Saturday, January 30, 2016

வெண்முரசின் சொற்கள்




அன்பின் ஜெ எம்.,
வெண்முரசும் தனித்தமிழும் பதிவுபற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன்.

பழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும் மீட்டுக்கொண்டு வந்து நம் முன் படையலாக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே வெண்முரசை நான் என் சென்னியில் சூடிக்கொள்கிறேன். அதன் கதை ஓட்டம் பாத்திர மனநுட்பங்கள் உள்மடிப்புக்கள் இவற்றிலெல்லாமும் பாவி மனம் பறி போனாலும் வெண்முரசின் தமிழே என்னைப் பரவசச்சிலிர்ப்புக்கு ஆளாக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

கொற்றவைக்காப்பியத்தில்  பதச்சோறாக இருந்த அந்தப்போக்கு இங்கே திகட்டத் திகட்ட உண்டாட்டாக நம்மை முழுக்காட்டி வருகிறது. தொல் தமிழை அதன் வளமைகளோடு இன்றைய தலைமுறைக்குக் கடத்துவதன் வழி என்றோ நம்மில் தொலைந்தும் கலைந்தும் போன மொழி என்ற அடையாளத்தை,மந்திரம் போல் சொல்வன்மையால்  மீட்டெடுத்துக்கொண்டுவருகிறது வெண்முரசு.

அண்மையில் மதுரை காமராசர் பல்கலையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு சு வேங்கடராமனுடன் [ அவர்,உங்களுக்கும் நன்கு தெரிந்தவரே,அவரைப்பற்றித் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டதும் உண்டு ]  கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் இதையேதான் பகிர்ந்து கொண்டோம்.,’’எப்படிப்பட்ட அருமையான பழந்தமிழ்ச்சொல்வளம்’’ என்றார் அவர்.

இன்றைய நவீன இலக்கிய களத்தில் -அதிலும் தமிழ்நிலத்தில் நிகழாத ஒருகதைப்புலத்தில்- பழந்தமிழை மீட்டெடுத்து அதன் நுட்பங்களை , எழிலார்ந்த சொல்லாட்சிகளை - அவற்றின் அடிப்படையில் உங்கள் படைப்புத் திறனால் கட்டமைக்கப்படும் புதிய சொல்லாட்சிகளையும் [தன்னேற்பு மணம் என்பது போல] சேர்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு  சேர்க்கும் காலம் கரைக்காத மகோன்னதப்பணியை வெண்முரசு  செய்து வருகிறது.

சங்கத்துக்குப்பின் காலம் காணாமல் அடித்து விட்ட ஒன்றை நீங்கள்  தேடித் தேடி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள்...நான் மட்டும் இப்போது பணியில் இருந்திருந்தால் ஆர்வமுள்ள மாணவக்குழுவையோ ஆய்வாளர்களையோ[ காசுக்கு ஆய்வேடு எழுதி வாங்கும் கூட்டத்தை நான் இங்கே குறிப்பிடவில்லை] ஒருங்கிணைத்து வெண்முரசின் அரிய சொற்களை LEXICON ஆக்கப் பணித்திருப்பேன்,அதற்கு வழிகாட்டி அதன் அடிப்படையில் ஆய்வு செய்ய உதவியும் இருப்பேன்.

நானாக மட்டுமே  அதில் ஈடுபட முடியாமல் என் வயதின் தளர்ச்சியும் பிற பணிச்சுமைகளும் என்னைத் தடுக்கின்றன.எனினும் வருங்காலத்தில் எவரேனும் அதைச்செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த உள்ளார்ந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.



--
எம்.ஏ.சுசீலா