Monday, May 2, 2016

குகைப்பாதை

மீண்டும் "வைகாசி" வாசித்தேன்.

  பிருஹத்ரதனுடன் மற்றனைவரும் சுரங்கம் வழியாக தப்பிச்செல்லுமிடம், அகபாதாளமாக துலங்கியது.
 
அந்நிலையில் பத்ரரைத் தவிர மற்றனைவருமே, தம்முள் உள்ள கீழ்மைக்கு இரையாகுகின்றனர். அரண்மனையில் எத்தனை முறைமைகள்..அனைத்தும் ஏதோ ஒன்றினால் குலைக்கப்படும்வரை மட்டுமே. 
 
அவர்களின் பாதுகாப்பின்மையினால்  வரும் அகக்கொந்தளிப்பு, அதன் விளைவாக வந்து விழும் வார்த்தைகளே, அவர்களின் முடிவுக்கு வழி வகுக்கிறது.
 
அணிகையின் வாயிலிருந்து அவ்வுணர்ச்சியினால் வெளிப்படும் 
"நீங்கள் ஒரு நாள் கழுவில் அமர்ந்திருப்பீர்கள்! ஆம்! கழுவமர்ந்து நரகுக்கு செல்வீர்கள்" சொற்களே தீச்சொலாக மாறுகிறது. 
 
ஓர் அன்னையே தன் மக்களை நோக்கி இச்சொற்களை உதிர்க்க வேண்டுமெனில், அவளின் அகம் எந்தளவுக்கு புண்பட்டிருக்க வேண்டும்.
 
 
மூவரையும் கழுவிலேற்றியபோது, அணிதையின் சொல்லே என்முன் நின்றது.
 அதீத உணர்ச்சித் தருணங்களில், நாம் விழிப்புணர்வின்றி உதிர்க்குமனைத்தும் தீச்சொல்லே.

வாரணவதத்திலும், இது போன்ற சூழல். அன்னையும் மக்களும் அனைத்தையுமிழந்து தப்பிச் செல்கின்றனர். ஆனால் யாரையும் யாரும் இழித்துரைக்கவில்லை. அத்தருணத்தின் தேவைக்கேற்ப்ப செயல்படுகின்றனர். 
 
வெளிசூழ்நிலை கட்டுக்கடங்காது போகும்போது, ஒருவர் எவ்வாறு இயங்குகிறார், என்பதே அவர் யார் என்பதை நிர்ணயிக்கறது.
 
மகேஷ்