Wednesday, March 30, 2016

வாழ்த்தப்பட்டவனும், காக்கப்பட்டவனும்:



தெய்வங்களுக்கும் அரிதான ஈருயிர் ஓருடலாகும் விந்தையை வெற்றிகரமாக ரம்பகுரம்பன் நிகழ்த்தியமைக்கு முக்கியமான காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொண்டனர் என்பதே. விழியிழந்த ரம்பனுக்கு ஒளியாக குரம்பனின் பிறர் கேளாச்சொல் இருந்தது. குரம்பனின் பாதையில் ரம்பனின் கால்கள் நடந்தன. இதை வெண்முரசு “ஒளியென்பது  குரல் என ரம்பன் நம்பினான்.  காலென்பது ஓர் எண்ணம் என்று குரம்பன் நினைத்தான்.”, என்று சொல்கிறது. ஆணைகளை ரம்பனும், நூலாய்ந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகளைக் குரம்பனும் மொழிந்தனர். உணவை எடுத்து இருவருக்கும் ஊட்டியவனாக ரம்பனின் வலக்கை இருந்தது. மொத்த உடலின் இடப்பகுதியின் செயலாற்றும் கையாக குரம்பனின் இடக்கை இருந்தது. ரம்பனின் இடப்புறத்தில் அமைந்தவனாக குரம்பன் இருந்தான்.

உடல்கள் ஒன்றானாலும் உள்ளங்கள் ஒன்றானதா என்றால் இல்லை. இருவரின் உள்ளங்களும் தங்கள் தனித்தனி அடையாளத்திற்காக ஏங்கின. அடையாளம் என்பது அவரவர் ஆளுமைகளின்  தேவையால் உருவாவது தானே. இரு ஆளுமைகளும் இரு பெண்களைத் துணைக் கொண்டன. இரு உடலாக இருந்தாலும் செயலாற்றும் ஒருவன் என்ற வகையில் ரம்பனின் ஆளுமையே அவர்களிருவருக்கும் கிடைத்த அனைத்து பெருமைகளையும் (அர்ஹிதை) ஏற்றுக் கொண்டது. எனவே இயல்பாக அர்ஹிதையை ரம்பனின் ஆளுமையே காமம் கொண்டாடியது. என்றென்றும் ரம்பனால் பாதுகாக்கப்படுபவனாக, ரக்ஷிக்கப்படுபவனாக இருந்த குரம்பனின் ஆளுமை ரக்ஷிதையைக் கலந்தமைந்தது.

இந்த ஆளுமைகளுக்கு இடையேயான பிளவே அவை வெளிப்படையாகத் தெரிந்த வேள்வியின் போது நிகழ்கிறது. அவர்கள் பிரியும் முன் அவர்கள் இருவரும் அடையும் குழப்பங்கள் இன்னும் நுட்பமானவை – ரம்பனுக்கு உலகம் இருண்டு விடுகிறது, அதுவரை ஒளியாக இருந்துவந்த குரம்பனின் கேளாச் சொல் இப்போது கேட்கும் குரலாக சுருங்கிவிடுகிறது. குரம்பனின் உள்ளத்தெழுந்த நடத்தல் என்ற எண்ணம் ரம்பனின் கால்களை அடையாததால் செயலிழந்த உடலாக மாறிவிடுகிறது.

உள்ளத்தின் நிலையழிதல் ரம்பனின் உடலின் நிகர் நிலையையும் சிதைக்கிறது. தன் இடப்புறத்தில் இருந்த ஒரு பாதி இல்லாமையால் அவன் இடக்கை இயல்பாக அவன் இடத்தொடையைத் தடவிக் கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் தான் குரம்பன் அமர்ந்திருந்தான். இருவரும் ஓருடலாக இருக்கையில் செய்த செயல்களில் பெரும்பகுதியை எண்ணி இயற்றியவன் என்ற வகையில் ரம்பனின் உள்ளம் இயல்பாகவே ‘நான்’ என்ற அடையாளமாக இரு உடல்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறது. இப்போது அதில் பாதி இல்லை என்பதால் நான், நான் என்று அரற்றிக் கொண்டிருக்கிறது.
குரம்பனைப் பொறுத்தவரை உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவன் உள்ளத்தால் என்றுமே ரம்பனை அண்டி இருந்தவன். ஆயினும் அவன் உள்ளம் உதிக்கும் எண்ணங்கள் அனைத்தையுமே ரம்பன் இயற்றவில்லை அல்லது ரம்பனின் உடலுக்கு எட்டவில்லை. அதனாலேயே அவன் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக ரம்பனை அன்னியமாகப் பார்க்கத் துவங்கியிருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே ‘நீ’ என ரம்பனைப் பிரித்துப் பார்த்த அந்த சொல். அவன் உள்ளத்தின் கொந்தளிப்பை நிமித்திகர் சூரரின் கனவில் அவர் மைந்தனைத் திட்டுவதாக வரும் “நீ என் மகனே அல்ல. மகன் என்றால் நான் சொல்வன உனக்கு ஆணையென்றிருக்கும். நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை” என்ற சொற்கள் உணர்த்துகின்றன.

வலமிடமாக இணைந்தவர்கள்:

பிரிந்தவர்கள் மீண்டும் இணைகையில் குரம்பன் ரம்பனின் வலப்புறத்தில் வந்து அமைகிறான். ஏனென்றால் இந்த பிரிவில் மிக மிக வருந்தியவன் ரம்பனே. ஏனென்றால் அவன் உடலின் பாதியை இழந்ததாக உணர்கிறான். அந்த இழப்பே அவனை குரம்பனின் ஆளுமைத் தேவைக்காக விட்டுக் கொடுக்கச் செய்கிறது. இப்போது உணவுண்ணும் கரமும், இடப்பகுதியின் செயலாற்றும் கரமும் இடம் மாறுகின்றன. (இதை யாருமே கவனிக்கவில்லை என்பதில் இருந்து சாமானியர்கள் இயற்கையின் விதியிலிருந்து விலகியவற்றை எதிர்கொள்ளும் விதம், உதாசீனம் என்று விளங்கிக்கொள்ளலாம். இந்த விலகல் அவர்களுக்கு முதலில் அச்சத்தைத் தான் தருகிறது. பிறகு அந்த அச்சத்தை உதற அவர்கள் அதை உதாசீனப் படுத்துகிறார்கள். மிக இயல்பாக அதைக் கடந்து செல்கிறார்கள். அதன் மாற்றங்கள் அவர்களை வந்து அடைவதே இல்லை. அதைக் கடந்து செல்வது மட்டுமே ஒரே பணி.)

இணைந்த மகிழ்வின் உச்சங்களைக் கொண்டாடும் அவர்கள் சற்று சமநிலையடையும் போது அவர்களின் பிரிந்த ஆளுமைகள் மீண்டும் தலையெடுக்கின்றன. கேளாச்சொல்லாக தன் எண்ணங்களை ரம்பனால் செயல்படுத்திக் கொண்டிருந்த குரம்பனின் ஆளுமை ரம்பனின் வலக்காதில் கேட்கும் படியாக ‘நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை’ என்று உரைத்திருக்கும். அப்படி குரம்பனால் உரைக்க முடியும் என்பதை நம்ப இயலாததாலேயே அவன் மீண்டும் மீண்டும் வலதுகாதின் மேல் அடித்துக் கொண்டே இருக்கிறான்.

அச்சொல்லால் தூண்டப்பட்டே ரம்பன் குரம்பனை கொல்லத் துடிக்கிறான். இருப்பினும் செயலாற்றல் குன்றிய வலக்கையால் குரம்பனின் கழுத்தை உடனடியாக நெரிக்க இயலவில்லை. அதனாலேயே குரம்பன் தப்பிக்கிறான். எவலர்களிடம் ரம்பனைக் கொல்லும் படி குரம்பனே ஆணையிடுகிறான். ஏனென்றால் குறைபட்ட ஆளுமை அவனுடையது. குரம்பனைத் தன்னிடம் தரும்படி தான் ரம்பன் கேட்கிறான். இன்னும் நிறைவுடன் இருந்து புண்பட்ட ஆளுமை தானே அவனுடையது. வலக்கை எடுத்து உண்டதெல்லாம் குரம்பனின் வயிற்றுக்குத் தானே. ரம்பனுக்கு கொஞ்சமே சேர்ந்திருக்கும். எனவே தான் அவன் உணவை வேண்டாம் என்கிறான். மாறாக குரம்பனுக்கு பசி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவரும் மற்றவரின்றி முழுமையாக இயலாது என்பதை அறிந்திருக்கிறார்கள். மற்றவரை முழுமையாக ஏற்கவும் இயலாது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். அதனால் முடிவை நோக்கி பொறுமையிழந்து காத்திருக்கின்றனர்.

பொதுவாக நமது மூளையின் இடப்பகுதி உடலின் வலப்பகுதியையும், வலப்பகுதி இடப்பகுதியையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இடமும் வலமும் மாறினால் என்ன ஆகும்? இயல்பாக சித்தமழிந்து இறப்பு தானே நிகழும். பன்னிருபடைக்களத்தின் துவக்கமே அட்டகாசம். ஜெ வின் கற்பனைத் திறன் ஆச்சரியமூட்டுகிறது. பின்னிவிட்டீர்கள் ஜெ.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.