Sunday, July 31, 2016

அந்தணன் மொழி



“அந்தணனின் நாக்கு கல்லுக்குள் நெருப்பென உறையவேண்டும், கல்மட்டுமே அதை எழுப்பவேண்டும்”

கடுமையான மொழியில் பேசிய ஒரு பிராமணனிடம் அவர் ஆசாரியார் சொன்னதாக ஒரு உபதேசத்தை அடிக்கடி என் தந்தையார் சொல்வார்கள். தனக்குச் சமானமான அறிவும் பின்புலமும் உடைய இன்னொரு அறிஞனிடம் வித்வத்  சபைய்ல் மட்டுமே அவனுடைய வேகம் வெளிப்படவேண்டும். மற்ற எல்லா இடங்களிலும் மென்மையும் அடக்கமும்தான் அவன் வார்த்தைகளில் இருக்கவேண்டும்

வெண்முரசில் மேலே சொன்ன அழகிய வரி என்னை சிலிர்க்கவைத்துவிட்டது. நெரடியான ஒரு கவிதை. மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்ட ஒரு சுபாஷிதம். ஆனால் போகிற போக்கில் வந்துவிடுகிறது. அதைச் சுட்டிக்காட்டவேண்டுமென நினைத்தேன்

வேணுகோபாலன்

பெண்மனம்



ஜெ

தருமன் காடு செல்ல முடிவெடுத்து ஒவ்வொருவரிடமாக ஆசீர்வாதம் வாங்கும் காட்சி விரிவாக இருந்தாலும் நுட்பமாக காணமுடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதிர்வினைபுரிகிறார்கள். திருதராஷ்டிரர் குற்றவுணர்ச்சியுடன் இருக்கிறார். குந்தி அடக்கிய வன்மத்துடன் இருக்கிறாள். காந்தாரிக்கு சந்தேகம் இருக்கிறது. குழப்பமும் இருக்கிறது

எந்த சந்தேகமும் இல்லாமல் வந்து நிற்பவர்கள் அசலையும் பானுமதியும்தான். அவர்களின் கணவர்களை கொன்று ரத்தம்கொண்டு கூந்தல்முடிவதாகத்தான் அவள் வஞ்சினம் உரைத்தாள். ஆனாலும் அவர்கள் திரௌபதியை அணைத்து ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பெருந்தன்மையும் பெண்ணை ப்புரிந்துகொள்ளும் பெண்மனசும் அற்புதமாக வந்திருக்கின்றன

சித்ரா

ஊற்று



ஜெ

மகாபாரதத்தில் கடைசியில் தருமர் கண்டடைகிறார், எல்லாமே குந்தியின் திருஷ்ணையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என. ஆனால் வெண்முரசு ஆரம்பத்திலேயே நுட்பமாக அதைப்போட்டுக்கொண்டே செல்கிறது. இன்றைய அத்தியாயத்தில் குந்தியின் மனக்கொந்தளிப்பையும் வன்மத்தையும் பார்க்கும்போது [எனக்கு ஏனோ இந்திராகாந்தி ஞாபகம் வந்தார்] அவளே நானே தொடக்கம் என்னும்போது ஒரு நடுக்கம் வந்தது

இரண்டுகாட்சிகள் மனதிலே ஓடின. ஒன்று சௌவீரநாட்டு மணிமுடியை அவள் தலையில் வத்துக்கொள்வது. இரண்டு அவள் குந்திபோஜன் மகலாகப்போக முடிவெடுப்பது. எவ்வளவு காலம் முன்பு. இந்தகுந்தியை சின்னப்பெண்ணாகப்பார்த்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது

சிவராம்

சாணக்கியன்



ஜெ

நீங்களேகூட முன்னாடி எழுதி வாசித்த ஞாபகம். சந்திரகுப்த மௌரியனின் அமைச்சனாகிய சாணக்கியரைப்பற்றி முத்ரா ராக்‌ஷ்ஸம் நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு சித்திரம் வருகிறது. மௌரியப்பேரரசின் அமைச்சனாகிய சாணக்கியனின் குடிசை. அதில் ஒருபக்கம் வரட்டி. இன்னொருபக்கம் பிக்‌ஷாபாத்திரம். நடுவே மரப்பலகையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான்.

அதே சித்திரத்தைத்தான் நீங்கள் சௌனகருக்கு அளித்திருக்கிறீர்கள். மகாபாரதத்தின் புகழ்பெர்ற சௌனகநீதியை உரைத்தவர். அந்த நீதிமானுக்குரிய அழகான சித்திரம் அது. அவர்

அறமுரைக்க அந்தணன் மட்டுமே தகுதியானவன். ஏனென்றால் அவன் சொற்கள் உங்கள் ஆட்டக்களத்திற்கு அப்பாலிருந்து எழுபவை. தேவர்களைப்போல நாங்கள் உங்கள் முட்டிமோதல்களுக்கு நடுவே காற்றென கண்படாது உலவுகிறோம். ஒளியென விழியுடையோருக்கு மட்டும் காட்சியாகிறோம்.

என்ற வரியை நான் அந்தணனாக வாழ்பவனே அறமுரைக்கத் தகுதியானவன் என்று புரிதுகொள்கிறேன்

சுவாமி

ஓவியம்



இன்றைய அத்தியாயத்தின் படம் எத்தனை அருமை? நெருப்பின் முன் நிற்கும் சகுனியின் முன்பக்க வெளிச்சம் பின்னால் அவர் உடலின் விளிம்புகளில் தெரிகிறது. காற்றில் பறக்கும் தீப்பொறிகள்,பக்கத்தில் அடுக்கி வைக்கப்படிருக்கும் விறகில் பிரதிபலிக்கும் வெளிச்சம் சித்திரமல்ல ஒளிபதிவைக்காட்டிலும் சிறப்பாக உள்ளது

லோகமாதேவி

Saturday, July 30, 2016

மரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா



இனிய வணக்கங்கள் ஜெயமோகன் அவர்களே
 

வெண்முரசுநூல் ஐந்து – ‘பிரயாகை – 40 இல் இருந்து  ஒரு உரையாடல் --- “நீ ஒரு பேரழிவைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனேஎன்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம் ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அந்தப்பீடத்தை உடைத்து எறிந்தாகவேண்டியிருக்கிறது.  

அந்தப் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்என்றான் கிருஷ்ணன்.ஆம் மாயக்கண்ணன் சகுனியின் பகடை காய்கள்  வழியாக அந்த பேரழிவிற்கான  சூதாட்டக்களத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டான் .பல லட்சம் சத்திரிய வீரர்கள் துவந்த மற்றும் சங்குல யுத்தங்கள் புரிந்து உயிர்விடும் குருஷேத்ர போருக்கான சுழி பன்னிரு படைக்களம்வாயிலாக  போடப்பட்டது .ஆயினும் சகுனி அந்த பேரழிவை  - பலரது துர் மரணங்களுக்கு காரணமாகும் மகா பாரத போரை நிகழ்த்தபோகும் பகடைக்காய்களை அனலில் இட்டு பொசுங்க செய்கிறார் .ஆம் அந்த பகடை காய்கள் செதுக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டது .ஆதலால் அது அனலில் பொசுங்குவதை சகுனி வெறித்து பார்க்கிறார் .-- ‘சொல்வளர்காடு – 9

நீதி மன்றங்களில் மரண தண்டனை  விதித்து குற்றவாளிக்கு தீர்ப்பு கூறி அதனை படித்தபின் ,அந்த தீர்ப்பில் தன் கையொப்பம் இட்டபின்பு ,நீதிபதி அந்த பேனாவின் நிப்பை மேசையில் ஓங்கி குத்தி,அதன் முனையை உடைத்து ,பேனாவை தூக்கி வீசுவது தொன்று தொட்டு வரும் நடை முறை தான் .ஒரு மனிதனின் மரணத்திற்கு காரணமான  பேனாவின் ஆயுள் அந்த தீர்ப்புடன் முடிந்து விடுவது போல லட்சம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான பகடைக்காய்கள் ஆயுள் முடித்து வைக்கப்பட்டது சாலப்பொருத்தம். நன்றி ஜெயமோகன்   அவர்களே


தி . செந்தில்
 ஸ்ரீவில்லிபுத்தூர்

பிழை



கணிகரே, இனி நீங்கள் முடிவுசெய்யவேண்டும்” என்றார் விதுரர். “போர் ஒன்று நிகழவேண்டும் என நீங்கள் விழைந்தால் அதுவே நிகழட்டும். ஆனால் நீங்கள் அறிந்த ஒன்றுண்டு, எங்கள் தரப்பில் இளையபாண்டவர் களமிறங்கினால் பீஷ்மரே ஆயினும் நீங்கள் வெல்ல இயலாது.” கணிகர் சிரித்து உடல்குலுங்கினார். “அவர் களமிறங்கவேண்டுமென்றால் நேற்றே இங்கு வந்திருக்கவேண்டும்… நேற்று அவைகூடுவதற்கு முன்னரே” என்றார். கண்கள் இடுங்க விதுரரை நோக்கி “களமிறங்கவும் செய்தார். நுண்ணிய கண்களால் நான் அவரைக் கண்டேன்” என்றார்.

 இன்றைய பகுதியில் இது இளைய பாண்டவரா? அல்லது இளைய யாதவரா?


லோகமாதேவி.

ஒரு கவிதை

அன்பு ஜெ ,

முகநூலில் பேயோனின் இந்தக் கவிதையைப் பார்த்தேன். அந்த பரவசத்தின் வலி என்பது தினம் நான் வெண்முரசில் அனுபவிப்பது தான். புளிக்குழம்பில் இடும் ஒரு துண்டு வெல்லம் போல் உங்களது நினைவைச் சுவைக்க வைக்கிறது.

//கலைஞர்கள் மனிதர்களா?

கலைஞர்கள் மனிதர்களா?
எப்படி மாறுபடுகிறார்கள்
நம்மிடமிருந்து அவர்கள்?
எங்கிருந்து வருகிறது இந்த ஆற்றல்?
ஒரு வண்ணத் தேன் குளத்தில்
நம் தலையைத் திரும்பத் திரும்ப
முக்கியெடுத்து மூச்சுத் திணறவைத்துக்
குறுக்கும் நெடுக்குமான மாஞ்சாக் கோடுகளில்
சிக்கிக் கூறுபட்டு ரத்தம் சிந்தவைக்கும்
மூர்க்கம் எங்கிருந்து வருகிறது?
நம்மைப் பரவசத்தின் வலியில்
திளைக்கச் செய்து பந்தாடும் உரிமையை
இவர்களுக்கு யார் கொடுத்தது?
எதிரிகளைப் போல் அல்லவா
நடந்துகொள்கிறார்கள்!
- பேயோன்  //

அன்புடன்
செந்தில்நாதன்

பீஷ்மரின் மாற்றம்

 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசில் பீஷ்மர் சூதாட்டத்தின் பொழுது அரசன் சொல்வதையே கடைபிடிக்க வேண்டும் என்கிறார் இதன் பொருட்டு அவர் துரியோதனின் செயலுக்கு ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை , ஆனால் தற்பொழுது அரசனை உயிர் போகவைக்கும் அளவிற்கு அடித்திருக்கிறார் . ஏன் இந்த முரண் அதுவும் ஒரே நாளில். தற்பொழுது எப்படி அரசனை எதிர்த்து அடிக்க முடிந்தது 

ராமகுமரன்

அன்புள்ள ராமகுமரன்

இத்தகைய கேள்விகளுக்கு இடம் இருப்பதற்குப்பெயர்தான் புனைவின் இடைவெளி. அதை வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும்
 
 
 
வெண்முரசில் தெளிவான பதில் இருக்கிறது
 
ஜெ

பெண்ணின் இடம்



அன்புள்ள ஜெ வணக்கம்.

உத்தாலகர் ஸ்வேதகேது மனங்கள் திரும்பி நின்று எதிர் எதிராக பார்க்கும் பார்வை அழகு. அற்புதம். உடம்பு மட்டும் அல்ல அறிவும் எதிர் எதிர் நின்று கைக்கோர்த்து மல்யுத்தம் செய்யும் என்பதற்கு முதல் சான்று. மெய்மையில் இருந்து மெய்மை காய்த்து கனிகிறது. 

பெண்ணை பிரபஞ்சம் முழுவதற்குமான பொதுவான ஒருபொருளாக உத்தாலகர் பார்க்கிறார். இதுவரை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று அவருக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பெண் உடலாகவோ மனமாகவோ அறிவாகவோ பார்க்கப்படாமல் கருப்பையாக படைப்பின் மூலமாக மட்டும் வைக்கப்படுகிறது. இது ஒரு உண்மை. இந்த உண்மையின் வழி உலகம் இயங்குகின்றது. இயற்கையில் உள்ள அனைத்து பெண்மையும் இந்தவழியில் நிற்கிறது களிறும் மந்தியும் காளையும் அப்படித்தான் பெண்ணைப்பார்க்கிறது. அதனால் உத்தாலகர்வரை காலம் பெண்ணை அப்படிப்பார்த்தால்போதும். படைப்பு நடந்தால்போதும் மெய்மை தேடி அடையக்கூடியது அல்ல தானகவே கனியக்கூடியது. அவ்வளவுதான் அது பெண்ணுக்கு ஒரு தேவை இல்லாத ஒன்று

பெண்ணை கருப்பையாக மட்டும் பார்த்தால்போதுமா? அவள் ஒரு பொதுப்பொருள் மட்டும்தானா? ஸ்வேதகேது கேட்கிறார். விலங்கிற்கு இது பொதுவாக இருக்கலாம் மானிடபெண்ணுக்கும் இதுததான் நீதியா? கற்கவும் கற்பிக்கவும், அறியவும் அறிவிக்கவும் தெளியவும் தெளிவிக்கவும் ஆணுக்கு முடியும் என்றால் பெண்ணுக்கு ஏன் முடியாது? என்ற உள்ளொரிர் வினா ஸ்வேதகேது இடம் தோன்றி இருக்கவேண்டும். தேடுபவன் தேடுவதையாவது கண்டடைவான் என்பதை அறிந்து இருக்கும் ஸ்வேதகேது. பெண்ணை படைப்பின் வழியில் வரும் கருப்பையில் இருந்து உயர்த்திப்பார்க்கிறார். 

கணவனாகிய உத்தாலகரை சுடாத கண்ணீர் மகனாகிய ஸ்வேதகேதுவை சுடுகிறது. ஏன் ஸ்வேதகேதுவை மட்டும் உத்தாலகர் மனைவி கண்ணீா சுடுகிறது?. உத்தாலகர் காலம்வரை ஆண் என்பவன் ஒரு தனிமனிதன் அல்ல, ஆண் என்பவன் ஒரு பெரும் கூட்டம். அவன் தனியாக இருந்தாலும் முழு ஆணகூட்டமாகவே சிந்திக்கிறான். பெண்ணை அன்ணை என்றோ மனைவி என்றோ மகள் என்றோ நோக்கா பொது ஆண்நோக்கம் அது.  அது ஒரு தொல்வேதம். அங்கிருந்து தனிமனிதனாக தனி ஆணாக ஸ்வேதகேது சிந்திக்கிறான். முதன் முதலில் ஆண்கூட்டமாக நின்றுப்பார்க்காமல் பெண்ணை அன்னை என்று தன்னை மகன் என்றுப்பார்க்கிறான். இது ஒரு புதியப்பார்வை. அது அங்கு ஒரு தொல்வேதத்தை முறியடித்து புதுவேதத்தை வரவழைக்கிறது. பெண்னை அன்னை என்று மனைவி என்று மகள் என்றுப்பார்ப்பது தனிமனிதப்பார்வை. தனிமனிதப்பார்வையில் பெண்ணின் கண்ணீருக்கு அர்த்தம் தெரிகின்றது. அவளின் பாசம் காதல் அன்பு புரிகின்றது.

ஸ்வேதகேது கும்பிடத்தகுந்தவர். பெண்ணை ஆணுக்கு சரிநிகராக வைத்தவர்.

ராமராஜன் மாணிக்கவேல்

Friday, July 29, 2016

விதுரரின் பரிணாமம்






ஜெமோ சார்,

வெண்முரசின் நுட்பமான ஒரு ஒத்திசைவை அதை முழுமையாகப்பார்க்கும்போதுதான் உணரமுடியும். சிலசமயம் அது சட்டென்று மனதில் தோன்றுகிறது. விதுரர் சத்யவதியிடம் ஆரம்பத்தில் பேசும்போது ஒரு பெரும்போர் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதைச் சொல்கிறார். போர் நடந்தால்தான் பிரச்சினைகள் தீரும் என்கிறார்

அதன்பின் மைந்தர் பிறந்து தந்தை ஆனபோது போர் நடக்கக்கூடாது என நினைக்கிறார். போரைத்தவிர்க்க போராடிக்கொண்டே இருக்கிறார். அதற்காக வருந்துகிறார். எதையும் செய்யத்தயாராக இருக்கிறார்

ஆனால் இப்போது மீண்டும் போர் தேவை என்கிறார். போருக்கு அறைகூவுகிறார். போரினால் மட்டுமே எல்லாம் சரியாகும் என்கிறார். இந்த மாறுதல்தான் அவரது கதாபாத்திரம். அதை விரிவாகப்புரிந்துகொள்ளும்போது ஒரு பெரிய மன எழுச்சியை அடையமுடிகிறது

சாரங்கன்

விதுரரின் உள்ளம்






அன்புள்ள ஜெ, 

விதுரரின் உக்கிரமான மனநிலையை வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது. அவர் இதுபோல சமநிலை இல்லாதவராக வந்ததே இல்லை. ஆரம்பத்திலேயே நிதானமான சூழ்ச்சிக்காரராக, நல்லுணர்வுகொண்டவராக அவர் வருகிறார். இப்போது அவர் கொந்தளிக்கிறார். 

அந்தக்கொந்தளிப்புக்கு என்ன காரணம்? அவர்தான் சூதுக்கே போய் அழைத்துவந்தார். அந்த குற்றவுணர்ச்சிதான். பீமனோ மற்றவர்களோ கொண்ட கோபம் கூட அந்த கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன். 

விதுரரின் அந்த பதற்றத்தையும் கொந்தளிப்பையும் மிகச்சூட்சுமமாக அவரது உடல்மொழி வழியாகவே வெளிப்படுத்திவிட்டீர்கள். அவர் எதையும் கவனிக்காமலிருப்பது, அரைகுறையாக வாசிப்பது, கோபத்தில் கத்தி உடனே அடங்கி மீண்டும் கத்துவது எல்லாமே சூட்சுமமாக வந்துள்ளது.

ஜெயராமன்

மறு ஆக்கம் ஏன்?

 
 
ஜெ அவர்களுக்கு,
 
முதலில் உங்கள் மகாபாரதம் ஒட்டிய படைப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.

இது போல பலர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடையது இதில் சற்று மாறுபட்ட முயற்சி என்பதில் ஐயமில்லை.

உங்கள் மகாபாரத நாவல்களில் இருக்கும் விபரங்கள், மொழி வளன் மற்றவர்களில் சிறிதும் கிடையாது என்பதிலும் நான் உடன்படுகிறேன்.

என் பிரச்சினை என்னவென்றால், இதில் ஒரு படைப்பாளிக்கு சவால் விடும் கற்பனைத்திறன் பெரிதாக என்னவிருக்கிறது. மகாபாராதம் பற்றி  பலர் எழுதியிருப்பதைப் படித்து அதைச் சற்று விவரமாக உருமாற்றிக் கொடுத்தால் போதுமே. நான் கற்பனை திறன்  என்று கூறுவது சம்பவங்களை உருவாக்குவதும் அதை ஒன்றாகக் கோர்ப்பதும் பற்றியது.

எல்லாப் படைப்புக்கும் ஒரு inspiration வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதன் மூலம் தங்கள் வாழ்வில் நடுக்கும் சம்பவங்களைக் கொண்டோ அல்லது ஒரு non fiction கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவது ஒரு கதை சொல்லிக்கு சவால் விடுவது என்பது என் கருத்து. இன்னொரு  fiction அடைப்படையாகக் கொண்டு எழுதும் நாவல்கள் ஏனோ என்னைக் கவர்வதில்லை.

இது பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறவும்.

- சத்திஷ் 

அன்புள்ள சதீஷ்

‘ஏனோ’ என்று சொல்லும்போது அதனுடன் விவாதிக்கமுடியாது. ஏன் என்று சொன்னால்தான் விவாதிக்கமுடியும் இல்லையா?

ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். உலக அளவில் எழுதப்பட்டுள்ள பெரும்படைப்புகள் பெரும்பாலானவை  ஏற்கனவெ எழுந்தப்பட்ட படைப்புகளின் மறுஆக்கங்களோ,  வரலாற்று மறு ஆக்கங்களோ தான். சிலப்பதிகாரமோ கம்பராமாயணமோ கூட. ஷேக்ஸ்பியர் நாடகங்களோ தல்ஸ்தொயின் போரும் அமைதியும் போன்ற படைப்புகளோகூட
 
பொதுவாக செவ்வியல்படைப்பு என்பது ‘புதியதாக’ அமையாது. அது அதுவரைச் சொல்லப்பட்டு வந்த பலவற்றின் பெருந்தொகுப்பாகவும் மறு ஆக்கமாகவும்தான் அமையும். காவிய இலக்கணம் என்பது ‘நாடறிந்த பழங்கதையைச்’ சொல்வது என்றே முன்னர் வகுக்கப்பட்டுள்ளது
 
அத்தனை நூல்களையும் ஒட்டுமொத்தமாக ‘ஏனோ’ பிடிக்கவில்லை என ஒருவர் சொல்வாரென்றால் அது அவரது சொந்த தேர்வு, அவ்வளவுதான்.
 
பழையகதையை திருப்பிச் சொல்வது அல்ல இது. ஏனென்றால் கதை என்பது முக்கியம் அல்ல. பழங்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் எல்லாம் குறியீடுகளாக, உருவகங்களாக மாறியுள்ளன. அவற்றைக்கொண்டு சமகாலப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் மறுவரையறைசெய்யவே பேரிலக்கியங்கள் முயல்கின்றன
 
வெண்முரசு பேசுவது சமகால வாழ்க்கையை என அறிந்தவர்களே அதன் வாசகர்கள்
 
ஜெ

விதுரரின் கண்ணீர்




வெண்முரசில் நெஞ்சு நெகிழ்ந்து, கண்கள் கலுழும் நிகழ்வுகள் நிறையவே வந்துள்ளன. பெரும்பாலும் கதாபாத்திரங்களின் கண்ணீர் நம்மையும் அசைத்துவிடும். இன்று விதுரரின் கண்ணீர் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும். திருதாவின் இந்த மனமாற்றம் விதுரரைப் போலவே பல வெண்முரசின் வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருந்திருக்காது. பலர் இதை ஒரு வகை சடுதிமாற்றம், தலைகீழ்மாற்றம் என்று கூட எண்ணலாம். எனக்கும் வாசித்த உடன் அப்படித் தான் தோன்றியது. இரண்டாம் முறை வாசித்தேன், அப்போதும் திருதாவின் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. இது முழுக்க முழுக்க சுயநலத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு. தான் நிம்மதியாகத் தூங்குவதற்கும், தன் மரணத்திற்குப் பிறகு தன் இளையோனை குறைந்த பட்ச குற்றவுணர்வுடன் எதிர்கொள்வதற்கும், தன் மனைவியின் முன் மீண்டும் குழந்தையாக மாறி அரவணைப்பை ஏற்பதற்கும், அனைத்திற்கும் மேலாக தெய்வங்களும் கைவிட்ட தன் மைந்தனைத் தானும் கைவிடாமலிருப்பதற்கும் அவர் கண்டடைந்த வழி இது. தருமர் இதை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வார் என்பதிலும் சந்தேகமே இல்லை. 


ஒரு வாசகனாக, திருதா என்னும் மத வேழத்தின் அணைப்பை, அதன் பெருந்தன்மையை ரசித்தவனாக நான் ஏற்றுக் கொள்கிறேனா? இது தவறு என்று விதுரர் போலே நானும் எண்ணுகிறேன். திருதா கீழ்மையின் சேற்றுக்குழியில் விழுந்து விட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் எங்கோ என் அக ஆழத்தில் இதைத் தவிர வேறு சிறந்த வழி அவர் முன் இல்லை என்பதையும் ஏற்றிருக்கிறேன். ஆம்... விதுரரின் கண்ணீர் என் கண்களில் வழியவில்லை.

நனவுள்ளத்திற்கும், ஆழுள்ளத்திற்கும் இடையில் தான் எத்தனை வேறுபாடுகள். எத்தனை நடிப்புகள்!! அன்பின் ஜெ, எவ்வகையில் பார்த்தாலும் இது உங்கள் எழுத்தின் வெற்றி. இலக்கியம் என்பது நிகர் வாழ்வு என்ற கூற்றை முழுமையாக அனுபவித்து ஏற்கிறேன். மீண்டும் மீண்டும் உங்களை நீங்களே வென்று சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்த ஊக்கம் மேலும் மேலும் தொடர இறையருளும், குருவருளும் துணை செய்ய பிரார்த்திக்கிறேன்.


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

உணவு




தம்பி மக்களின் மனைவி அடையக்கூடாத துன்பத்தை தனது அரசாட்சியில் தனது அரண்மனையில் அடைந்துவிட்டாள், தம்பி மக்கள் தொழும்பர்கள் ஆகிவிட்டார்கள், மனைவி கணவனை, மக்களை குலமூத்தாரை, குலஅமைச்சரை மகிடங்களாகி எண்ணிவிட்டாள். பாசம் வைத்த மகன் அடிப்பட்டு நோய்க்கொண்டு கிடக்கிறான். இது எதுவுமே நடக்காததுபோல் திருதராஸ்டிரன் சாப்பிடுகிறான். 

பாண்டவர்கள் தூங்குவது ஒரு மனநிலை என்றால் திருதராஸ்டிரன் சாப்பிடுவது ஒரு மனநிலை. மனிதர்கள் ஒரு பழக்கமான யோகநிலையை தன்னோடு இயல்பாக வைத்திருக்கிறார்கள் அதன் வழியாக மண்ணின் பெரும் கலகசூழ்நிலைகளைத்தாண்டி தனது ஆன்மாவை அந்த யோகத்தில் இணைத்துக்கொள்கிறார்கள்.  திருதராஸ்டிரனின் இந்த உணவு உண்ணும்யோகம் அவன் வாழ்வின் சிடுக்குகளில் இருந்து தப்பிக்க கண்டுபிடித்த யோகம் என்று நினைக்கிறேன். இசையையே ஒரு யோகமாக பழகும் திருதராஸ்டிரன் அதனைவிடவும் உணவு உண்ணும் யோகத்தில் உச்சம் தொட்டவன். 

//அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுகளுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.//

 
இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன என்றபோது இந்த இணைப்பு நினைவில் எழுந்தது. உண்பதற்கு உயிர்கள் துடிக்கும் துடிப்புதான் என்னே!
https://www.youtube.com/watch?v=1tWLDhJ6mjQ
ராமராஜன் மாணிக்கவேல். 

Thursday, July 28, 2016

கரையேறிய கடலலை



கரையேறிய கடலலை மீண்டும் கடலுக்கே சென்று கடலாகிவிடும் ஆனால் கரையேறிய நதியலை மீண்டும் நதியிடம் திரும்பி நதியாகுவதில்லை. தந்தையின்பாசம் கடலலைப்போன்றது என்று காட்டுகிறான் திருதராஸ்டிரன், பிள்ளையின்பாசம் நதியலைப்போன்றது என்று காட்டுகிறான் துரியோதனன்.

தந்தையின்மீது பாசமும் மதிப்பும் கொண்ட துரியோதன் பிறந்தநாள்முதல் கரையைமோதி மோதி உடைக்க முயற்சிச்செய்துக்கொண்டே இருந்தான், தந்தைமீது உள்ள மதிப்பு கடைசியில் தாய்மீது உள்ள மதிப்பு என்று கரையேறாமல் இருந்தான். தந்தையின் ஆனையை காலில் போட்டு மிதித்து கரையை கடந்துவிட்டான் இனி அவனே நினைத்தாலும் அவனால் திரும்பமுடியுமா? கரையை மோதி மோதி அரிப்பதும், கரையை உடைக்க முயற்றி செய்வதும்கூட குற்ற உணர்வுகளை எற்படுத்துவதில்லை மாறாக கரை ஏறுதல் என்பது 

தன்னையே அறுத்து அழித்துக்கொள்ளுதல்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
 
குன்றுவ செய்தல் இலர்-என்கிறார் திருவள்ளுவர். பெற்றோர்கள் மீது வைக்கும் நன்மதிப்பு, குடிபெருமை ஒழுக்கம் பண்பாடு என்பது எல்லாம் மானிடர்களுக்கு கரையாக வந்து வாய்த்து அவர்கள் வளர்ந்து பாய்ந்தோடி கடலாக அமைய வகுக்கப்பட்ட வெகுமதிகள். அவற்றை காமகுரோதமோகங்களால் அழிக்கும் மனிதன் தன்முடிவை மீளப்பழியோடு தேடிக்கொள்கிறான். துரியோதன் திருதராஸ்டிரன்மீதும் தாய்மீதும் வைத்தப்பாசம் நன்மதிப்பு இன்று கரையேறிய நதியலை ஆகிவிட்டது.

 
அஸ்தினபுரியின் அரசனாக, பாண்டவர்களின் பெரியப்பாக,காந்தாரியின் கணவனாக இருக்கும் திருதராஸ்டிரன் இறுதியாக துரியோதனனின் தந்தையாக இருக்கும் இடத்தில் கரையேறிய கடலலையென திரும்பி கடலுக்கே வந்து ஆச்சர்யப்படுத்துகின்றார்.  கடலலை கரையை உடைப்பதுபொல, கரையை தாண்டிசென்றுவிடவதுபோல எத்தனை எத்தனை ஆர்பரிப்பு, எல்லாம் ஒரு கணத்தில் சுழன்று திகைத்து திரும்பிவிடுவதற்குதானா? //“விதுராஎன்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரேஎன்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்?” விதுரர் ஒருகணம் கடந்துபிழைத்துக்கொண்டார் என்றார்கள்என்றார்.//
அந்த குரல் மாறுப்பட்டு இருப்பதுதான் இங்கு அழகு ஜெ.

ராமராஜன் மாணிக்கவேல்