Tuesday, August 25, 2015

எளிய மனிதர்களின் ஏக்கம்:


     நான் துரித உணவகத்திற்கு உணவுப்பொட்டலங்களை வாங்கச்செல்வேன். ஒவ்வொரு முறையும் பொட்டலங்களை வாங்கி பணத்தினை தந்துவிட்டு திரும்பும்போது சமைப்பவரிடம், சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு வருவேன். அவருடைய  எப்போதும் இறுகி இருக்கும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றும். அந்த புன்னகைக்காக ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் அவரிடம்  விடை பெற தவறுவதில்லை. 

     நம்மில் பலர் மனதில் மிக எளியவர்கள்.  நாம் பெரிய நிபுணர்கள் இல்லை.   புதிய புதிய தத்துவங்களை, அறிவியல் கோட்பாடுகளை, கலைகளை, கண்டடையும் திறனில்லாதவர்கள். மக்கள் நலனுக்காக நம் வாழ்வை அர்பணித்துக்கொள்ளும் துணிவற்றவர்கள்.  அதனால்  நம் வாழ்வில் நமக்கென்று பெருமிதங்கள் இல்லை. நாம் உலகின் கவனத்தில் வராத கடை கோடி மனிதர்களாக நம்மை உண்ர்கிறோம். இதற்கான வருத்தம் நம் அக ஆழத்தில் இருந்தபடி இருக்கிறது. இந்த வருத்தம் காரணமாக நம் வாழ்வு மிகவும் சலிப்பானதாக இருக்கிறது. நம்மை புகழ்ச்து நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு சிறப்பை அங்கீகரிக்க யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம் நம்மிடம் எப்போதும்  உள்ளது.   

        யாராவது ஒருவர்  நம் மீது கவனத்தை செலுத்தி நம்மிடம் இருக்கும் எதோ ஒரு சிறப்பை அவர்  அங்கீகரிக்கும்போது, அல்லது புகழும்போது,  அது நமக்கு மிகுந்த மன நிறைவை அப்போதைக்கு அளிக்கிறது.   சலிப்பான வறண்ட வாழ்வில் ஒரு குளிர் தென்றல் வந்து சென்றதைப்போல் நாம் அகம் மகிழ்கிறோம்.  இந்த தென்றலுக்காக காத்தபடி தினமும் இருக்கிறோம். இதில் நாம் அடையும் ஏமாற்றம்  நம்மை மேலும் மேலும் இறுகவைக்கிறது, அக் கடினப்பட்ட மனம் மற்றவரை கவனிக்கவிடுவதில்லை. மற்றவர்களை நம் கடுகடுப்பினால் காயப்படுத்தவும் செய்கிறோம்.  

   நமக்கான  அங்கீகாரத்திற்கும் புகழுக்கும்  ஆசைப்படும் நாம் அதைப்போல்தான் மற்றவரும் எதிர்பார்ப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். மற்றவர்களுக்கு அந்த அங்கீகரத்தை தருவதில்லை, புகழவேண்டிய தருணங்களில் வாளாவிருந்துவிடுகிறோம்.     உண்மையில் இதை நாம் செய்யும்போது நமக்கு எப்போதும் நன்மையே தவிர எவ்விதத்திலும் கெடுதல் இல்லை. இதற்கு நாம் ஒரு காசு செலவிட வேண்டியதில்லை. பெரிதாக உடல் உழைப்பையோ நேரச்செலவையோ கோராத இந்தச்செயலை செய்ய மிகவும் தயங்குகிறோம். இன்னொருவனை அங்கீகரிப்பதில் நம் அகங்காரம் எவ்விதத்திலோ காயப்படுகிறது. இது ஏனென்று தெரியவில்லை.

      நாம் அங்கீகரிக்கும்போதும் புகழும்போதும்  ஒருவர் தன்  இறுக்கம் தளர்கிறார், மனம்  நெகிழ்கிறார், மகிழ்கிறார்.  நம்மிடம் அவருக்கு ஒரு பிரியமும் நெருக்கமும் உருவாகிறது.  ஒருவருக்கு சாதாரணமாக பிறர் மேல் எப்போதும் இருக்கும் தயக்கமும் சந்தேகமும் நம்மேல் வெகுவாக குறைகிறது.  நாம் சொல்வதை அவர் கவனத்தில் கொள்கிறார். நம்மிடம் அவருகு ஒரு இணக்கம் வருகிறது.

     சுபத்ரை நெய் விற்கும் அந்த இடையர் குல பெண்களை  சரியான விதத்தில் புகழ்கிறாள். வயதான பெண்ணை அவள் கொணரும் நெய்யை புகழ்வதன் மூலம் அவள் கைதிறமையை பராட்டுகிறாள். மற்ற இருவரின் அழகை புகழ்கிறாள். அதன் காரணமாக   அவர்கள் மனம் தம் இயல்பான  தயக்கங்களை விடுத்து அவளை நம்புகின்றனர். அவளை அவர்களில் ஒருத்தியாக கருதி அவள் சொல்படி அவர்களை அறியாமலேயே நடக்க ஆரம்பிக்கிறார்கள். உருவில் பலராமனைக் கொண்டிருந்தாலும் அவள் குணத்தில் அந்த மாயக் கள்ளனை அல்லவா கொண்டிருக்கிறாள். எந்தக்கயிறால் கட்டி எந்த மனிதர்களை ஆட்டுவிக்கலாம் என்பதை அவளுக்கு சொல்லியா தரவேண்டும்.

 தண்டபாணி துரைவேல்