Sunday, May 1, 2016

கனவில் கண்ட வெண்பசுவை கண்டறிந்து கொணர்பவர் (பன்னிரு படைக்களம் - 33)


  
 
  கடவுள்   இப் பூமியைப் படைத்து அதில் உயிர்களை உருவாக்கி அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார் என்பதுபோலத்தான் தெரிகிறது. உயிர்கள் பரிணாம வளர்சியினால் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போகின்றன.  மனிதனுக்கு கூடுதலாக சிந்திக்கும் திறனை படைத்ததனால்   அவன்  அறிவியல் தத்துவம் போன்றவற்றிலும் முன்னேறிக்கொண்டு போகிறான். கடவுள் நம்மை அப்படியே விட்டுவிட்டுபோய்விட்டாரா?  ஆனால் நான் நினைக்கிறேன்,  அவர் சரியான சமயத்தில் சில தூண்டல்களின் மூலம், சில வழிகாட்டுதல்களின் மூலம்,  தான் நினைத்தபடி இவ்வுலகை நடத்திக்கொண்டு போகிறார் என்று. அவர் நேரடியாக இவ்வுலக நிகழ்வுகளில் தலையிடுவதில்லை. யாரோ ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவன் மனதில் ஒரு பெருங் கனவை விதித்துவிட்டு புன்னகைத்தபடி பின்னகர்ந்துவிடுகிறார். அந்த  ஒருவன் அவன் கனவில் வந்த அந்த வெண்பசுவை ஊரெங்கும் தேடி  உலக வாழ்வின் இன்பங்களைத் துறந்து, கண் துஞ்சாமல் கடும் முயற்சிசெய்து,  உடல் வருத்தி தவமிருந்து  கண்டடைகிறான். 
     
 
   உலகில் எவ்வளவோ பிரம்மாண்ட கட்டுமானங்கள், கண்டுபிடிப்புகள், பேரரசுகள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஆனால் அந்த பிரம்மாண்ட படைப்புக்கு பின் நிற்பது யாரோ ஒரு தனிமனிதனின் கனவுதான். பலரின் உதவியோடு இந்த அரியவை நிகழ்ந்திருக்கலாம். ஆனால அவை ஒவ்வொன்றும் ஒரு தனி நபரின் கனவாக மட்டுமே உருவெடுத்ததாக இருக்கும்.  அவன் தன் கனவில் கண்ட வெண்பசுவைத்தான்  அரும்பாடுபட்டு  நிஜ உலகில் கண்டெடுக்கிறான்.  அப்படி கண்டெடுக்கப்பட்டவை  தஞ்சை பெரியகோயிலாக, தாஜ்மகாலாக, ஈபல் கோபுரமாக,  சீனப் பெருஞ்சுவராக, நம்முன்னே இன்று காணப்படுகின்றன. எங்கிருந்தோ வந்த ஒரு வெள்ளையனின் கனவில் வந்த வெண்பசு இன்று முல்லைப்பெரியாறு அணையாக எழும்பி எண்னற்ற மக்களின் பசியாற்றுகிறது. 
  
 
  உலகின் பெருஞ்செயல்களும் இப்படி தனிநபர்களின் கனவாக உருக்கொண்டவைதான்.  ஒரு இளைஞனான அலெக்ஸான்டரின்  வெண்பசு  பேரரசாக  உருவாகி உலகமெல்லாம் அரசாண்டது.   ஒருவனின் கனவு கடல் கடந்து சென்று கடாரம்கொள்ள வைத்தது.   இன்னொருவனின் கனவு பாரதத்தின் தென் முனையிலிருந்து கிளம்பி கங்கைகொண்ட சோழனாக திரும்பிவர வைத்தது.   ஒருவனின் கனவில் தோன்றிய வெண்பசு பலவேறுபாடுகளை உடைய மக்கள் தொகை உடைய ஒரு பெரிய நாட்டை  ஒன்றுபடுத்தி அஹிம்சை வழியில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைய வைப்பதாக இருந்தது.
 
 
  ஒரு உலகமறியா இளவரசன் தேடிக் கண்ட  வெண்பசு உலக மக்களின் துன்பத்திற்கான மருந்தை வழங்கியது.  எளிய மானுடன்  ஒருவனின்  வெண்பசு உலக மக்களின் மேல் கருணைப்பால் பொழிந்தது.    இளஞ்சங்கரன்  கண்டெடுத்த  வெண்பசு சிதறிக்கிடந்த ஞானச் செல்வங்களை ஒன்றிணைத்து காத்து, அழியாமை என்ற  அமுதளித்து வளர்த்தது.     அனைத்து முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தத்துவ ஞானங்கள் எல்லாம் தனிமனிதர்களின் கனவில் பார்த்ததை உலகில் தேடிக்கண்ட வெண்பசுக்கள்தான். 
 
    பெருங்காவியங்கள் எல்லாம் இப்படி தனிமனிதர்களின் கனவிலிருந்து உயிர்பெற்ற வெண்பசுக்களே.   ஒருவர் தன் கனவில் கண்டதை நனவில் உருவாக்க பாரதமெங்கும்சுற்றி, பலநூல்களை ஆய்ந்து, நன்நெறி தவறாது, வாய்மை விரதமிருந்து  செய்த பெருந்தவத்தின் விளைவாக,    என்றும் சிரஞ்சீவியாக இருக்கப்போகும்   தூயவெண்பசு  ஒன்று   அனைத்து வகை நற்சுழிகளுடன் பிறப்பெடுத்து,  குன்றா இளமையென்ற வரம்பெற்று, குறைவில்லாப் பேரழகைக்கொண்டு,   கூரிய பேரறிவெனும் ஆற்றல் பெருகிவர,   வெண்முரசு என்ற  பெயரேந்தி வளர்ந்து வருகிறது.  அது,  நமக்கு இலக்கியவின்பச்சுவை மற்றும் பல்வேறு ஞானச்சத்துக்கள் நிறைந்த பாலமுதை  தினம் தினம் அளித்துவருகிறது. அதைப்போற்றி வணங்கி அதன் சேயாய் அதன் மடிப்பாலை அருந்தி வருவதில் பெருமகிழ்வும் நலமும் கொள்கிறேன் நான்.
 
தண்டபாணி துரைவேல்