Wednesday, October 14, 2015

அர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்?



பிரிவு:
அதற்கு முதலில் பார்த்தன் எங்கிருந்து வருகிறான் என்பதை அறிய வேண்டும். உலூபியிடம் தனக்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய அரவான் என்ற மகனைப் பெற்று, இது நாள் வரை அவன் உணராத காதலையும், இரண்டென்று ஒன்றில்லாத அன்பையும் பெற்று திளைக்கும் அர்ஜுனன் எதனால் அவளிடம் இருந்தும் விலக வேண்டும் என நினைக்கிறான்? அவளிடமிருந்து விலகி இந்திரனிடம் அடைக்கலமாகி, தனக்காகக் காத்திருந்தால் அவளைக் காதலிப்பது என்று திரும்பி வந்த அர்ஜுனனை, அவனைச் சந்தித்த அதே இடத்தில் மழையில் உடல் குறுக்கி நின்று வரவேற்கிறாள் உலூபி. அவள் பால் அவன் காதல் கொள்ள அவள் அவன் தேவையை, அவன் அன்னையிடம் இருந்து ஏங்கிய பாசத்தை, முழுமையாகக் கொள்ள இயலாத திரௌபதியின் காதலை, இவையெல்லாம் அவனில் நிறைக்கும் தனிமையை, ஏக்கத்தைச் சுட்டுகிறாள். அதுவரையில் அவன் இழந்த அனைத்தையும் அவளால் திருப்பித் தர முடியும் என்று சொல்கிறாள். அவள் காதலை உணர்ந்தே அவனும் காதல் கொள்கிறான். அக்காதல் அவனில் நுழையும் போதே விலக வேண்டிய காரணத்தையும் சேர்த்தே அழைத்து வருகிறது. எனவே மகன் பிறந்ததும் அவன் பிரிய ஆயத்தமாகிறான்.

அவன் பிரிந்து செல்வான் என்று தெரிந்தே மணம் கொண்ட உலூபியும் மகனைப் பற்றிக் கொள்வதால் பார்த்தனுக்கு விடை தரத் தயாராகியிருப்பாள். ஆனால் பெற்ற மகனைப் பிரிவது என்பது ஒரு தந்தைக்குச் சாத்தியமா? உலகின் மிகப் பெரிய சோகம் என்பது மகனைப் பிரிந்த தந்தையின் சோகம் என்று தானே தருமனும் யக்ஷப்பிரசனத்தில் சொல்கிறான்!! பிரிவென்பதை இயல்பிலேயே கடக்கும் சக்தி பெண்ணுக்குத்தானே வழங்கப்பட்டுள்ளது. எனவே தான் அவர்களைப் பிரிந்த பார்த்தன் தன்னைப் பெண்ணாகவே பாவித்துக் கொள்கிறான். தன் பெண்மையை, அதை விழுங்கும் கண்களை, அவை தன் உடலில் தரும் மெய்ப்புகளைக் கவனிப்பதன் மூலமும், ஆடலும் பாடலுமான ஒரு தொழிலைக் கைக்கொள்வதன் மூலமும் தனிமையில் பிரிந்தவர்களைப் பற்றி எண்ணாதவனாகிறான். மேலும் மேலும் ஓடிக்கொண்டே இருப்பதன் மூலம் உயிர்ப்புடன் இருக்கிறான். இதனை உணர்ந்ததால் தான் நம்முன்னோர் நதியைப் பெண்ணாகப் பாவித்தனர்!!!

தனிமை:
குடும்பத்தைப் பிரிந்தவன் தனிமை அகமழிக்க வல்லது என்பது மிகைச் சொல் அல்ல. அதுவும் முதன் முதல் காதலை முழுமையாக உணர்ந்து, அனுபவித்தப் பின் பிரியும் அர்ஜுனன் எத்தகையத் தனிமையில் உழல வேண்டியிருந்திருக்கும்? அவன் ஆண்மகனாக, வில்லேந்தி சென்றால் அவனை அஞ்சியே அனைவரும் தள்ளி நின்றிருப்பர். அது அவனை மேலும் மேலும் தனிமையில் தான் தள்ளி இருக்கும். அவன் வேறு ஒருவனாக வேடமணிந்தாலும் அர்ஜுனனை மறைத்துக் கொள்ளுதல் என்பது மிகக் கடினம். முழுமையாக மறைய வேண்டுமானால் அவன் பெண்ணாக வேண்டும்.  ஒரு பெண்ணாக அர்ஜுனனை யாரும் எதிர்பார்த்திருந்திருக்க வாய்ப்பில்லை. பெண் என்பதாலேயே அச்சமின்றி அவனை அணுகவும் செய்வர். அணுகியவர் அத்துமீறாமலிருக்கத் தேவையான உடல் மொழியை அர்ஜுனன் கைக்கொள்கிறான். ஃபால்குணை அந்த வணிகர் குழுவில் இணையும் அந்த இடத்தில் இருந்து அவள் உடல் மொழியைப் பார்த்தால் அவளை ரசிக்கும் எவரும் அவளிடம் அணுகக் கூடிய எல்லைக்குள் மட்டுமே நிற்பதைக் காண இயலும். அந்த எல்லையை
“நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்” கொண்டு நிறுவுகிறாள்!!

மணிபுரியின் நெறி:

இவையனைத்துக்கும் மேல் அவன் அடுத்ததாகச் செல்லத் திட்டமிட்ட பகுதி மணிபுரி. அது தன் எல்லைக்குள் நுழையும் அன்னியர் எவரையும் வெட்டி வீழ்த்தும் நெறியைக் கொண்ட நாடு. கொஞ்சமேனும் யோசித்து, அதன் பின் தலை கொள்வதென்றால் அது ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்