். இப்பொழுதெல்லாம் தெரிந்த மனிதர்களையும் மகாபாரத கேரக்டராக யோசித்து ரசித்து கொள்கிறேன். வீட்டில் வளர்த்த கண் தெரியாத மீனுக்கு திருதராஷ்டிரன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு சென்று விட்டது.
 உங்கள் உழைப்பும் முக்கியமாக உங்கள் பயணங்களும் மிகுந்த ஊகத்தை கொடுக்கிறது. இந்த வருடம் நான் சில முக்கியமான பயணங்களை மேற்கொள்ள உங்கள் பயணங்கள் மிகுந்த உதவியாய் இருந்தது. உங்கள் உதவியால் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தேன். உங்கள் கனடா, அமெரிக்க பயணங்கள் இனிதே அமைந்ததற்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன் ,
அருண் ஆனந்த்
சென்னை