Sunday, August 28, 2016

யோகியின் மனம்




வெண்முரசின் அற்புதமே அது வாழ்வின் உளவியல் சிக்கல்களின் நேர்திசையையும் எதிர்திசையையும் அதன் மையத்தில் அமர்ந்து காணச்செய்வதுதான்.

அகமோ புறமோ வாழ்வின் கணங்களின் ஒருபுறத்தைமட்டும்தான்ந நாம் பார்க்கமுடியும். அதன் மறுமுனை என்னவென்று காணவோ அறியவோ முடியாது. முன்பக்கம் அமுதாக இருந்தால் பின்பக்கம் விடமாகத்தான் இருக்கவேண்டும் என்றோ அல்லது அமுதாகத்தான் இருக்கும் என்றோ யாரும் சொல்லிவிடமுடியாது.  அமுதம் விடமாகவோ அல்லது விடம் அமுதமாகவோ மாறுவதையும் வாழ்க்கை கணங்கள் நமக்கு தந்துக்கொண்டே இருக்கிறது. , அமுதம் அமுதத்தையும் விடம் விடத்தையும் உருவாக்கும் கணங்களும் உண்டு, எது உருவாகினாலும் வாழ்வின் கணங்களின் மையத்தில் நின்று நோக்கும் சமநிலை மனம் அமைந்தவன் யோகி.

யோகியின் மனம் தரசுமுள்போல் சமநிலைக்கு ஏங்கிக்கொண்டே இருக்கிறது. துளிக்காற்றின் எடைக்கூட அதை சமன்குலைக்க செய்துவிடுகிறது. பிரபஞ்சம் அதை லீலை என்கிறது. லீலையும் மாயையும் ஒன்றென வந்து நிற்கிறது இக்கணம். எது லீலை?, எது மாயை? மாயையை மையத்தில் நின்று நோக்கினால் லீலை. லீலையை துருவத்தில் நின்றுநோக்கினால் மாயை. இந்த உண்மையை கண்டுக்கொள்ள கண்ணன் கம்சனை கொல்லவேண்டி இருந்தது. சாந்தீபனி முனிவரின் குமரனை மீட்டுக்கொண்டுவர வேண்டி இருந்தது.

கம்சன் மூலம் கொள்ளப்பட்ட குழந்தைகள் அனைவரும் லீலையின் ஒரு அங்கும் என்று சொல்லும் குருநாதர் மாயையின் மையத்தில் நின்று அதைப்பார்க்கிறார் அதனால் அது லீலை என்று தெரிகிறது.

காணமல் போன மகன் இறந்தான் என்று ஏங்கிக்தவிக்கும் குருநாதர் அவன் உயிருடன் இருக்கிறான் என்றதும் பார்க்கத்துடிக்கும்போது லீலையின் துருவத்தில் நின்று லீலையை மாயை என்று சினக்கிறார்.
.  
மாயைக்கும் லீலைக்கும் உள்ள இந்த ஊசலாட்டத்தை கண்ணன் குருநாதருக்கு சுட்டும் இடத்தில் அவன் சொற்கள் அம்பாகிவிடுகின்றன. ஒரு சொல் வெல்லும் ஒருசொல் கொல்லும் என்பார்கள். லீலை மாயை என்ன வென்று வென்றுகாட்டும் கண்ணனி்ன் சொல் குருநாதரை கொல்லும் சொல்லாகவும் உள்ளது.

லீலை மாயையின் வழியாகவே முதலில் வந்து உள்ளத்தில் நிரம்புகின்றது. இது மாயை என்று நிரம்பிய அனைத்தையம் கொட்டி உள்ளத்தை வெற்றுப்பாத்திரமாக வைப்பவன் இடம் லீலை நிரம்பிவிடுகிறது. தந்தையை வெறுத்து வென்றுவரப்போகும் மகன்கள் எல்லாம் மாயையால் நிரம்பிய உளளத்தோடு ஓடுகின்றார்கள், மாயையை கவிழ்க்கத்தொடங்கியப்பின்பு லீலை நிரம்பத்தொடங்குகின்றது.

அன்னை தந்தை கணவன் மனைவி தந்தை மகன் அண்ணன் தம்பி குரு சீடன் என்று ஒன்றாகவே இருக்கும் இரண்டுகள் மாயைில் பிரிந்து லீலையில் இணைகின்றன. இந்த உண்மையைக்காட்ட சாந்தீபனி குருவும் அவரின் மைந்தரும் எத்தனை பெரிய வாழ்க்கை நாடகத்தை நடத்தவேண்டி இருக்கிறது. சாந்தீபனி முனிவரும் அவர் சீடன் கண்ணனும் எத்தனை சொற்கள் பேசி வாழ்ந்துக்காட்டவேண்டி உள்ளது. அற்புதம்ஜெ. சொற்களின் வழியாக வைரங்கள் செய்கின்றீர்கள் நன்றி.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.