Tuesday, April 26, 2016

மூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)


 
   அறிவியலில் இயற்பியல் பிரிவில் ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருக்கும்போது சமநிலையில் ( equilibrium) இருக்கிறது எனச் சொல்கிறோம்.    ஒரு பொருள் அப்படி நிலைத்து இருக்கையில் இரு புள்ளிகளின் அமைவிடங்கள்  முக்கியமானவை. ஒன்று ஆதாரப் புள்ளி.  அப்புள்ளியின்மேல் அது தாங்கப்பட்டிருக்கும் அல்லது அப்புள்ளியில் அது தொங்க விடப்பட்டிருக்கும். இன்னொரு புள்ளி புவியீர்ப்பு மையம்.  இந்த இரு புள்ளிகளும் அந்தப் பொருளில் எவ்விடத்தில் அமைந்திருக்கின்றன என்பதைப்பொருத்து அப்புள்ளியின் சமநிலையை மூன்று விதமாக பிரித்துப்பார்க்கலாம்.
       

ஆதாரப்புள்ளி,  புவியீர்ப்பு மையத்திற்கு மேலிருந்தால் அது நிலைத்த சமநிலை கொண்டது எனச் சொல்கிறோம்.. அப்பொருளை எப்படி அசைத்தாலும் அது தன் இடத்திற்கு வந்துவிடும். எடுத்துக்காட்டுக்கு தொங்க விடப்பட்டிருக்கும் ஒரு கரண்டியை அல்லது ஒரு ஊஞ்சலைச் சொல்லலாம். ஊஞ்சலின் ஆதாரப்புள்ளி அது கட்டப்பட்டுள்ள உத்தரத்தில் உள்ளது. புவியீர்ப்பு மையம்  அதன் பலகையின் மையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. அதாவது ஆதாரப்புள்ளிக்கு கீழே. இப்போது ஊஞ்சலை எவ்வளவு தூரம் எவ்வளவு விரைவாக அசைத்தாலும் தன் பழைய நிலைக்கு சிறிது நேரத்தில் வந்துவிடும்.  அது தன் பழைய நிலையை அடையவேண்டும் என்ற பேராவல்    கொண்டிருப்பதாக  நமக்கு தோன்றும்.


   இரண்டாவது சமநிலை ஆதாரப்புள்ளி புவியீர்ப்பு மையத்திற்கு கீழே இருப்பது. உதாரணத்திற்கு ஒரு பலகைமேல் விழாமல்  நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு பென்சிலைச் சொல்லலாம். பென்சிலின் ஆதாரப்புள்ளி பென்சில் பலகைமேல் நிற்கும் அதன் அடிப்பக்கத்தில் இருக்கிறது. புவியீர்ப்பு மையம் பென்சிலின் மையத்தில் அதாவது உயரத்தில் இருக்கிறது.  இப்போது  சற்று வேகமாக வீசும் காற்று போன்ற ஒரு சிறு விசைகூட, பென்சிலை நிலைமாறி விழவைத்துவிடும்.   அது விழுவதற்கு எதோ ஒரு  காரணத்திற்காக  காத்திருக்கிறது என்பதுபோல தெரிகிறது.  இதைப்போன்ற சமநிலையை நாம் நிலையற்ற சமநிலை எனக்கூறுகிறோம்.

   மூன்றாவதாக  இருக்கும் சமநிலையில் பொருளைத் தாங்கும் ஆதாரப்புள்ளியும் புவியீர்ப்பு மையமும் ஒன்றென இருக்கும்.  ஒரு அச்சில் சுழலும் சக்கரத்தை எடுத்துக்கொள்வோம் அதன் புவியீர்ப்புமையம் அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் அச்சிலேயே உள்ளது. அதற்கு எல்லா நிலைகளும் சமநிலைதான். அதை அசைத்தால் அது தன் நிலையை மாற்றிக்கொள்ளும். ஆனால் அது அப்போது கொள்வதும் அதன் சமநிலைதான். அதன் அனைத்து நிலைகளிம் அது சமநிலையில் இருக்கும். அதை சுழலவிட்டால் அது சுழன்றுகொண்டிருப்பதே ஒரு  சமநிலையென ஆகிறது.


    மேற்கண்ட இயற்பியல் தத்துவத்திற்கு வெண்முரசின் கதாபாத்திரங்கள்  உதாரணமாகத் திகழ்வதைப் பார்க்கிறேன்.  நிலைத்த சமநிலைக்கு தருமன் ஒரு மிகச்சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறான. அவனுடைய தாங்குபுள்ளி அவனுடைய அற உணர்வு. அவன் விழைவு அல்லது  நோக்கத்தை  புவியீர்ப்பு மையமெனக் கொள்ளலாம். அது அவன் அறவுணர்வுக்கு  கீழாக இருக்கிறது. அவனை குந்தி, பாஞ்சாலி, அர்ச்சுனன் பீமன் போன்ற அவனைச் சார்ந்தவகள் மற்றும் அவனை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் அவனை அவன் இயல்புவிட்டு  அசைக்கிறார்கள்.  ஆனால் ஒவ்வொருமுறையும் அவன்  தன் அறநிலைக்கு திரும்பிவிட முயற்சிக்கிறான். எப்படியாகிலும் தன் அற உணர்வை அவன் காத்துக்கொள்கிறான்.  ஒரு  ஊஞ்சலைப்போல எவ்வளவு விசைகொண்டு ஆட்டினாலும், திரும்ப அவன் மனம் அறத்தை பேணுவதையே எண்ணுகிறது. அவன் ஏதோ எடுப்பார்கைப்பிள்ளைபோல, எப்போதும் தத்தளித்துக்கொண்டிருப்பதைப்போல தோன்றுகிறது. ஆனால் அவன் மற்றவர்களைப்போல் அல்லாமல்  நிலைத்த சமநிலையைக் கொண்டவனாக இருக்கிறான்.


   துரியோதனன் மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மையோடு  மனதில் பகைமை என ஒன்று இல்லாமல்  சிலகாலம் இருந்ததைப் பார்த்தோம். அதற்கு   திருதராஷ்ட்டிரன், பானுமதி என்பவர்கள் அவன்மேல் கொண்ட ஆளுமை  இரு விரல்களெனப் பிடித்து ஒரு ஒரு பென்சிலைப்போல  அவன் நிலைகுத்தாக அப்போது நிற்க வைக்கப்பட்டிருந்ததுதான்  காரணம்.   அப்படி நிற்கும் போது அவன் ஓங்கி உயர்ந்து தோன்றினான். ஆனால் அந்தப் பெருந்தன்மை என்ற ஆதாரப் புள்ளி, அவனுடைய ஆதி இயல்பெனும் புவியீர்ப்பு மைத்தைவிட  வெகு கீழே இருந்தது.    திரௌபதியின் இதழில் தோன்றிய ஒரு சிறு புன்னகை, அவள் பார்வையில் அவன் கண்ட ஏளனம் அவனை ஒரேஅடியாக சாய்த்து வீழ்த்தி விடுகிறது.  அவன் சமநிலை குலைந்துபோய்  அவனுடைய ஆதிஇயல்புக்கு  மீண்டும் திரும்பிவிடுகிவிடுகிறது. அதுவே அவனின் நிலைத்த சமநிலை.    துரியோதனின் இந்த மாற்றத்தை  வெண்முரசில்  காண்கிறோம்.  நாம் அடையும் எண்ணம் எப்படி இருந்த துரியோதனன்  இப்படி ஆகிவிட்டான் என்பதல்ல. இப்படி இருக்கவேண்டிய துரியோதனன்தான் நடுவில் சில  நாட்களாக அப்படி இருந்தான்  என எண்ணுவதே  பொருத்தமாக இருக்கும்.   கர்ணனின் நிலையும் இதைப்போன்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவன் நிலை நிறுத்திவக்கப்பட்டிருக்கும் ஒரு   அகன்ற இரும்பு கம்பம் போன்றவனாவான்.   அதை மற்றவர்களின் சிறு செய்கைகள் சாய்த்துவிட முடியாது.  ஆனாலும் அவன் அற உணர்வு என்ற ஆதாரப்புள்ளியை விட அவன் நட்புணர்வு, நன்றியுணர்ச்சி , எளியோரின்மேல் அவன் கொண்ட இரக்கம்  ஆகியவற்றினால் ஆன அவன் புவியீர்ப்பு மையம்  சற்று உயரத்தில் இருக்கிறது.  அதனால்  நண்பனின்  துயரம்,  எளிய மக்களுக்கான வஞ்சம் தீர்த்தல் என்ற யானைகள் அவன் மீது மோதும்போது அவன் தன் சமநிலையை இழந்துவிடுகிறான், 

   இன்னொருவன் இருக்கிறான். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு என்ன நேர்ந்தாலும் அவன் சமநிலையில் எப்போதும் இருப்பவன். அவனை அசைத்தால அவன் விழுவதில்லை சற்று சுழன்று கொள்வான். இதுதான் அவன் சமநிலை என்று எவராலும் கணிக்க முடியாது. நம்முடைய நன்மை தீமை,  இன்பம் துன்பம், மேல் கீழ் என எதுவம் அற்றவனாய அவன் இருக்கிறான்.  அவன் ஆக்கமும் காத்தலும் அழித்தலும் ஒன்றென கொண்டு   சுழன்றுகொண்டே இருப்பவன். அவன் அதை தன் கையிலிருக்கும் ஆழியின் மூலம் நமக்கு உணர்த்துபவன். அவன் இப்போது சமநிலையில் இருக்கிறான் என நினைக்கும்போது அவன் சுழன்றுசென்று இன்னொரு நிலையை எடுத்துக்கொள்வான. அதனால எவராலும் கணிக்கமுடியாத ஒருவனாக விளங்குகிறான்.  அவன் எடுக்கும் அனைத்து நிலைகளிலும் சமநிலையில்  இருக்கிறான்.  அவனுக்கு ஊசலாட்டமும் இல்லை விழுந்துபோதலும் இல்லை. அவன் காலச் சக்கரம், புத்தன்கண்ட அறவாழி.  மாயையால் நம்மை தலைகிறங்க வைக்கும் ராட்டினம்,  நம்மை அவன்மேல் மோகம் கொள்ள வைத்து தன்னிடம் ஈர்த்து தன்னுள் ஆழ்த்திக்கொள்ளும் மோகனச்சுழல், அதே நேரத்தில்  இந்த மாய உலகத்தை நோக்கி விசிறியடிக்கும் சுழற்காற்று அவன்.   வெகு சிலர்  பெரும் சிரமப்பட்டு போராடி ஒரே நோக்கமெனக்கொண்டு  அந்தச் சுழலின் மையத்தை நோக்கிச் செல்கிறார்கள்.   அப்போது அவர்களை  அந்த சுழல்  வாரி அணைத்து தன்னுள் ஆழ்த்திக்கொண்டு முக்தியளிக்கிறது.

தண்டபாணி துரைவேல்