Sunday, April 24, 2016

ஏகச்சக்கரவர்த்தி என்ற கனவு



வெண்முரசு மீண்டும் ஒருமுறை தனது ஒளிக்கற்றையை இருண்ட இடங்களில் பாச்சுகின்றது. வென்று அல்லது சூதுசெய்து தருமனின் மணிமுடியை பெறவேண்டும் என்பதை துரியோதனன் ஏன் அடைகிறான் என்று காட்டுகின்றது. ஐராசந்தனின் வாக்குவழியாக இது வரும்போது இன்னும் பலம்பெறுகிறது. வெறும் பொறமையோ பாஞ்சாலிமீது கொண்ட விழைவோ வெறுப்போ மட்டும் காரணம் இல்லை. ஏகச்சக்கரவர்த்தி என்ற தனது கனவு குலைக்கப்பட்டு  கனவாகவே வைக்கப்படுவதில் இருந்து எழும் வன்மம்இது.

அது நிகழ்ந்தபின் உயிர்வாழும் காலம் வரை தருமனே குருகுலத்தின் முதல்வனும் பாரதவர்ஷத்தின் தலைவனுமாக இருப்பான். அவனை களத்தில் கொல்லாமல் துரியோதனன் தனிமுடி சூடி ஆளமுடியாது. எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரி இந்திரப்பிரஸ்தத்திற்கு ஆட்பட்டது என்றே நூலோர்களால் கொள்ளப்படும்என்று ஜராசந்தன் தொடர்ந்தான். “ராஜசூயம் நிகழ்ந்தால் இழிவுகொள்வது பிற அரசர் எவரையும்விட துரியோதனனே. அது நிகழவேண்டுமா என்பதையும் அவனே முடிவெடுக்கவேண்டும்.”
வெண்முரசின் சிறப்பே அது மகாபாரதத்தின் சிடுக்குகளை எளிதாக பிரித்து நம்முன் வைத்துவிடுகிறது. அதை உணராமல்போகும் தருணத்தில் வெண்முரசு நீர்த்துப்போவதில்லை, வாசக நெஞ்சமே நீர்த்துப்போகிறது.

ஒருவன் முழுக்க முழுக்க வழிப்படும் தலைவனாகவோ அல்லது தூற்றப்படும் தலைவனாகவோ படைக்கப்படுவதில் என்ன பெருமை இருக்கமுடியும்?. வழிபடும் தலைவனாகவும் இருப்பவன் அகம் குலையும் நிலைதான் அறம்பிறழ்தல் என்பது அதை வெண்முரசு துரியன்மேல் ஏற்றிக்காட்டுகிறது.

உயிரற்ற மரங்கள் எத்தனை காற்று அடித்தாலும் அசைவதில்லை, ஆனால் உயிர் உள்ள மரங்கள் அசைகின்றன, அசைவதாலேயே அந்த மரங்கள் இயங்குவதில்லை. துரியனை உயிரற்ற மரமாகப்படைப்பதை விடுத்து வெண்முரசு உயிர் உள்ள மரமாக படைத்து அவனின் அசைவுகளைக்காட்டி இயங்கா நிலையைக்காட்டுகின்றது. இங்குதான் அவன் எதிரணித்தலைவன் என்பது நிறுவப்படுகிறது.  

எதிரணி்த்தலைவன் பற்றி சொன்னதால் கதைத் தலைவன் என்பதைப்பற்றியும் சொல்லவேண்டி உள்ளது, கதைத்தலைவன் கதைப்படி எதிர் திசையில் அசைந்தாலும் இயங்கவேண்டிய இடத்தில் அவன் மரம்போல் நின்றுவிடாமல் அறத்தின் வழி இயங்கிவிடுகிறான்.இதனால்தான் வாரலாற்றில் வாழ்க்கையில் காலத்தைக்கடந்து வழிபடும் தலைவனாகவே அவன் ஆகின்றான்.

ராமராஜன் மாணிக்கவேல்