Monday, July 27, 2015

நாயகன்

ஆசிரியருக்கு,

நேற்றைய பகுதியின் சடங்குகளுடன் இணைத்து இன்றைய பகுதியைப் படித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. வெண் முரசின் சிறப்பம்சமே இதில்  இழி மகன் என எவரும் இல்லை.

வானுயர்ந்த தலைக்கனத்துடனும், இகழ்சியுடனும் சிசுபாலனின் வரவு முகச்சுளிப்பை உண்டாக்கியது , இது குடிகளின் வாழ்த்துரையிலும் வெளிப்பட்டது. பலமுறை சொல்லி இருந்தாலும் - (நாடு என்பது மணிமுடியும் செங்கோலுமாக கைக்கு சிக்குவது. மண்ணும் நதிகளுமாக விழி தொடுவது. முறைமைகளும் நெறிகளுமாக சித்தம் அறிவது. ஆனால் நம்முன் நிறைந்திருக்கும் குடிகளின் உளமென பெருகித் திகழ்வது. அந்தத் தெய்வம் எளிதிலேற்பதில்லை)  என்கிற நேற்றைய பகுதி மிகச் செறிவானது. 

குடிகளின் அத்தனை புறக்கணிப்பையும் தன் ஒரே பெருஞ்  செயலால் ஊமையாகினான் சிசுபாலன். இப்பகுதியில்  இலக்கியச் சுவை கொப்பளித்தது. திறம்படச் சொல்வதல்ல, திறம் வாய்ந்த சம்பவ அமைப்பே இலக்கியத்தின் அடிப்படை.       

வலுவும் வீரமும் அமைத்துள்ள இடம் தன் கழுத்தில்  செருக்கை அணிந்து கொள்ள உரிமையுடையது.  

கிருஷ்ணன்.