Saturday, August 22, 2015

கனவுகள் முடிவதில்லை


வாசுதேவனின் தந்தை வசுதேவன் என்பதால் வசுதேவர்மீது பக்தி ஏற்படுகின்றதா?, ஆனால் கண்ணனைப்பெறுவதற்கு அவரும் தேவகியும் சிறையிருந்ததும், பெற்றக்குழந்தைகளை கம்சன் கொல்வதை தடுக்கமுடியாமல் மௌனமாய் அழுவதையும் காணும்போது எந்த தந்தையின்மீதும் ஏற்படும் இரக்கத்தைவிட வசுதேவர் மீது அதிக இரக்கம் ஏற்படுவதை தடுக்கமுடிவதில்லை.

வசுதேவர் என்றால் அவ்வளவுதான் என்று இருந்த எனது இதயத்தில் ஒரு மலர்க்குன்றும் மணிக்குன்றும் மோதிப்போனது இன்று. வசுதேவரின் முதல்மனைவி ரோகிணியை ஐராவதம் என்றும், தேவகியை காமதேனு என்றும் சொல்லும்போது இதயம் வண்ணமும், வாசமும், ஒளியும் கொள்வதில் மகிழ்கின்றேன். இனி வசுதேவரை கண்ணனின் தந்தை என்று மட்டும் பார்க்கமுடியுமா?

இருப்பிடத்தை பொருத்து ஐராவதமும், காமதேனும் ஒரு இடத்தில்தான் இருக்கிறது. இரண்டுக்கும் உள்ள இடைவெளி எத்தனை எத்தனை? இரண்டுக்கும் உரிமை உள்ளவன் இந்திரன். இந்திரன் முன்பு அவை இரண்டும் விலங்கெனவே இருக்க, வசுதேவர்முன் அவை இரண்டும் தாயென வந்து நிற்கும் அழகே அழகு. துணையும், தொழும் தெய்வமும் எனக்காணும் காட்சி.

ரோகிணியை ஐராவதம் என்றதோடு நில்லாமல் பலராமனையும், சுபத்திரையையும் யானை என்று காட்டும் காட்சி அற்புதத்தின் அற்புதம். மூன்று யானைகளை புள்ளிகளாய் வைத்து வரைந்த யானைநிரைகளின் முக்கோணம் இது. இதுதான் ஜெ. ஒரு மனிதனும், விலங்கும் பிரிந்து பிரந்து அவைகளின் எல்லைகளில் நின்று கீழ்மையை அடையாமல், ஒன்றை ஒன்றை தாங்கி எத்தனை உயரத்தில் வைக்கப்படுகின்றன. இந்திரன்மீது வரதா ஒரு மகத்தான பெருமிதம் வசுதேவர்மீது வந்து விடுகின்றது. இன்று வசுதேவர் அடையும் உச்சம் மிக அற்புதம். காதல், காமம், அன்பு, பக்தி, குணம், மாண்பு, ஒழுக்கம் என மிக உயர்ந்த இடத்தை அடைகின்றார். கண்ணனின் தந்தை என்ற ஒரு படியில் இருந்து இன்னும் ஒருபடி உயர்ந்து செல்கின்றார்.  

கம்சனைக்கொன்று குருதிவழிய வந்து நிற்கும் பெரியோனும், இளையோனையும் காணவரும் வசுதேவர் அவர்களின் காலடியில் மயங்கி விழுகின்றார். அவரைப்பொருத்தவரை அவர்கள் இருவரும் அவரை சிறைமீட்டத்தெய்வங்கள். அவர்கள் உலகத்தின் தெய்வமாக இருந்தாலும் ஒரு தந்தையும் தனது உணர்வழிந்து அறியும் ஒரு காட்சி. மயங்கி விழுந்த வசுதேவரை அள்ளி எடுத்துசெல்லும் பலராமனைத்தொடும்போது யானையின் மருப்பை வருடுவதுபோல் உணர்வது உச்சம். சுபத்திரையின் காலடியைக்கண்டவர்கள் கருக்கொண்டயானையின் காலடி என எண்ணுவது உச்சத்தின் உச்சம். வசுதேவரை மையத்தில் வைத்து இந்த மூன்று யானைகள் வந்து நிற்கம் காட்சியை எண்ணும்போதுதான் ஆண்டள் கண்ட கனவு எத்தனை அர்த்தம் நிறைந்தது என்பது தெரிகின்றது.

கோதையை மணம்முடிக்க காளையென வரும் கண்ணனின் ஒருபுறம் பலராமன், மறுபுறம் சுபத்திரை என்றுதானே வந்து இருப்பான். கண்ணன் என்னும் காளைக்கு பக்கத்தில் இரண்டு யானை, அவர்களுக்கு முன்னால் ஆயிரம் யானை என்ன ஒரு அற்புத கனவு. அந்த கனவில் விடுப்பட்ட மூன்று யானைகளையும், காமதேனுவையும் ஜெ இன்று கனவு கண்டு பிடித்துவந்து நம் கண்முன் நிறுத்துகின்றார். நன்றி ஜெ.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். –ஆண்டாள்.

கோதை! ஜெ இன்று இந்திரநீலம் எழுதுவார் அதில் தேவகியை காமதேனு என்று சொல்லப்போகின்றார்.  காமதேனு ஈன்று எடுக்கும் மைந்தன் காளையாகத்தான் இருப்பான் என்று அன்றே கண்ணனை காளையாக கனா கண்டாயா? அவன் சுற்றம் யானை, அவன் நடையோ சிங்கம், அவனோ காளை.  காளையின் தாயோ காமதேனு. கனவுகள் முடிவதில்லை.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்-ஆண்டாள்.
  
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.