Wednesday, August 31, 2016

அன்னை


ஆசிரியக்கொடை கோரியபோது என் கைகளைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்த கைகளில், கலங்கி வழிந்த விழிகளில் நான் கண்டது பேதைமையையே ஆற்றலாகக் கொண்ட அன்னை ஒருத்தியைத்தான்"

தாய்மை என்னும் தளை...மனிதனாகி இப்புவியில் பிறந்த யாருக்கும் அதுவே நஞ்சு. 

இங்கு ஒருவருக்கொருவர் அதை உணர்த்திக்கொள்கிறார்கள். வேதமோதும் முனிவர் அதை கடக்க முடிவதில்லை. கொற்றவை வடிவானவளும் தன் வயிற்றுக்குருதியின் நிலை நினைக்கும்போதுதான் விதிர்க்கிறாள். வேதாந்தம் காணும் மனிதனாகி வந்த பரம்பொருளும் கூட தன் குலத்தின் ஊழை நினைக்கும்போது அன்னையாக கலங்குகிறான். (நாளை இன்னொரு பேரன்னையிடமும் அதே சொல்லைப் பெறுவான்). 

மண்ணில் பிறந்து வந்த மனிதரை கட்டுவது அறம். அது அன்னை என்னும் வடிவம் தன் மைந்தரை காக்கும் பொருட்டு தான் உருவாக்கிக் கொண்டது. 
மதுசூதன் சம்பத்

ஆசிரியன்


 
அன்புள்ள ஜெ

நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் உச்ச கட்டமாக இருந்தது.

நேற்று  -  கண்ணனை ப்ருகதர் குத்தி கிழித்த போது கண்ணண் அதை எதிர் கொண்ட விதம் என்னை படிப்பித்தது. நான் எப்படி என் எதிராளிகளை சமாளித்து என் ஆளுமையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது. கண்ணனின் மூலம் அதைச் சொன்ன உங்களுக்கு ஒரு நன்றி. 

 இன்று  - த்ரெளபதி   பெண் மட்டும் அல்ல. பாஞ்சாலி சபதத்தின் போது அவள் பேரரசி. அந்த சபதத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அவளே காரணமாகின்றாள் என்று அவளை உணர வைத்த தருணம்.  மறக்கவே மாட்டேன்.

இதுகாறும் இப்படி யோசித்ததில்லை. அரசியல் ரீதியாக கெளரவர்கள் சரி என்றால் கண்ணன் எதனால் பாண்டவர்களுக்கு உதவுகிறார் என்னும் காரணத்தை அறிய காத்திருப்பேன். 

இன்றைய பதிவால் பெண்கள் யோசித்து செயலாற்ற வேண்டியதை சுட்டியிருக்கிறீர்கள்.

நான் வெண்முரசு வாசிக்கும் போதெல்லாம் அது என் வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்ற நோக்கிலேயே வாசித்துச் செல்கிறேன்.

இலக்கிய நோக்கில் வெண்முரசை நான் பார்க்கவில்லை.

கண்ணன் என் குரு. வழிகாட்டி. 

கண்ணனை என் கண்ணுக்கும் மனதிற்கும் அருகில் உணர வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

அன்புடன்
மாலா

சாமானியன்




ஜெ

சகதேவனின் கதாபாத்திரம் எதையுமே செய்யாமல் அவ்வப்போது பேசுவதன் மூலமே தெளிந்து வந்துகொண்டிருக்கிறது. மாறாத விவேகம் கொண்டவனாக அவன் தெரிகிறான். அவனுக்கு எல்லாமே தெரியும். தெரிந்தும் ஒரு சின்னப்பையனாக இருந்துகொண்டே இருக்கிறான். ந்குலனும் அவனும் இரட்டையர். ஆனால் நகுலனிடம் ஒரு விளையாட்டுத்தனம் இருந்துகொண்டே இருக்கிறது. சகதேவனிடம் அது இல்லை. அவன் முனிவர் போல இருக்கிறான்

இன்றைக்கு அவன் சொன்ன வரிகள் அபாரமானவை. மானுடன் உணர்ச்சிநிலைகளிலெப்படியெல்லாம் வேசம் போடுகிறான் என்னென வகையில் நடிக்கிறான் என்று  சாட்டையடி போல சொல்லிக்கொண்டே செல்கிறான். கடைசியில் தன்னைப்பற்றிச் சொல்லிமுடிக்கிறான்

மாவீரனாகவோ மாபெரும் தொன்மமாகவோ ஆகாது எளிய தருணங்களினூடாகவே வாழ்ந்து முடிபவன் மகிழ்வுடன் இருக்கிறான்

மாமனிதர்களாகிய மூன்று அண்ணன்களின் தம்பி அதைச்சொல்லும்போது மிகப்பெரிய அர்த்தம் வுந்துவிடுகிறது

சண்முகம்
 

சகதேவன்



 ஜெ

சகதேவனை எண்ணினால் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் எந்த மயக்கங்களும் இல்லாமல் மனிதர்களைப்பார்க்கிறான். கசப்பை கசப்பென மாயமே இல்லாமல் சொல்கிறான். அந்த வெறுமைமேல் ஒரு யோகியைப்போல அமர்ந்திருக்கிறான். பாண்டவர்களில் ஆழமானவன் அவந்தானா என நினைக்கத் தோன்றுகிறது

ஆண்பெண் உறவின் இயல்பே அதுதான், மூத்தவரே. எத்தகைய மேன்மைகொண்டது என்றாலும் அது கனவென்றே அழிந்து மறையும். இவ்வுலகில் எளிதில் மறையாதது குருதியுறவு மட்டுமே. அதுவும் குருதியால் அழிக்கப்படக்கூடும். மானுடர் கொள்ளும் எவ்வுறவிலும் இறுதிச்சொல் என ஒன்று சொல்லப்படாது எஞ்சும். நஞ்சென்று எங்கோ கரந்திருக்கும்

என் அறுபது வயதுக்குள் நன் கண்டதை வைத்தும் இதை உண்மை உண்மை என்ரே சொல்வேன். எவ்வளவு கச்சிதமாகச் சொல்கிறான். உரவுகளில் குருதியுறவு அறாது, ஆனால் அதையும் குருதி அறுக்கும் என்னும்போது பகீர் என்றது

சபரிநாதன்

சிருஷ்டி கீதம்



சொல்வளர் காடு துவங்கியதில் இருந்தே எப்போது வரும் என்று காத்திருந்த ஒன்று இன்று (சொல்வளர்காடு 40) வந்துவிட்டது. அதுவும் எப்பேற்பட்ட அத்தியாயத்திற்குப் பின்!!! சொல்வளர்காடு 39 மிக மிக முக்கியமான ஒரு அத்தியாயம். ஒரு வகையில் இந்நாவலின் தரிசனம் என்று கூடச் சொல்லலாம். ‘லீலை என்பதன் பொருளின்மை’ என்று சுருக்கமாக வரையறுக்கலாம். எதற்கும் பொருளில்லை. அதை முழுமையாக வாழ்ந்து முடித்தவர்களே அதன் முழுப் பொருளையும் உணர முடிகிறது. உணர்ந்து ஏற்க முடிந்தவன் ஞானி ஆகிறான். தாண்டிச் சென்றவன் கடவுளாகிறான். அப்படி ஒரு பிரபஞ்ச லீலையை உணர்ந்து அதன் பொருளின்மையின் முன் திகைத்த ஒரு ஆதி ரிஷி கொண்ட பிரமிப்பே ஆகப் பழைய வேதமான ரிக் வேதத்தின் இந்த மகத்தான சிருஷ்டி கீதம்

அதையே மிக அருமையாக தற்போதைய சாந்தீபனி முனிவர் தன் சீடர்களுக்கு இன்று கூறுகிறார். தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்து தன்னை முழுதுணர்ந்த அவர் தன் சீடர்களிடம் ‘தத்’ எனும் ‘அதைப்’ பற்றி இவ்வாறு கூறுகிறார்.

ஒன்றேயான அது என அதை அறிந்தனர். அதுவன்றி ஏதுமிருக்கவில்லை என உணர்ந்தனர். ஒருமையான அது மேலே உள்ளதா இல்லை கீழே உள்ளதா, அங்கு படைப்பாற்றல் உண்டா, அது முன்னால் உள்ளதா இல்லை பின்னால் உள்ளதா, அது எப்படி பிறந்தது, அதை யார் உருவாக்கினர், அல்லது உருவாக்கவில்லை என பல்லாயிரம் வினாக்களாக அதை அணுகினர். வான் வடிவமான அதுவே அறியும், அல்லது அதுவுமறியாது என்று வகுத்தனர்”. ஒரு கணம் விம்மி விட்டேன்.

கீதைவயல்



ஜெமோ

சொல்வளர்காட்டின் சிறப்பு என்னவென்றால் இந்நாவல் நிகழும் காலகட்டத்தில் உபநிடதங்கள் எழுதப்படவில்லை. கீதையும் எழுதப்படவில்லை. அவை உருவாகிவந்த காலகட்டத்தின் ஒரு சித்திரத்தை இந்நாவல் உருவாக்கிக்காட்டுகிறது. அந்நூல்களில் பின்னர் பேசப்பட்டவை இதில் கருத்துக்களாக விவாதிக்கப்படுகின்றன. இப்படி பின்னால் சென்று விரிவாக்கும் கற்பனை மிக முக்கியமான ஒன்று.

இன்றைய அத்தியாயத்தில்  கீதையிலிருந்து இரண்டு வரி வருகிறது. அவை இரண்டுமே வெவ்வேறு உவமைகள். ஒன்று வானத்தில் வேர்விட்டு மண்ணில் கிளைவிட்ட மரம். இரண்டு பெருவெள்ளம் வரும்போது கிணறுகளால் என்ன பயன். இந்த அத்தியாயம் நுட்பமாக இரண்டையும் இணைத்துவிடுகிறது

பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன்? அவை விண்ணில் ஊற்று கொண்டவை ஆயினும்?

முதல்வரி கீதை. இரண்டாவது வரி இன்னொரு உவமையில் இருந்து வந்தது. இது அளிக்கும் அர்த்தங்கள் அபாரமானவையாக உள்ளன.

ஊற்றென்பதும் உள்ளுறைந்த பெருவெள்ளமே. அதை அறிந்தவன் வெள்ளத்தைக் கண்டு அஞ்சுவதில்லை

என்று அந்த வரி விரிந்தபடியே செல்கிறது.  ஒரு கவிதை போல வாசித்துமுடிக்கவேண்டிய இடம் இது.பலவகையிலும் பேசிப்பேசி வளர்க்கவெண்டியது

ஜெயராமன்


Tuesday, August 30, 2016

கீதை மறுப்பு



ஜெ

கீதை எழுவதற்கு முன்னரே அதன்மீதான மிகக்கூர்மையான விமர்சனம் வெளிவந்துவிட்டதக் கண்டு வியந்தேன்

 எந்த சமன்வயத்திலும் அதை நிகழ்த்தும் கலத்தின் இயல்பு கலந்துள்ளது. முற்றிலும் அவ்வாறு கலக்காத ஒரு சமன்வயம் இங்கு நிகழமுடியுமா என்பதே ஐயம்தான்.

குரோதத்துடன் வெளிவிடப்பட்ட கருத்து என்பதில் சந்தேகமில்ல்லை. அதற்குக்காரணம் சாதியாக்ககூட இருக்கலாம். ஆனால் அது  ஒருமுக்கியமான தரப்பு. சமன்வயம் என்பது தன்னிச்சையாக நிகழ்வதே இல்லை. அதை நிகழ்த்தும் சூழலும் அதை நிகழ்த்துப்வனும் அதில்முக்கியமான பங்கை ஆற்றுகிரார்கள்

சாரங்கன்

எதிரிநிலை




அன்புள்ள ஜெமோ

நான்  முப்பத்திரண்டு ஆண்டகளுக்கு முன்பு திருப்பராய்த்துறைக்குச் சென்றிருந்தேன். சுவாமி சித்பவானந்தரால் உருவாக்கப்பட்டது அந்த மடம். அதன் தலைவராக அவர் இருந்து புகழ்பெற்றது. அவர் அப்போது ஒரு பெரிய ஆளுமையாக இருந்தார்
\

நான் அங்கே சாப்பிட அமர்ந்தபோது அங்கே சமையல்வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சித்பவானந்தரை கடுமையாக விமர்சனம் செய்தார். அவன் இவன் என்றெல்லாம் சொன்னார். குறிப்பாக அவருடைய ஜாதியைச் சொல்லி பேசினார் 

நான் அதைப்பற்றிக் கேட்டபோது அவர் அப்படித்தான் என்று சொன்னார்கள். சித்பவானந்தர் அவரை கண்டுகொள்வதில்லை என்றார்கள். அவர் அங்கே இருந்தார். அவரை ஏன் நீக்கவில்லை என்று எனக்குப்புரியவில்லை

அவரை நீங்களும் கண்டிருப்பீர்கள். நீங்கள் அங்கெல்லாம் சென்றதை எழுதியிருக்கிரீர்கள். இந்த கதாபாத்திரத்தை இன்றைக்கு பார்த்தேன். வெண்முரசில் வரும் பத்ரரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதைவிட அவர்களை இவர்க்ள் ஏன் ஒப்புக்கொண்டு கூடவே வைத்திருக்கிரார்கள் என்பதும் மர்மமே

ஆர். மகாதேவன்

ஆமருவி





ஜெ,

// ஷத்ரியகுலங்களுக்கு இவன் எளிய ஆமருவி மட்டுமே என்றான்//

ஆமருவி என்றால் ஆபுரப்பவன் என்று பொருளா?

சீனிவாசன்

அன்புள்ள சீனிவாசன் சார்

ஆமருவி தேவநாதன் என ஒருநண்பர் சிங்கப்பூரில் இருக்கிறார் . அவர் பெயரைப்பற்றிக் கேட்டேன். அது தேரழுந்தூரில் உள்ள கிருஷ்ணனின் தமிழ்ப்பெயர். பாசுரங்களிலும் உள்ளது. ஆ மருவி என்றால் கோ பாலன். கன்று மேய்ப்பவன். நல்ல தமிழ்ச்சொல். ஆகவே வெண்முரசில் பயன்படுத்திக்கொண்டேன்

ஜெ

கீதாசிரியன்:



வெண்முரசு நாவல் வரிசைகளில் ஒவ்வொரு நாவலிலும் ஏதேனுமொரு அத்தியாயம் நாவலின் தரிசனத்தைத் தெளிவாக விளக்கும் வகையில் அமைந்திருக்கும். சொல்வளர்காடின் 39 வது அத்தியாயம் அப்படிப்பட்ட ஒன்று எனலாம். ஒரு வார்த்தையில் சொல்வதானால் பொருளின்மை. இந்த அத்தியாயத்தில் இந்த லீலையின் பொருளின்மையை வாழ்ந்து உணர்ந்தவர்களின் கொந்தளிப்புகளை, அனைத்தையும் சொற்களாக்கி விரித்தெடுத்து புரிந்து கொண்டவர்கள் தாம் புரிந்து கொண்டவற்றை அறிதலாக மாறுகையில் வரும் மகத்தான தடுமாற்றத்தை காண்கிறோம். இதுவரையிலும் வந்த நாவலை பொருளின்மையை உணர்ந்தவர்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள், எவற்றை அறிகிறார்கள், அடைகிறார்கள் என வாசிப்பது மேலும் பல திறப்புகளை நல்கலாம். இந்நாவல் வெண்முரசில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ரத்தமும், சதையும் கொண்ட மனிதனாகக் காட்டுகிறது. கிருஷ்ணனைத் தான் சொல்கிறேன்.

கிருஷ்ணன் என்ற மானுடன் ஞானியாக பரிணமித்ததன் சித்திரம் இது. வெண்முரசில் இது வரையிலும் வந்த கிருஷ்ணனுக்கும் இவனுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள். நாம் கண்டு வந்த கிருஷ்ணன் தடுமாற்றமில்லாதவன், விருப்பாலும் வெறுப்பாலும் அலைகழிக்கப்படாதவன், துயர் அண்டாதவன், மகிழ்ச்சியும் தீண்டாதவன், செய்யும் செயல்களில் தன்னைக் கலக்காதவன், செய்பவற்றில் முழுமையாக இருப்பவன், செய்த கணமே அதிலிருந்து விலகி விடுபவன், இலக்கைத் தீர்மானித்தாலும் அதை நோக்கிய பயணம் மட்டுமே செய்பவன், இலக்கை அடைந்தாலும், இழந்தாலும் அதைப் பற்றிய எவ்வெண்ணத்தையும் வைத்துக் கொள்ளாதவன். எனவே தான் அவன் ஞானி. அனைவராலும் விரும்பப்படுகிறான். அவனது கூரிய ஆழியும் ‘நற்காட்சி’யாகவே(சு-தர்சனம்) இருக்கிறது. அவன் எப்போதுமே இப்படித்தானா? அவன் மானுடன் இல்லையா?

இக்கேள்விகளுக்கு ஒரு விரிவான பதிலைத் தருகிறது சொல்வளர்காடு. இங்கே நாம் பார்க்கும் கிருஷ்ணன் வினாக்களால் ஆனவன். அறிதலை வேண்டுபவன். அவன் சாந்தீபனி முனிவரைச் சந்திக்கும் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. உண்மையில் அதை ஜெ விவரித்த விதம் ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரை முதன்முதலாகச் சந்தித்து வரவேற்ற நிகழ்வை ஒத்தது. தனது ஞானப் பயணத்தில் இந்த லீலை என்னும் பொருளின்மையை நேரில் சந்திக்கும் ஒரு இடம் இளைய யாதவனுக்கு வருகிறது. எந்த இளமைந்தர்களின் மரணத்துக்காக வெஞ்சினம் கொண்டானோ, எந்த அறம் பிழைத்தற்காக அதை மீறியவர்களைக் கொன்றானோ, அந்த ஒரு இளமைந்தன் ஒருவனே இவனைக் கண்டு அச்சம் கொள்கிறான். பெரும் பூதாகரமாக அவன் முன் எழுந்து வருகிறது அவ்வினா? அவன் ஆற்றியதன் பொருள் என்ன? அவன் சொன்ன அறம் யாருக்கானது?


தெறித்து விழுந்து ஆசிரியர் முன் வருகிறான். (சுவாமி விவேகானந்தரும் இப்படி ஒரு முறை ராமகிருஷ்ணரிடம் ஊடி, மறுத்து பிரிந்து சென்று, பின்னர் அவரன்றி தனக்கு வேறு யாரும் வழிகாட்டி இல்லை என்று திரும்பிய ஒரு சம்பவம் உண்டு!) அவர் மீண்டும் லீலையை, அதன் பொருளின்மையைக் கூறுகிறார். அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் அவரை மறுக்கவும் இயலவில்லை. அவர் கூறும் 'பசுங்குருதி மணம் கொண்ட கருக்குழவி' என்ற படிமம் அபாரமானது. அழிவும், ஆக்கமும் ஒன்றேயான ஒன்று. வலி விளைவால் சமன்படுத்தப்பட்ட ஒன்று. முக்கியமாக அவன் ஆற்றியவற்றுக்கு எப்பொருளும் இல்லை என்பதே அவனைக் கொந்தளிப்புடன் இருக்க வைக்கிறது. தன் தவறைக் குறை கூறுபவர்களிடம் அவன் கூச்சலிட்டு வஞ்சினம் உரைக்கிறான். ஆனால் அவன் உண்மையில் பெரு வஞ்சம் கொண்டது அவன் ஆசிரியரிடம் தான். அந்த கொந்தளிப்பே அவனை குருநிலையில் இருந்து வெளியேற்றுகிறது. அந்த கொந்தளிப்பே அவனை அமர விடாமல் செயல் ஆற்றச் சொல்கிறது. மெல்ல மெல்ல செயல் ஒன்றிலேயே அவன் தன் முழுமையை உணரத் துவங்குகிறான். பயன் கருதிச் செய்யும் செயல்கள் என்றாலும் பயனை விடச் செய்வதே முக்கியம் என சமாதானம் அடைகிறான். ஆயினும் அவனுள் கரந்த அந்த நஞ்சு தான் வெளிப்படத் தருணம் நோக்கிக் கொண்டிருந்தது.

அதைத் தான் மிகச் சரியான ஒரு தருணத்தில் அவர் முன் பெரு வினாவாக முன்வைக்கிறான். அவர் கொண்ட அனைத்து கல்வியும் அவர் அறிதலாக ஆகும் நேரம், அந்த இருண்மையை அவரால் தாள இயலவில்லை. அவருள்ளும் ஒரு நாகம் எழுகிறது. இந்த இருளைத் தாண்டி, அந்த இருள் யானையின் மத்தகம் மீது ஏறுபவனே உண்மையான யோகி என்ற அவரின் சொற்கள் அவரை குறுக்கத் துவங்குகின்றன. தான் அறிந்த அனைத்தும் பொருளற்றுப் போவதை, பொருளின்மை ஒன்றே எஞ்சுவதை, அதை ஏற்கத் தான் இன்னும் தயாராகவில்லை என்ற உண்மை தரும் துயரை அவர் அறிகிறார். தான் இறந்து பிறக்க வேண்டிய தருணம் அது என உணர்கிறார். அவருள் எழுந்த நாகம் தன் மாணவன் மீது நஞ்சுமிழ்கிறது. மீண்டும் பிறந்து, கடந்து செல்கிறார்.

ஆயினும் தன் செயலின் கீழ்மையுணர்ந்த இளைய யாதவன் அங்கிருந்து தப்பி ஓடுவது போல துவாரகை செல்கிறான். அமரும் சமயங்களிலெல்லாம் தன் கீழ்மை தன்னைச் சுட மேலும் மேலும் செயல்கள் செய்து கொண்டே இருக்கிறான். தான் ஆற்றுகின்றவற்றின் பொருளின்மைகள் அவனைத் துரத்துகின்றன. ஆனால் தன்னுள் இருந்தே ஒரு விடையைக் கண்டறிந்து அதை வெல்கிறான். அதனால் தான் அவன் கீதாசிரியன்!!


சாரதா

Monday, August 29, 2016

நாளுண்மை



ஜெ

இத்தனை தத்துவநிலைபாடுகள் தொடர்ச்சியாக வரும்போதே நினைத்தேன். ஒரு புனைகதை, ஒரு தேடல் என்றவகையில் இது தத்துவத்தின் குறைபாடுகளைப்பற்றித்தான் திரும்பும் என்று. நேற்று சூதன் நக்கலாக அடித்து நொறுக்கினான். இன்று தருமனே அதை வேறு வகையிலே உனர்கிரான். 

தத்துவம் பிசிறின்றி கோக்கப்படும்போதே அதைச் சார்ந்தவர்களின் நாளுள்ளம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறது. எனவே நாளுண்மையைச் சொல்லும் ஒருவன் அதன் உயிர்நிலையைச் சுண்டி அதிரச் செய்துவிடமுடியும். நாளுண்மையில் வலுவாக நின்றிருக்கும் தத்துவம் எப்போதும் தன் இயல்பான சிறுமையை உணர்ந்தபடியே இருக்கிறது. பறக்கும் கவிச்சொல் ஒன்று அதை எழுச்சிகொள்ளச் செய்கிறது. கவ்விய அனைத்தையும் கைவிட்டு அது தானும் சிறகு விரிக்கிறது. உலகியலே தத்துவத்தின் எதிரி. தத்துவம் உலகியலின் பிடிபடாக் கனவு. 

இந்த வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். நாளுண்மை அரிய சொல்லாட்சி. நாளுண்மைக்கும் தத்துவத்துக்குமான உறவு, நாளுண்மையைச் சந்தித்ததுமே தத்துவம் பறக்க ஆரம்பிக்கிறது என்னும் வரி என்னை அற்புதமான ஒரு மலர்ச்சி கொள்ள வைத்தது

சிவராம்

சமன்வயம்


சாந்திபனி குருகுலத்தில் அவர்களின் பணி என்ன என்று அதன் முனிவர் சொல்லும் இடம் சுருக்கமாகவும் கூர்மையாகவும் உள்ளது.

நால்வேதம் அமைத்த வேதவியாசர் செய்தது சப்த சமன்வயம். இனி ஒரு தத்துவ சமன்வயம் நிகழ்ந்தாகவேண்டும். இந்த ஆறு ஓடிஓடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. அணைகட்டி நீரை மேலெடுத்து கழனி நிறைத்தாகவேண்டும்

அவர் சொல்லும் விடுகதையும் அழகானது. காளையின் ஒரு கொம்பிலிருந்து மறுகொம்புக்குப் பறக்கும் குருவி. உவமைகள் விடுகதைகள் வழியாகத் தத்துவம் வரும்போது அதன் வீச்சு பலமடங்கு கூடிவிடுகிறது

சூதன் நக்கலாகச் சொன்னதைத்தான் சாந்திபனி ரிஷி வேறுவகையில் கவித்துவமாகச் சொல்கிறார் என்பதுதான் பெரியவேடிக்கை என நினைக்கிறேன்

ஜெயராமன்

தத்துவம்



ஜெ

இன்றையவெண்முரசில் சூதனின் நக்கல் அற்புதம். உண்மையில் இதை நானே நினைத்துக்கொண்டிருந்தேன். அனைவரும் பேசுவது ஒன்றையேதான் - ஆத்மாவே பிரம்மம், இதெல்லாமே பிரம்மாதான். ஆனால் அவர்களுக்குள் அப்படி என்ன வேறுபாடு? எவ்வளவு சண்டை? 

தத்துவமே இப்படி கடைசியில் மிகச்சிறிய ஒரு இடத்தில் நடக்கும் பூசலாக ஆகிவிடுகிறது. சொல்லப்போனால் தத்துவமென்பதே ஒருவகையான
figurative speech  மட்டும்தான் என்று ஆகிவிடுகிறது. சொல்வதிலுள்ள சின்ன வேறுபாடுதான்.

அதை சூதன் நக்கலடிக்கிறான். அத்தனைபேருக்கும் கள்தான். ஆனால் ஆயிரம் சண்டை. அபாரமான இடம்

சரவணன்